போலி ஊடக ஆசிரியர்கள் பட்டியல்! : ஆதாரங்களுடன்.. பாகம் 1
அனைத்து துறைகளிலும் போலிகள் உண்டு. அதை செய்தியாக வெளியிடும் பத்திரிகை துறையிலும் போலிகள் பெருகி வருவது நிதர்சனமான உண்மை. இதையும் செய்தியாக வெளியிடுவதும் பத்திரிகையாளர்கள் தான்.
இந்தியா சுதந்திரம் பெற முக்கிய காரணம் ஊடகம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால் தான் அரசு பல்வேறு நலத்திட்டங்களை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. அதில் 10 சதவீதம் தான் செயல்பாட்டில் உள்ளது. 90 சதவீதம் அரசு அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது. அதை பிறகு பார்க்கலாம்.
ஊடகத்துறையை சீரழித்ததில் ஊடக சங்க தலைவர்களுக்கும் மற்றும் பத்திரிகை வெளியீட்டாளர் ஆசிரியர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. போலி பத்திரிகையாளர்களை உருவாக்கியதும் இவர்கள் தான்.
சிலர், பத்திரிகையாளர் அடையாள அட்டை வாங்குவது செய்தி சேகரிக்க அல்ல. அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்தல், குற்றப்பின்னணி உள்ளவர்கள் காவல்துறையிடமிருந்து தப்பிக்க, அரசியல்வாதிகளிடம் படம் எடுத்து கொள்ள மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தர நேர்மையான பத்திரிகையாளர்களால் மட்டுமே முடியும். இந்த பெரும் பணிகளில், நாற்காலி செய்தி குழு களம் இறங்கியுள்ளது.
இனி ஊடக போலிகள் குறித்து பார்ப்போம்.
PRESS என்ற எழுத்துக்களை கண்டாலே தவறு செய்யும் காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஒருவித அச்சம் இருந்தது. ஆனால் தற்போது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், தகுதி இல்லாதவர்களின் கையில் PRESS என்ற அடையாளம் இருப்பது தான். தகுதி வாய்ந்த பலர் PRESS என்ற அடையாளத்தையே காட்டுவதில்லை.
காவல்நிலையத்திற்கு, அரசு அலுவலகங்களுக்கு செல்லும் நிருபர்களின் அடையாள அட்டை சோதிக்கப்படுவதில்லை, ஏனென்றால், ஊடகம் என்றால் என்ன என்று அறியாத நபர்கள் தான் காவல்துறையிலும், அதிகாரிகளாகவும் அதிகம் உள்ளனர்.
அரசு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் குறித்து வெளியாகும் பத்திரிகைகளின் செய்திகளை கண்டு அஞ்சும் நபர்கள், தனது செய்தி வெளியிட்ட பத்திரிகை, உண்மையானது தானா? RNI சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா? உண்மையான வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் யார்? என்று ஆராய்ந்து பார்ப்பதில்லை.
இதை காவல்துறை ஆராய்ந்து பார்த்தாலே போதும், போலி பத்திரிகைகள் ஒழிந்து விடும். அதில் பணிபுரியும் நிருபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலாகவும் இது மாறும்.
போலியான நபர் பெயரில் பத்திரிகை வெளியாவதாக, நமது செய்தி குழுவிற்கு ஓர் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்த போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
இது குறித்து மேலும் ஆராய்ந்த போது, உண்மையான வெளியீட்டார் மற்றும் ஆசிரியர் வேறு நபர் என்றும், போலியாக இன்னொரு நபர் பெயரில் தற்போது அந்த பத்திரிகை வெளியாகிறது என்றும் தெளிவாக அறிய முடிந்தது.
அந்த பத்திரிகையின் அடையாள அட்டைகள் பல சட்டத்திற்கு புறம்பானவர்கள் கையில் உள்ளது என்று கூடுதல் தகவல் கிடைத்தது. இப்படிப்பட்ட சமூக விரோதிகள் தான், பத்திரிகை வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் போர்வையில் உலா வருகின்றனர் என்பது அதிர்ச்சி கலந்த உண்மை.
உண்மையான பத்திரிகையின் போலியான வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் யார்?
முழு ஆதாரங்களுடன் அடுத்த இதழில்…
& ராபர்ட் ராஜ்