புதையல் ஆசையில் கிணற்றில் குதித்து பேய் கதை சொன்ன இளைஞர்..!
கன்னியாகுமரி மாவட்டம் ஐரேணிபுரம் அருகே அயனிவிளையில் நாகதேவி கோயில் ஒன்று உள்ளது, இந்த கோயில் கிணற்றில் இருந்து சத்தம் கேட்டதை அடுத்து அர்ச்சகர் அங்கு சென்று பார்த்துள்ளார்.
மேல் பகுதியில் யாரும் தவறி விழுந்து விடகூடாது என்று கம்பி தடுப்பு அமைக்கப்பட்டிருந்த கிணற்றின் உள்ளே ஒரு அடி தண்ணீரில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டு காப்பாற்றும் படி சத்தமிட்டுக் கொண்டிருந்தார்.
இந்த தகவல் ஊர் மக்களுக்கு தெரியவர, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழித்துறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அரை மணி நேரம் போராடி வலை கட்டி கிணற்றில் இருந்து சிறிய காயத்துடன் அவரை மீட்டனர்.
விசாரணையில் அந்த இளைஞர் அயனிவிளை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான ஸ்டீபன் என்பது தெரியவந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது பேய் ஒன்று விரட்டுவதாக கனவு கண்டதாகவும், இதில் பயந்து போய் அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்ததாகவும், மேலும் மூன்று பேய்கள் தன்னை விரட்டுவது போல் உணர்ந்ததால் பாதுகாப்பு தேடி நாகதேவி கோவில் கிணற்றில் குதித்ததாகவும் தெரிவித்துள்ளார் ஸ்டீபன்.
ஸ்டீபன் கூறிய பேய்கதையில் புதுக்கடை போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதன்படி, வீட்டில் இருந்தே உள்ளாடையுடன் வீட்டில் இருந்து ஸ்டீபன் ஓடி வந்தாரா ? அப்படி ஓடி வந்தவர், கம்பிகளால் மூடப்பட்டிருந்த கோவில் கிணற்றுக்குள் எப்படி குதிக்க முடிந்தது ? என்ற கேள்விக்கு முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளான் ஸ்டீபன்.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக நாகதேவி கிணற்றில் புதையல் இருப்பதாக அந்த ஊரில் ஒரு வதந்தி பரவியுள்ளது. இதனை உண்மை என்று நம்பி கூட்டாளிகள் துணையுடன் ஸ்டீபன் உள்ளே இறங்கி இருக்கலாம் என்றும் அவரை மீண்டும் கரையேற்ற முடியாமல் கூட்டாளிகள் அப்படியே கிணற்றில் விட்டு விட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், காலில் லேசான சிராய்ப்பு காயத்துடன் காணப்பட்ட ஸ்டீபனை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதையல் ஆசையில் கிணற்றுக்குள் குதித்துவிட்டு பேய்க் கதை விடும் ஸ்டீபனை, சிகிச்சைக்கு பின்னர் சிறப்பு கவனிப்புடன் விசாரித்தால், உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் காவல்துறையினர்.