தொடரும் காவலர் தற்கொலை: என்ன செய்யப்போகிறார்கள் உயரதிகாரிகள்?
மன உளைச்சலால் காவலர்கள் தற்கொலை செய்துக்கொள்வது தொடர்கிறது, காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதால், மனம் உடைந்த திருச்சி பெண் சிறை வார்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, வெளியகரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் க.மணிகண்டன். பிஎஸ்சி பட்டதாரி. திருமணமாகவில்லை. இவரது தந்தை கண்ணன் பள்ளிப்பட்டில் தனியார் ஒப்பந்ததாரராக பணி செய்து வருகிறார்.
மணிகண்டனுக்கு 2 சகோதரிகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில், மணிகண்டன் தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக 2017 நவம்பர் 1-ம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை ஆவடி வீராபுரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3-ம் அணியில் இருந்துள்ளார். இவர் தனது 27-வது பிறந்த நாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் லூத்திரல் கார்டன் காவலர் குடியிருப்பில் உள்ள தமிழகக் காவல் துறையின் சிறப்புக் காவல்படை தலைமை அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். காலை 5 மணி முதல் 8 மணி வரை அவருக்கு பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. காலை 5.15 மணிக்கு பணியிலிருந்த இடத்திலிருந்து துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற போலீஸார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, மணிகண்டன் தலையில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது.
உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து கீழ்பாக்கம் போலீஸாரும் சம்பவ இடம் விரைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘மணிகண்டன் துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டாவை நிரப்பி தனக்குத்தானே வலது பக்க காதில் வைத்துசுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
மணிகண்டன் பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டாரா, உயர் அதிகாரிகள் ஏதேனும் டார்ச்சர் கொடுத்தனரா, குடும்ப பிரச்சினை ஏதேனும் காரணமா, பிறந்த நாளுக்காக விடுப்பு கேட்டு அது கிடைக்காத விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்தாரா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் கீழ்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் திருச்சி பெண்கள் சிறை வார்டன் இளம் காவலர் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி.
ஆயுதப்படை காவலரான இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் இரவு பணிக்கு செல்ல வேண்டியவர் பணிக்கு வராமல் தகவலும் தராததால் சக காவலர்கள் அவருக்கு போன் செய்துள்ளனர்.
ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறைக்கு சக காவலர்கள், அவரது அறைக்கதவு பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரம் தட்டியும் திறக்காததால் அவர்கள், திருச்சி கே.கே.நகர் போலீஸாருக்கு தகவல் சொன்னார்கள். அங்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, செந்தமிழ் செல்வி பெட்ரூமில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது தெரியவந்தது.
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தமிழ்செல்விக்கு திருச்சி மத்திய சிறையில் பணியாற்றி வரும் சக காவலர் ஒருவரை காதலித்துள்ளார். இருவருமே நெருங்கி பழகியுள்ளனர்.
திடீரென மனஸ்தாபம் காரணமாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பிரிவு அதிகமாகி அவரது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, வரும் 6-ம் தேதி திருமணம் நடக்க உள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மனம் உடைந்த செந்தமிழ்ச்செல்வி தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள்.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் இளம் காவலர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திராணியற்று தற்கொலை முடிவை நாடுகிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்களா தமிழக ஆட்சியாளர்களும், காவல்துறை உயரதிகாரிகளும் பொறுத்திருந்து பார்ப்போம்.