காதல் திருமணம் செய்த இளைஞரின் தலை துண்டிப்பு..!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் நம்பிராஜன். இவரும் மறுகால்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரது மகள் வான்மதியும் தீவிரமாக காதலித்து வந்தனர். ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருக்காது என கருதிய நிலையில் வான்மதியின் தந்தை உள்ளூரில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவரது பெற்றோர் இருவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 2 மாதத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, கோவிலில் திருமணம் செய்து கொண்டு இருவரும் நெல்லை டவுனில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்தனர்.
காதல் திருமணத்திற்கு நம்பிராஜனின் தந்தை அருணாச்சலம் ஆதரவாக இருந்ததோடு நெல்லையில் தங்குவதற்கு அவரே வீடு பார்த்து கொடுத்துள்ளார். மேலும் மகன் காதல் மனைவியுடன் குடித்தனம் நடத்த தேவையான பண உதவியும் செய்து வந்துள்ளார்.

கடந்த 25 ந்தேதி இரவு நம்பிராஜனின் நண்பர் முத்துப்பாண்டி என்பவர் ஊரில் இருந்து காதல் தம்பதியை சந்திக்க வந்துள்ளார். மேலும் வெளியில் சென்று வரலாம் என்று நம்பிராஜனை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் நம்பிராஜன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதையடுத்து அவரது தந்தை அருணாச்சாலத்திற்கு தகவல் தெரிவித்த மனைவி வான்மதி. காவல் நிலையத்தில் புகார் அளித்தார் தனது கணவனை காணாமல் பதறிப்போன வான்மதியும் போலீசாருடன் சேர்ந்து நம்பிராஜனை தேடியுள்ளார்.
இந்த நிலையில் குறுக்குத்துறை ரயில்வே கேட்டருகே தண்டவாளத்தில் நம்பிராஜன் தலைவேறு, உடல் வேறாக துண்டாக வெட்டிக் முகம் சிதைத்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தங்கள் வீட்டு பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடியதால் ஏற்பட்ட அவமானத்தை துடைப்பதற்காக வான்மதியின் சகோதர் செல்லச்சாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் காதலன் நம்பிராஜனை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
நாங்குநேரியில் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வான்மதியின் அண்ணன் செல்லச்சாமியை நண்பர்கள் சிலர், தங்கையை தூக்கிட்டு போனவனை ஒன்றுமே செய்யாமல் வேடிக்கை பார்ப்பதாக கேலி செய்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து செல்லச்சாமி, தனது தங்கையின் மனதை கெடுத்து காதல் வலையில் வீழ்த்தி வீட்டில் இருந்து அழைத்து சென்ற காதலன் நம்பிராஜனை தீர்த்துக்கட்ட 10க்கும் மேற்பட்டவர்களுடன் நெல்லைக்கு வந்து இருட்டும் வரை காத்திருந்ததாக கூறப்படுகின்றது.
முன் கூட்டியே ஊரில் இருந்து அழைத்து வந்த நம்பிராஜனின் நண்பன் முத்துப்பாண்டி மூலம் நம்பிராஜனை மது குடிக்க குறுக்குக்குதுறை ரயில்வே கேட் பகுதிக்கு ஏமாற்றி அழைத்து வர கூறியுள்ளனர்.
அதன்படி திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் நம்பிராஜன் வீட்டிற்கு சென்ற முத்துப்பாண்டி அவரை மது குடிக்க அழைத்துள்ளான். மனைவியின் எச்சரிக்கையையும் மீறி நண்பன் மீது கொண்ட நம்பிக்கையால் நம்பிராஜன் புறப்பட்டு சென்றுள்ளார்.
டாஸ்மாக்கில் மது வாங்கிய நம்பிராஜன் முத்துப்பாண்டி சுட்டிக்காட்டிய குறுக்குத்துறை ரயில்வே கேட் பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகின்றது. அப்போது அங்கு புதரில் பதுங்கியிருந்த செல்லச்சாமியின் கும்பல் பாய்ந்து சென்று நம்பிராஜனை சரமாரியாக வெட்டி கொலை செய்து, தலையை துண்டாக வெட்டி ரயிலில் அடிபட்டு இறந்தது போல இருக்க வேண்டும் என்பதற்காக தலை வேறு உடல் வேறாக தூக்கி வீசி விட்டு தப்பி உள்ளது என்று குற்றஞ்சாட்டுகின்றனர் காவல்துறையினர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
இங்கே காதலுக்கு சாதி, மதம் மட்டுமே தடையில்லை, காதல் ஜோடி ஒரே சாதி என்றாலும் ஏழை, பணக்காரன், ஆள்பலம், அதிகார பலம் எல்லாமே கவுரவமாக பார்க்கப்படுகின்றது. அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் தங்கள் வீட்டு பெண் காதலனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டால், தங்களுக்கு சமூகத்தில் பெருத்த அவமானம் நேர்ந்துவிட்டதாக கருதி இந்த கொடூர செயலில் இறங்குகின்றனர் என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.
- ஏ.கே.ஆர்