தமிழகம்

தொடர் உயிரிழப்புகள்… வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையா…?

வேலூர் அரசு மருத்துவமனையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து இறந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்துவருகிறது. கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 22,961 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 361 பேர் இறந்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்திருந்தார்.

‘“அடுக்கம்பாறையிலுள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஐ.சி.யூ வசதியில் 145 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியில் 360 படுக்கைகளும் இருக்கின்றன. இவற்றுக்குத் தேவையான ஆக்ஸிஜனை செலுத்துவதற்கு ஏற்கெனவே இருந்த 10,000 லிட்டர் சிலிண்டருடன் தற்போது கூடுதலாக 6,000 லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தும் பணியும் நிறைவுற்றுள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பது மாவட்டத்தில் அறவே இல்லை’’ என்றும் ஆட்சியர் சண்முகசுந்தரம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் மூன்று பேர் அடுத்தடுத்து மரணமடைந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா சிறப்பு வார்டில் ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபரீதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை அவசர அவசரமாக உறவினர்களிடம் ஒப்படைக்கும் வேலையும் நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இறந்தவர்களில் இரண்டு பேர் ஆண்கள், ஒருவர் பெண் என்று தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நோயாளிகள் பலரை வேலூரிலுள்ள பென்ட்லேண்ட் மற்றும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மூன்று பேரின் சடலங்கள் வெளியில் அனுப்பப்பட்ட நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த மேலும் சிலரின் உடல்களும் மருத்துவமனைக்குள் இருப்பதாகவும், அந்தத் தகவலை மருத்துவனை நிர்வாகம் மறைக்கப்பார்ப்பதாகவும் புகார் கூறப்படுகிறது.

இறந்தவர்களின் உறவினர்கள் சிலர் கூறுகையில், “ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்தான் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டால் அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்’’ என்றனர்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, “ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி முற்றிலும் தவறானது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து எந்தவொரு கோவிட் நோயாளியும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படவில்லை. இறந்தவர்களில் இரண்டு பேர் கொரோனா நோயாளிகளே கிடையாது. வழக்கமான முறையில்தான் ஆக்ஸிஜன் பைப் லைன் பராமரிப்புப் பணி நடைபெற்றது. அதில், எந்தத் தடையும், பிரச்னையும் இல்லை’’ என்றார்.

தொடர்ந்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மணிவண்ணனிடம் கேட்டபோது, “ஆறு பேர் இறந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் தவறானது. மூன்று பேர் இறந்துள்ளனர். அவர்களும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழக்கவில்லை. கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவிட்டனர். இருந்தாலும், இதயநோய் உள்ளிட்ட பிரச்னைகளால் அவர்கள் இறந்திருக்கலாம். இது தொடர்பாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனிடம் விரிவான அறிக்கை கேட்டிருக்கிறோம். வந்தவுடன் சொல்கிறோம்’’ என்றார்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button