தனியார் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது !
கோவை, வடவள்ளி அருகே டெல்லி பப்ளிக் ஸ்கூல் என்கிற பெயரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800 – க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நூலக பொறுப்பு ஆசிரியராக பணிபுரியும் பால்ராஜ் என்பவர், அந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பால்ராஜின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். ஆசிரியர் பால்ராஜ் பள்ளி வளாகத்திற்குள் மேலும் இரண்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் ஆசிரியர் பால்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனிடையே மாநகர காவல் துறை அதிகாரிகளும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆர் எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ், பள்ளி நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜை போலீஸார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் முதலில் பள்ளியின் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் மாணவிகளின் புகார் தொடர்பாக, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. அதன்பிறகுதான் மாணவிகளுக்கு ஆசிரியரின் பாலியல் தொல்லை தொடர்பான புகார், மாவட்ட கல்வி அதிகாரிக்குச் சென்றுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி உடனடியாக பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிருந்தா மற்றும் அதிகாரிகள் குழுவினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் நூலக பொறுப்பாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தின் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நூலக பொறுப்பு ஆசிரியர் பால்ராஜை கைது செய்துள்ளனர்.
மேலும் பாலியல் புகார் தொடர்பாக போலீஸாருக்கு முறையாக தகவல் அளிக்காத பள்ளி முதல்வர் மகேஸ்வரி, நிர்வாகி தண்டபாணி ஆகியோர் மீதும் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.