ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்...! பறிமுதல் செய்த ஆர்.கே.நகர் போலீஸ்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா, குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் போதை பொருட்களை கடத்தி வருபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் எழில்நகர், சர்வீஸ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு 5 நபர்கள் ஓரு ஆட்டோவில் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது அருகில் சென்று விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், ஆட்டோவில் ஏற்றிய மூட்டையை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த மணிகண்டன், தங்கபாண்டி, பெ.அழகர்சாமி, பாண்டியன் (எ) தங்கபாண்டியன், ராமர் களஞ்சியம் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1,000 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், விமல், ரெமோ, ஸ்வாகத், எம்,டி.எம், கூலிப் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஐந்துபேரும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.