தமிழகம்

விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள்.. கண்டுகொள்ளாத சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் இருநூறு வார்டுகள் உள்ளது. இந்த பகுதிகளில் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டுமானால் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திலோ (CMDA) அல்லது சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்திலோ பிளான் அப்ரூவல் வாங்கிய பிறகுதான் கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அரசின் விதிகளை மதிக்காமல் பணபலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் சிலர் விதிகளை மீறி கட்டிடங்களை கட்டி இருக்கிறார்கள்.

தினேஷ்குமார் கட்டிடங்கள்

சென்னை மாநகராட்சி மண்டலம் -3 மாதவரம் அலுவலக நிர்வாகத்திற்கு உட்பட்ட கதிர்வேடு பகுதியில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வணிகரீதியிலான மிகப் பிரம்மாண்டமான கட்டிடங்கள் கட்டி பிக் பேஸ்கட் (Big Basket) நிறுவனத்திற்கு இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் வாடகைக்கு விட்டு அரசை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். ஆனால் பல வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த கட்டிடத்திற்கு சமீபத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிளான் அப்ரூவல் வழங்கி இருக்கிறார்கள்.

ஏற்கனவே கட்டிடங்கள் கட்டப்பட்டு நான்கு வருடத்திற்கு முன்பே வணிக ரீதியிலான தாழ்வழுத்த மின்இணைப்பு வழங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள கட்டிடத்திற்கு பிளான் அப்ரூவல் எதன் அடிப்படையில் வழங்கினார்கள்?

இந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் தினேஷ்குமார், அவரது மனைவி சந்திரிகா. இவர்கள் இருவரது பெயரிலும்தான் இந்த இடத்திற்கு கூட்டுப்பட்டாவாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. சந்திரிகா பெயரில் தனியாக பட்டா வழங்க மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தும் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டிடத்தின் அருகிலேயே மிகப்பிரம்மாண்டமான கட்டிடம் கட்டுவதற்கு சந்திரிகா பெயரில் பிளான் அப்ரூவல் மாநகராட்சி அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டிடம் கட்டப்பட்டு வாடகை வசூல் செய்யப்பட்ட கட்டிடத்திற்கு இருவர் பெயரிலும் கூட்டுப்பட்டா இருப்பதால் இருவர் பெயரிலும் முறைகேடாக பிளான் அப்ரூவல் கொடுத்துள்ளார்கள். ஆனால் சந்திரிகா பெயரில் பட்டா தனியாக இல்லாத போது அவரது பெயருக்கு எதன் அடிப்படையில் பிளான் அப்ரூவல் வழங்கினார்கள்.?

மேற்கண்ட முறைகேடுகள் சம்பந்தமாக சென்னை மாநகராட்சி ஆணையாளர், தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், சென்னை மாநகராட்சி மண்டலம் -3, மண்டல அதிகாரி, செயற்பொறியாளர் ஆகியோரிடம் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை முறைகேடாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சென்னை மாநகராட்சியில் நடக்கும் முறைகேடுகளை தடுக்குமாறு மாநகராட்சி ஆணையரிடம் கொடுக்கப்படும் புகார் கடிதங்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக நமக்கு தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. புகார் கொடுப்பவர்களுக்கு எந்த தகவலும் தெரிவிப்பது இல்லை. மாநகராட்சி அதிகாரி எப்படியோ அவரைப் போலவே அவருக்கு கீழ்பணிபுரியும் அதிகாரிகளும், புகார் கடிதங்களுக்கு பதில் தருவதும் இல்லை. நடவடிக்கை எடுப்பதும் இல்லை. மாநகராட்சி ஆணையர் மீது பல்வேறு புகார்கள் இருந்தும் தனக்கு இருக்கும் அரசியல் தொடர்பால் இந்தப் பதவியில் இருந்து பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாக மாநகராட்சி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ராஜீவ் படேலுக்குச் சொந்தமான கட்டிடம்

இதேபகுதியில் ராஜீவ் படேலுக்குச் சொந்தமான பிரம்மாண்டமான கட்டிடம் பல வருடங்களாக சென்னை மாநகராட்சி மண்டலம் -3 ன் அதிகாரிகள் துணையோடு செயல்பட்டு வருகிறது. முறையாக பிளான் அப்ரூவல் சென்னை மாநகராட்சியில் வாங்கி கட்டிடம் கட்டினால் அரசுக்குச் செலுத்த வேண்டிய பணம் அரசின் கருவூலத்திற்கு சேரும். ஆனால் அரசை ஏமாற்றி கட்டிடங்களை கட்டி வாடகை வசூல் செய்யும் நபர்களிடம் அரசு அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேடாக கட்டப்பட்ட கட்டிடங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதால் அரசுக்குச் சேர வேண்டிய பணம் வராமல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய இரண்டு அலுவலகத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த நான்கு மாதங்களாக கிட்டத்தட்ட ஏராளமான புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை பார்க்கும்போது மிகப்பெரும் பணம் கைமாறியிருப்பதாக தெரிய வருகிறது. இனிமேலும் தாமதப்படுத்தாமல் இந்த கட்டிடத்தின் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் தயாராகி வருகிறார்கள் புகார் கொடுத்தவர்கள்..

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button