தமிழகம்

தொடரும் ஆணவப் படுகொலைகள்: சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு

தமிழகத்தில் ஆணவக்கொலைகள் இன்றும் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஜாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட ஓசூரை சேர்ந்த இளம் தம்பதிகள், கர்நாடகாவில் காவிரியாற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் தந்தை உள்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த வெங்கடாபுரத்தைச் சேர்ந்த 25 வயதான நந்தீஷ்சும் அதே கிராமத்தை சேர்ந்த வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த 20 வயதான சுவாதியும், கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்னர். இவர்களின் காதலுக்கு ஜாதியை காரணம் காட்டி பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நந்தீஷும், சுவாதியும் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஓசூரில் இருவரும் தனிவீடு எடுத்து வசித்துவந்தனர். இந்த நிலையில், இருவரும் கடந்த 10-ம் தேதி முதல் காணாமல்போயுள்ளனர். இதை தொடர்ந்து நந்தீஷின் சகோதரர் சங்கர், ஓசூர் நகர் காவல்நிலையத்தில் கடந்த 14-ம் தேதி புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பெலகவாடி காவிரி ஆற்றில் இருந்து கடந்த 13-ம் தேதி அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர். அவர் அணிந்திருந்த பனியனில், ஜெய்பீம் என்றும், சூடகொண்டபள்ளி என்றும் எழுதியிருந்தது.
இந்த நிலையில் 15-ம் தேதியன்றும், அதே இடத்தில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கிடைத்துள்ளது. அந்த சடலத்தையும் மீட்ட பெலகவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இருசடலங்கள் மீட்கப்பட்ட தகவல் ஓசூர் போலீசாருக்கு கிடைத்ததும், அந்த படங்களை காணமால் போன நந்தீஷ் சகோதரர் சங்கரிடம் காட்டியுள்ளனர். படங்களை பார்த்த சங்கர் இறந்தது தனது அண்ணன் நந்தீஷ் மற்றும் அண்ணி சுவாதி என உறுதிப்படுத்தினார். இவர்கள் இருவரையும் பெண் வீட்டார் ஆணவக்கொலை செய்து ஆற்றில் வீசி இருக்கலாம் என்று அவர் சந்தேகம் எழுப்பினார்.
சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேசன், உறவினர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என சங்கர் போலீசாரிடம் தெரிவித்தார். மூவர் மீதும் சந்தேகம் கொண்ட கர்நாடாக போலீசார், தமிழக போலீசார் உதவியோடு, அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஓசூரில் தங்கியிருந்த நந்தீஷ் மற்றும் சுவாதியை கடந்த 10-ம் தேதி காரில் கடத்தியதாக கூறியுள்ளனர். காரில் செல்லும் போது அவர்கள் இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். பின்னர் இருவரின் சடலங்களை கல்லில் கட்டி மாண்டியா மாவட்டம் பெலகவாடி காவிரி ஆற்றியல் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனிடையே ஆணவக்கொலை செய்த பெண்ணின் தந்தை உள்பட 3 பேருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஓசூரில் ஆர்ப்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மற்றும் ஆணவப்படுகொலையை எதிர்த்து குரல் கொடுக்கும் கௌசல்யா ஆகிய மூவரும் பாதிக்கப்பட்ட நந்திஷ் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்றனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “இந்தக் கொலை மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற கொலைகள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க ஆவணப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். தூக்குத் தண்டனையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இந்த விஷயத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மகனை இழந்து வாடும் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் “தமிழ்ச் சமூகத்தை ஜாதி என்ற கட்டுக்குள் கொண்டு வருவது வேதனை அளிக்கிறது. ஏதோ ஒரு கொலை என்று இந்த ஆணவப் படுகொலைகளை நாம் கடந்து செல்ல முடியாது. ஆனால் இதை அப்படித்தான் கடந்து சென்று விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது.
ஆடு, மாடு, நாய் போன்றவற்றை தன்னுடைய பிள்ளையாக நினைத்து வளர்க்கும் மனிதர்கள் அவர்களோடு வாழ்பவர்களை ஜாதி பார்ப்பது ஏன்” எனக் கேள்வி எழுப்பினார். இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் “அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை. மக்களைதான் நம்பி உள்ளோம். மக்கள்தான் ஜல்லிக்கட்டுக்காகவும் காவேரி நீராகவும் போராட்டம் கண்டு வெற்றி பெற்றுள்ளார்கள். கடைசியாக மக்களை நம்பி உள்ளோம். அவர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி போராட வேண்டும். இல்லை எனில் வீசும் காற்றில் விஷம் பரவத்தான் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர்கள் வெளிநாட்டுப் பெண்களை காதலித்து தமிழக கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் வேளையில், ஜாதியை காரணம் காட்டி, இப்படி தொடர் ஆணவக்கொலை நடப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதை தடுக்க கொலையாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலிறுத்தியுள்ளனர்.

  • உதுமான் அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button