காற்றாலை பெயரில் பல கோடி மோசடி..!
காற்றாலை அமைப்பதற்கு கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில், சென்னை எஸ்பிஐ வங்கி தலைமை மேலாளர்கள் 4 பேர் உட்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
தேனியில் 7.8 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகளை அமைப்பதற்காக சென்னையைச் சேர்ந்த கனெக்ட் வின்ட் நிறுவனம் , ட்ரிஷே எரிசக்தி நிறுவனம், ஹைதராபாத் பிபிஎஸ் என்விரோ பவர்,மற்றும் க்ளின்சுவிட்ச் இந்தியா நிறுவனம் ஆகியன க்ரீம்ஸ் சாலை ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாதில் 2014ஆம் ஆண்டு 35 கோடி ரூபாய் கடன் வாங்கின.
ஆனால் திட்டமிட்டபடி 13 இடங்களில் காற்றாலை அமைப்பதற்குப் பதிலாக 7 இடங்களில் மட்டுமே காற்றாலை அமைக்கப்பட்டதாகத் கூறப்படுகிறது. அத்துடன் வங்கி நடத்திய விசாரணையில், கடனை மோசடியாக வேறு தொழிலுக்கு பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் ஐதராபாத் எஸ்.பி.ஐ.உடன் இணைக்கப்பட்ட பிறகு இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சென்னை மண்டல மேலாளர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்தார்.
இதை அடுத்து, வங்கி மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக, கிரீம்ஸ் சாலை ஸ்டேட் பேங்க் கிளையில் பணியாற்றிய தலைமை மேலாளர்கள் மௌலி சங்கர், ரவிக்குமார், கல்யாணி சுப்பிரமணியம், ஸ்ரீனிவாச ராவ், பிவிஎஸ் சாஸ்திரி, மோசடியில் ஈடுபட்ட 4 நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குனர்கள் உட்பட 18 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
இதேபோல் மேலும் பல நிறுவனங்கள் செய்த மோசடி பற்றிய செய்திகள் விரைவில் வெளிச்சத்திற்கு வர இருக்கிறது. சென்னை செனாய் நகரில் இயங்கி வரும் காற்றாலை அமைக்கும் நிறுவனம் இதேபோல் தனது சொத்து மதிப்பை விட பல மடங்கு பணத்தை வங்கிகளில் இருந்து கடனாக வாங்கி இருக்கிறது. அந்த நிறுவனத்தின் அலுவலக முகவரியிலேயே 63 நிறுவனங்கள் (அதாவது செல் கம்பெனி) தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் சிலரது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியிலேயே பதிவு செய்து இருக்கிறார்கள்.
நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனங்கள் வாடகைக்கு கொடுத்த பல வாகன உரிமையாளர்கள் தங்களுக்கு வர வேண்டிய வாடகைப் பணத்தைப் பெறுவதற்காக பல மாதங்களாக இந்த நிறுவனத்திற்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் யாரையும் இந்த நிறுவனத்தின் எம்.டி, ஜெஎம்டி இருவரும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கிறார்கள்.
இந்த நிறுவனத்தின் அனைத்து விபரங்களையம் சேகரிக்கும் பணி நமது குழுவினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் செல் கம்பெனி மூலம் பல கோடி பரிவர்த்தனை செய்து மோசடி செய்திருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறது. தங்களது சொத்து மதிப்பு (தோராயமாக) 250 கோடி இருக்கும்போது 1200 கோடி வங்கிகளில் கடன் வாங்கி இருப்பதாகவும் தெரிகிறது.
இவர்கள் ஒரே முகவரியில் 63 செல் கம்பெனிகளை துவங்கி மோசடியில் ஈடுபட்டார்களா? இந்த நிறுவனத்தின் எம்.டி, ஜெ.எம்.டி யின் நிலைப்பாடு என்ன? வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல இருக்கிறார்களா? என்ற பல்வேறு சந்தேகங்கள் பற்றிய விரிவான செய்தி அடுத்த இதழில் பார்க்கலாம்.
& சூரியன்