தமிழகம்

பிளாஸ்டிக்கை விட பேராபத்தை தரக்கூடிய இ-வேஸ்ட்..! உலகளவில் இந்தியா 4வது இடம்

மண்ணை மாசடையச் செய்யும் பிளாஸ்டிக்கை விட பேராபத்தை தரக்கூடியதாக இ-வேஸ்ட் உருவாகியுள்ளது. இ-வேஸ்டை உருவாக்குவதில் உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா… இந்திய அளவில் இரண்டாவது உள்ளது தமிழகம்…

நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டி.வி, ஏசி போன்றவைகளின் தேவையற்ற, பயனற்ற மற்றும் பழுதான உதிரிபாகங்களை- அதாவது எலக்ட்ரிக்கல்… எலக்ட்ரானிக் பொருட்களின் உதிரி பாகங்களின் கழிவுகளைத்தான் இ-வேஸ்ட் என்கிறோம்.

பிளாஸ்டிக் கழிவால் ஏற்படும் பாதிப்பு அதிகம் என்றால், அதைவிட 60 முதல் 100 சதவீதம் வரை இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும், தீங்கு தரக் கூடிய லெட், கேட்மியம், மெர்குரி போன்ற ரசாயனங்களால் தயாரிக்கப்படுபவை எலக்ட்ரானிக் பொருட்கள்…

தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு மூன்று முதல் நான்கு டன் வரையிலான இ-வேஸ்ட் உருவாவதாகக் கூறப்படுகிறது. வரும் காலங்களில் புவி வெப்பமயமாவதையும், கடலில் நீர்மட்டம் உயர்வதையும் தடுக்க முடியாது என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்..

கம்ப்யூட்டர் உதிரி பாகங்களில் தேவையானவற்றைப் பிரித்தெடுக்க ரசாயனங்களை பயன்படுத்துவதாகவும், காற்றுமாசு ஏற்பட இதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இ-வேஸ்ட்களை எரித்தாலும், மண்ணில் புதைத்தாலும் 95 சதவீத மாசு ஏற்படும் என்றும், இதுகுறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தமிழகத்தில் இதுபோன்ற இ-வேஸ்ட்களை சேகரித்து மறு சுழற்சி செய்யவும், பாதுகாப்பாக அழிப்பதற்கும் இரண்டு நிறுவனங்கள் இருந்தாலும், இவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நினைத்த மாத்திரத்தில் மின்னணு மற்றும் மின்சாதனப் பொருட்களை வாங்காமல், தேவைக்கு ஏற்ப பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலம் இ-வேஸ்ட் உருவாவதை கட்டுப்படுத்த முடியும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணரவேண்டியது காலத்தின் கட்டாயம்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button