தமிழகம்

அரசு விழாவை புறக்கணித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்..!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019-2021” திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவிற்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமை வகித்தார்.

இவ்விழாவில், பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனுக்காக சத்துணவு திட்டத்தை மறைந்த முதல்வர் எம்ஜிஆர் செயல்படுத்தினார். எம்ஜிஆர் வழியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் உட்பட 14 விதமான மாணாக்கர் நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அந்த வகையில், பள்ளிக்கல்வித் துறையின் கீழுள்ள பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் சார்பாக சிறப்பு எழுத்தறிவு திட்டம் 2019-&2021 துவங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள், வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில், கல்வித்துறை சார்ந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு 8 குறியீடுகளை இலக்காக கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்குறியீடுகளில் ஒன்றான 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் எழுத்தறிவு சதவிகிதத்தை மேம்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கும் பொருட்டு இத்திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 67,968 கல்வி பயிலாதோர்களுக்கு, அடிப்படை எண்ணறிவும் எழுத்தறிவும் வழங்கப்பட்டு கற்றோர்களாக முன்னேற்றம் அடைய பயிற்சி அளித்திடும் விதமாக திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பயிற்சியானது 2019 முதல் 2021 வரை இரண்டு ஆண்டு காலத்தில் 4 கட்டங்களாக தலா 6 மாத கால பயிற்சியாக செயல்படுத்தப்படவுள்ளது. 6 மாத பயிற்சிக்கு பிறகு தேர்வு நடத்தப்பட்டு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக அடிப்படைக் கல்விச் சான்று அனைவருக்கும் வழங்கப்படும். அதன்படி, இத்திட்டத்தை ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுத்திட தமிழக அரசு மூலம் ரூ.6.23 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்புத் திட்டமான விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 54.47 லட்சம் மாணவ, மாணவியருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 92,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா காலணிகளுக்கு மாற்றாக ஷூ மற்றும் ஷாக்ஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
இராமநாதபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட கீழக்கரையில் நடைபெற்ற அரசு விழாவில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், மணிகண்டன் தனது அமைச்சர் பதவி பறிபோனதிலிருந்து பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அப்படி கலந்து கொண்டாலும் தற்போது மாவட்டச் செயலாளரின் செல்வாக்கு உயர்ந்திருப்பதால் மணிகண்டனை அதிமுகவினர் யாரும் கண்டுகொள்வதில்லை. இதேபோல் பசும்பொன்னில் நடைபெற்ற அரசு விழாவில் எடப்பாடியை வரவேற்க தனது ஆதரவாளர்களுடன் காத்திருந்தார். அப்போது முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகரனின் தந்தையுமான நிறைகுளத்தான் மணிகண்டனின் அருகே நின்றிருந்தார். மணிகண்டன் ஆதரவாளர்கள் நிறைகுளத்தானை தள்ளிவிட இதனை பார்த்த சதன்பிரபாகர் பாய்ந்து ஓட அந்த இடத்தில் பதற்றமான சூழல் உருவானது. அமைதியாக இருக்கும் இடத்தில் சாதிக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் மணிகண்டனுடன் இருந்தவர்கள் செயல்பட்டதாக எடப்பாடியிடம் நிர்வாகிகள் கூற எடப்பாடியும் மணிகண்டன் மீது கோபத்தில் இருக்கிறார். இந்தநிலையில் மணிகண்டன் அரசு விழாவில் கலந்து கொண்டால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும். அதனால்தான் தனது தொகுதியில் நடைபெற்ற விழாவை புறக்கணித்திருக்கிறார் என்றார்கள்.

விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கருணாஸ் (திருவாடானை), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி) ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி, பள்ளிக் கல்வித் துறை பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி திட்ட இயக்கத்தின் இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகன், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அ.அன்வர்ராஜா, முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அ.புகழேந்தி, ராம்கோ கூட்டுறவு தலைவர் செ.முருகேசன் உட்பட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button