தமிழகம்

ரஸ்க்கில் நட்டு..! பரிசுப் பொருளுடன் பேரம் பேசிய பிரிட்டானியா!

பிரிட்டானியா ரஸ்க்கில் இரும்பு நட்டு இருப்பதாக புகார் அளித்தவரிடம், விவகாரத்தை வெளியில் சொல்லாமல் இருப்பதற்காக பிரிட்டானியா அதிகாரிகள் பரிசுப் பொருள் கொடுத்து பேரம் பேசிய தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நுஸ்லி என் வாடியாவைத் தலைவராக கொண்டும், வருண் பெர்ரியை மேலாண் இயக்குநராகக் கொண்டும், ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி 3,100 கோடி ரூபாய் லாபத்தில் இயங்கும் பிரிட்டானியா நிறுவனத்தின் தயாரிப்பான டோஸ்ட்டீ ரஸ்க் மீது தான் இந்த புகார் எழுந்துள்ளது.
கரூரைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவர், தனது குழந்தைக்காக வாங்கிய பிரிட்டானியா டோஸ்ட்டீ என்று பெயரிடப்பட்ட ரஸ்க் பாக்கெட்டில் இருந்த ரஸ்க்கில் இரும்பு போல்டில் மாட்டப்படும் நட்டு இருந்ததாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்திருந்தார்.

புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, விவேகானந்தனிடம் இருந்து இரும்பு நட்டு இருந்த ரஸ்க்கையும், மற்ற ரஸ்க்குகளையும் பெற்று பிரிட்டானியா உறையுடன் ஆய்வுக்கு பாளையங்கோட்டை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கரூருக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிரிட்டானியா என்று பெயரிடப்பட்ட ரஸ்க் பாக்கெட்டுகள் அனைத்தும் மதுரையில் இருந்து உற்பத்தி செய்து அனுப்பப்பட்டவை என முதல்கட்ட விசாரணையில் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்யும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு இல்லாமல் ஆய்வு முடிவுகள் கிடைக்கப் பெற்றதும் தவறு நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் பிரிட்டானியா நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.


இதற்கிடையே, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்த விவேகானந்தன், தான் வாங்கி வந்த பிரிட்டானியா என்று பெயரிடப்பட்ட ரஸ்க்கில் நட்டு இருப்பதை கண்டதும், கடந்த மாதம் 16 ந்தேதியே பிரிட்டானியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் குழுவிற்கு புகைப்படத்துடன் மின்னஞ்சலில் புகார் அனுப்பியுள்ளார்.

அவரிடம் பிரிட்டானியா நிறுவனத்தின் ரஸ்க் தானா என்பதை அறிய பேக்கிங் தேதி மற்றும் லாட் எண் போன்றவற்றை கேட்டு பெற்றுள்ளனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து பிரிட்டானியா தரப்பில் மின்னஞ்சலும் அனுப்பி உள்ளனர். தனக்கு இழப்பீடு பெறுவதில் அவர் உறுதியாக இருந்ததால், மின்னஞ்சல் மூலம் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் கைகூடவில்லை.

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், மீடியாக்களிடம் தெரிவிக்க உள்ளதாக விவேகானந்தன் மின்னஞ்சல் ஒன்று அனுப்பி உள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து இரும்பு நட்டு கலந்த ரஸ்க்கை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 7ந்தேதி பிரிட்டானியா நிறுவனத்தின் தரக்கட்டுப்பாடு மேலாளர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளார்.

தங்கள் நிறுவன அருமை பெருமைகளை எல்லாம் கூறிவிட்டு, இரும்பு நட்டு கலந்த ரஸ்க்கை தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே அதனை ஆய்வகத்துக்கு அனுப்பி பல்வேறு கட்ட பரிசோதனைகள் செய்து தங்கள் தயாரிப்புதானா? என்று கண்டறிய முடியும் என்றும் மின்னஞ்சலில் கூறியுள்ளனர்.

ரஸ்க்கைத் தர மறுத்ததால் தங்கள் நிறுவன தயாரிப்பு தானா என்பதை உறுதிபடுத்த முடியவில்லை என்று புதுமையான விளக்கம் தெரிவித்த பிரிட்டானியா நிர்வாகம், தங்கள் நிறுவனம் மீதுள்ள அக்கறை காரணமாக புகார் அளித்த தங்களுக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம், அதனை பெற்றுக் கொண்டு அந்த இரும்பு நட்டு கலந்த ரஸ்க்கை மட்டும் தங்கள் நிறுவன பிரதிநிதியிடம் கொடுத்தனுப்பும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரிட்டானியா நிறுவனத்தில் இருந்து தன்னை சந்திக்க வந்த இருவரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதோடு, பரிசுப் பொருளை தன்னிடம் கொடுத்ததாகவும், வாங்க மறுத்த நிலையிலும் பரிசை வீட்டு மேஜையில் வைத்து விட்டு சென்றுவிட்டதாகவும், அந்த பரிசுப் பொருளை இதுவரை பிரித்துக்கூட பார்க்கவில்லை என்றும் கூறுகிறார் விவேகானந்தன்.

தான் புகார் அளித்த லாட் எண்களை கொண்ட ரஸ்க்குகள் அனைத்தையும் கடைகளில் இருந்து அப்புறப்படுத்துவதற்காகவே ஒரு மாதமாக இழுத்தடித்தார்களோ ? என்ற சந்தேகம் எழுவதாகவும் விவேகானந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரிட்டானியா நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் கேட்க தொடர்பு கொண்ட போது அவர்கள் அளித்துள்ள தொலைபேசி எண் உபயோகத்தில் இல்லை என்பது தெரியவந்தது.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button