தமிழகம்

திருக்குறளும், திருவள்ளுவரும் திராவிட இயக்கத்தினருக்கு மட்டுமே சொந்தமா?

சென்ற இதழின் தொடர்ச்சி…

குறளுக்கு உரை எழுதும் பெரியாரால் அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்ற நெடுஞ்செழியன் 1991 இல் திருக்குறள் தெளிவு உரை என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதியிருந்தார். அந்த உரை வெளியான அடுத்த ஆண்டே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் முன்னரே எழுதிய உரை 1992 ல் வெளியானது. உண்மையில் 1330 குறள்களில் இருந்து எண்பத்தைந்து குறள்களுக்கான விளக்கத்தை வள்ளுவர் உள்ளம் என்ற தலைப்பில் தன்னுடைய குயில் ஏட்டில் எழுதி இருந்தார் பாரதிதாசன். அதுவே பின்னர் நூலாக தொகுக்கப்பட்டு நூலாக வெளியானது. அதன்பிறகு வெவ்வேறு காலகட்டத்தில் ம.அர்த்தநாரி, அறிமதி தென்னகனார், இரா.இயங்குமாரனார், இறையரசன், கடவூர் மணிமாறன், நாசி கமலனாதன், மாவன் கிள்ளி என்று பலரும் திராவிட இயக்க பார்வையில் இருந்து திருக்குறளுக்கு உரைகள் எழுதினர். அந்த வரிசையில் வெளியான முக்கியமான திராவிட உரை என்று கலைஞர் மு.கருணாநிதி எழுதிய திருக்குறள் உரையை சொல்ல வேண்டும்.

திருக்குறளின் ஆகப்பெரிய ஆர்வலர்கள் பட்டியலில் கலைஞர் மு.கருணாநிதி முக்கியமானவர். ஒர் எழுத்தாளராக, பத்திரிகையாளராக, அரசியல்வாதியாக, தலைவராக, ஆட்சியாளராக இருந்து தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளிலும் திருக்குறளை கொண்டாடி திருக்குறளை போற்றி பரப்பியவர். திருக்குறளுக்கு எழுத்து வடிவில் கலைஞர் மு.கருணாநிதி செய்த முதல் காரியம் குறளோவியம் எழுதியதுதான். திருக்குறளின் பெருமையை திருக்குறளின் முக்கியத்துவத்தை கவிதை வடிவில் வெளிப்படுத்தும் வகையில் கலைஞர் மு.கருணாநிதி எழுதிய நூல் குறளோவியம். அதில் கருணாநிதியின் கவிதை அதற்கு பொருத்தமான ஓவியம். குறளைப் பற்றிய கருணாநிதியின் கருத்துரை என்று குறளோவியம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன்பிறகுதான் திருக்குறள் கலைஞர் உரை வெளியானது.

தெய்வம் என்று வள்ளுவர் பயன்படுத்திய சொல்லுக்கு வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வம் என்று விளக்கம் கொடுத்து, தான் பகுத்தறிவாளராக இருப்பினும், தனது கருத்தை வள்ளுவத்தின் மீது திணிப்பதைத் தவிர்த்திருப்பார் கருணாநிதி. அந்த வகையில், கருணாநிதி எழுதிய உரை திருக்குறளுக்கான பொழிப்புரையாகவே பார்க்கப்பட்டது. முக்கியமாக, எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட உரை என்று கருணாநிதி உரை மதிப்பிடப்பட்டது.

புலவர் குழந்தை தொடங்கி கருணாநிதி வரை பலரும் திருக்குறளுக்கு உரை எழுதினர். அவர்களுக்குப் பிறகும் பல திராவிட இயக்க உரைகள் திருக்குறளுக்கு எழுதப்பட்டன. உண்மைப் பொருளுரை, தெளிவுரை, புதிய உரை, பகுத்தறிவு உரை, மனிதநேய உரை, வாழ்வியல் உரை என்று வெவ்வேறு தலைப்புகளில் வெளியான உரைகள் ஒவ்வொன்றும் திருக்குறளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுசெல்லும் பணியைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கின்றன.

