சீறிப்பாயும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சிறப்பு பார்வை…
“கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்குடி” – இது தான் வரலாற்றுச் சுவடுகள், உலகின் முதல் கலையும், முதிர்ந்த கலையும், இதர போர் கலைகளின் தாய் கலை சிலம்பக்கலை. சிலம்பம் ஓர் இலக்கியம். இப்படிப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய சிலம்பக்கலையை தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் கடந்த 42 ஆண்டுகளாக கண்ணில் இமை காப்பது போல் காத்து இன்றைய தலைமுறைக்கு இட்டுச்சென்று வெற்றிகரமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் நம் தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப விளையாட்டு குறித்து ஆர்வம் ஏற்படுத்தும் விதமாக சிலம்ப கலையை கட்டிக்காத்து வருகிறது. தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் கடந்து வந்த பாரம்பரிய பாதை குறித்து இளைய தலைமுறைக்கு இட்டுச்செல்லும் சிறப்பு பார்வை.
கடந்த 1980 ஆம் ஆண்டு விளையாட்டுத்துறையில் அங்கீகாரம் பெற சென்னை திருமலைபிள்ளை சாலையில் பி.கே. முத்துராமலிங்கம் தலைவராக கொண்டு துவங்கப்பட்டு 232/80 ஆக பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. இதனை அடுத்து கடந்த 1980 ஆம் ஆண்டு மார்ச் 6,7,8 ஆகிய மூன்று நாட்கள் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் முதல் சிலம்ப போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தமிழனின் வீரக்கலையான சிலம்பம் தன்னுடைய நீண்ட பயணத்தை வெற்றிப்பயணமாக கடந்த 42 ஆவது ஆண்டாக தொடர்ந்து வருகிறது. மேலும் சிலம்ப கலையை மாநில போட்டிகளில் இடம்பெற தமிழக அரசு கடந்த 1984 ஆம் ஆண்டு G.O.Ms. N.244 மற்றும் 1994ஆம் ஆண்டு G.O.Ms. N.244 118 ஆணைகள் பிறப்பித்தது. தற்போது தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் தலைவரும் இந்திய சிலம்பாட்ட சம்மேளத்தின் தலைவருமான முனைவர். மு.ராஜேந்திரன் IAS தலைமையில் சிறந்த ஒழுக்கமான, திறமையான, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் பயிற்சி தந்து பல மாவட்ட, மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர். கடந்த கலைஞர் ஆட்சியின் போது உயர்கல்வியில் சிலம்ப விளையாட்டிற்கு இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் தலைவர் முனைவர் மு.ராஜேந்திரன் IAS சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வெற்றிகரமாக ஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் கோரிக்கையை ஏற்று அரசுத்துறை வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டார். மேலும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் தலைவர் முனைவர் மு.ராஜேந்திரன் IAS தேனி மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும், வேளாண்மைத்துறையில் இயக்குநராகவும், தற்போது கூட்டுறவு சங்கங்கங்களின் தேர்தல் ஆணையராகவும் பணியாற்றிவருகிறார்.
மேலும் இலக்கியம் மற்றும் வரலாற்று ஆய்வில் மிகுந்த ஆர்வமுள்ள இவர், சேரர்,சோழர், செப்பேடுகள், பாண்டியர் கால செப்பேடுகள், வந்தவாசி போர் 250, சட்ட வல்லுநர் திருவள்ளுவர் ‘1801’ ஆகிய நூல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. திறமையான தலைவரின் வழிகாட்டுதலில் கடந்த 42 வது ஆண்டாக சிலம்ப விளையாட்டுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் திடீரென நாகர்கோவிலை சேர்ந்த செல்வராஜ் என்பரால் துவங்கப்பட்ட அமைப்பிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சமூக வளைதளங்களில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்திற்கு தொடரவேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் தலைவர் ரங்கசாமி கூறும் போது, தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் முனைவர். மு.ராஜேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்று லட்சக்கணக்கான மாணவர்களுக்கு சிலம்பக்கலை கற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை சீர்குலைக்கும் விதமாக மேற்படி நாகர்கோவிலை சேர்ந்த செல்வராஜ் மற்றும் சிலர் பொய்யான விளம்பரம் செய்து வருவதாகவும், இதனை யாரும் நம்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் நாகர்கோவில் செல்வராஜ் நடவடிக்கைக்கு திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கே.ரவிச்சந்திரன் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
மேலும் செல்வராஜ் என்பவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் விளையாட்டு போட்டியின் போது தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது தமிழக முதல்வர் அறிவித்த 3% இட ஒதுக்கீடு அறிவிப்பை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட முயல்வதாகவும் அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார். மேலும் செல்வராஜ் நாகர்கோவிலில் 9 விதவிதமான பெயரில் சங்கங்கங்களை பதிவு செய்துள்ளதாகவும், முறையாக எந்த ஒரு போட்டியும் நடத்தாமல் பொதுமக்களை ஏமாற்றும் விதமாக விளம்பரபடுத்திவருவதாகவும், எனவே மேற்படி செல்வராஜ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பக்கலை வளர்ச்சிக்கு பாடுபட்டுவரும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்திற்குத்தான் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சிறப்பாக செயல்பட்டு சிலம்பக்கலை வளர்ச்சிக்கு பாடுபடும் முனைவர் மு.ராஜேந்திரன் IAS தலைமையிலான அமைப்பிற்கு நிரந்தர அங்கீகாரத்தை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
– நமது நிருபர்