வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் : 17 உயிர்கள் பரிதாப பலி!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஏ.டி காலனியில் சக்கரவர்த்தி ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணி என்பவரது பங்களா வீடு உள்ளது. இந்த வீட்டின் கீழ் பக்கத்தில் சாய்தளமான அமைப்பில் 50க்கும் மேற்பட்ட ஏழை கூலி தொழிலாளர்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர்தான் கிட்டு என்கிற சிவசுப்ரமணியம். மாற்றுத் திறனாளியான இவரது பூர்வீகம் அவினாசி எனக் கூறப்படுகிறது. ஜவுளித்தொழில் மட்டுமல்லாமல் ஏலச்சீட்டு, ஹோட்டல்கள் உட்பட இன்னும் பிற தொழில்களைச் செய்துவருகிறார்.
இவரது வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் அருந்ததிய சமூக மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் வீடு வாங்கியதும் தடுப்புச்சுவர் எழுப்பியுள்ளார். இதன்காரணமாக, அந்தப் பகுதி மக்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகப் பெரிய கற்களை கொண்டு மதில் சுவர் எழுப்பியுள்ளார்.
கடந்த சில தினங்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை பெய்ததால் ஏற்கனவே பலமில்லாமல் நின்ற அந்த கருங்கல் சுவர் மழை நீர் இறங்கி ஊறியதால் அதிகாலை நேரத்தில் ஒட்டு மொத்தமாக தாழ்வான பகுதிக்குள் சரிந்து விழுந்தது.
இதில் சுடுமண் ஓடால் வேயப்பட்ட அந்த வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 6 குழந்தைகள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், தமிழ்நாடு மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் இறங்கினர். 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இந்த சுவர் கட்டிய ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. போலீசார் அவர்களை விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், “17 பேரின் உயிரிழப்புகள் கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை. தடியடித் தாண்டவமாடி அராஜகம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். கோவை மேட்டுப்பாளையத்தில் 17 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளதை சம்பவம் என்றோ, விபத்து என்றோ மட்டும் சொல்லிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு, 17 உயிர்கள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனிக்கு அருகில் தனியார் ஒருவர், தனது வீட்டைச் சுற்றிலும் 20 அடி உயரத்தில் 80 அடி நீளத்தில் சுற்றுச்சுவர் ஒன்றைக் கட்டி வைத்துள்ளார். இந்தச் சுவர், உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் அந்த வீட்டின் உரிமையாளரிடமே சொல்லி இருக்கிறார்கள். அவர் ஆவண செய்யாத நிலையில், அரசு அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்துள்ளார்கள்.
விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தச் சுவரை அகற்ற மாவட்ட நிர்வாகமோ, அதிகாரிகளோ, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரோ, நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தச் சுவரின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காவல்துறை, போராடிய உறவினர்கள் மீது வெறிகொண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறது.
“வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதை”ப் போல, எதற்காக இத்தகைய தாக்குதலை காவல்துறை நடத்த வேண்டும்? திட்டமிட்டு பொதுமக்களை கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளார்கள். அதுவும் மருத்துவமனை வளாகத்திலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் எத்தகைய தாக்குதல்களும் நடத்தக் கூடாது என்ற தார்மீக நெறிமுறைகளை எல்லாம் மீறி இத்தாக்குதல் நடந்துள்ளது.
மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனி மக்களைத் திட்டமிட்டுப் பழிவாங்கும் நோக்கம் அதிகாரிகளுக்கு இருந்துள்ளது. இதற்குக் காரணமான அதிகாரிகள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த 17 பேரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அப்பகுதி மக்களுக்கு தரமான வீடுகள் இலவசமாகக் கட்டித் தரப்பட வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் கே.எம்.சரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுவர் விழுந்து அருந்ததிய சமூகத்தை சார்ந்த பெண்கள், குழந்தைகள் என 17பேர் அநியாயமாக இறந்த செய்தி கேட்டு நியாயம் கேட்க சென்ற தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட ஏராளமான பேரை கொடூரமான முறையில் காவல்துறை தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்துள்ளது.
17பேர் இறப்பிற்கு காரணமான சுவர் உரிமையாளரை தகுந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் பாதி க்கப்பட்டவர்களுக்காக நியாயம் கேட்க சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. தமிழக அரசு இறந்தவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். நியாயம் கேட்க சென்ற நாகை திருவள்ளுவன், தோழர் வெண்மணி உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பலியானவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 4 லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதையடுத்து 17 பேரின் சடலங்களும் பிணக்கூறாய்வு முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலியானவர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பலியானவர்களின் உறவினருக்கு ஆறுதல் கூறினார்.
& சாகுல்ஹமீது