உண்மையில், திருக்குறளையும் வள்ளுவரையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்பது வெறுமனே உரை எழுதி வெளியிட்டதோடு நின்றுவிடவில்லை. பெரியார் காலத்தில் தொடங்கிய திருக்குறள் பரப்புரை இன்றும் தொடர்கிறது. ஆம், திருக்குறளைப் பரப்பும் பணியை பெரியார் தொடங்கியது 1927-ஆம் ஆண்டு என்பது இன்றைய தலைமுறைக்கு நம்பமுடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. காங்கிரஸிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்த கையோடு திருக்குறளைப் பரப்பும் பணியைத் தொடங்கிவிட்டார் பெரியார்.

திருக்குறள் மன்றங்கள் நடத்துகின்ற கூட்டங்களில் பங்கேற்று திருக்குறள் பற்றிப் பேசிய பெரியார், பல இடங்களைத் தேர்வுசெய்து குறள் மாநாடுகளை நடத்தினார். அதற்கான விளம்பரங்களையும் விரிவான அளவில் செய்தார் பெரியார். திருக்குறள் மாநாடுகளில் பங்கேற்க விரும்புவோர் கட்டணம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முக்கியமாக, திருக்குறள் மாநாடு ஏன் நடத்தப்படுகிறது என்பதை தன்னுடைய விடுதலை ஏட்டில் எழுதினார் பெரியார். அந்தக் காரணங்களே பெரியார் எந்த அளவுக்குத் திருக்குறளை நேசித்தார் என்பதை விளக்கப் போதுமானவை.

திராவிடர்களுக்கு ஒழுக்க நீதி நூல் எதுவும் கிடையாது என்ற கருத்தை உடைக்கவேண்டும், ராமாயணமும் மகாபாரதமும்தான் ஒழுக்க நீதி நூல்கள் என்ற மாயை விலகவேண்டும், மதத்தின் பெயரால் மக்களிடம் உருவான மூடநம்பிக்கைகளை அழித்தொழிக்கவேண்டும், சுயமரியாதை இயக்கத்தினர் இலக்கியங்களை அழிக்கிறார்கள் என்ற பிரசாரத்தை முறியடிக்கவேண்டும், நல்ல நெறிகளைத் திருக்குறள்தான் போதிக்கிறதே தவிர ராமாயணமோ, மகாபாரதமோ, பெரிய புராணமோ, திருவிளையாடற்புராணமோ போதிக்கவில்லை என்பதை நிரூபிக்கவும் திருக்குறள் மாநாடுகள் அவசியம் என்று அழுத்தமாக எழுதினார் பெரியார். ஆம், திருக்குறளைப் பரப்புவதற்கு பெரியாரிடம் திட்டவட்டமான காரணங்கள் இருந்தன.

பெரியார் ஏற்பாடு செய்த திருக்குறள் மாநாட்டில் திரு.வி.கலியாண சுந்தரனார், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், திருக்குறள் வி.முனுசாமி, அண்ணா, சி.இலக்குவனார், நெடுஞ்செழியன், டி.எஸ்.கந்தசாமி முதலியார், சோமசுந்தர பாரதியார், அப்பாதுரையார், புலவர் குழந்தை, என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட அறிஞர்களும் தலைவர்களும் பங்கேற்றனர்.
மாணவர்கள் திருக்குறளை முழுமையாகப் படிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஆட்சி மன்றங்கள் முதல் கல்வி மன்றங்கள் வரை உயர் பொறுப்பில் இருப்பவர்கள் திருக்குறளில் புலமை பெற்றவர்களாக இருக்கவேண்டும். திருவள்ளுவர் நாள் என்ற ஒன்றைத் தேர்வுசெய்து அறிவித்து, அன்றைய நாள் முழுக்க திருக்குறளையும் வள்ளுவரையும் பரப்பவேண்டும், திருக்குறள் விழா உள்ளிட்ட செய்திகள் வானொலி வழியாக அனைத்து மக்களுக்கும் விளம்பரப்படுத்தப்படவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன.

அந்தத் தீர்மானங்களின் முக்கியத்துவம் பற்றி பல மேடைகளில் பேசினார் பெரியார். குறிப்பாக, சைதாப்பேட்டை திருவள்ளுவர் மன்ற விழா, பெங்களூரு வள்ளுவர் கழக ஆண்டுவிழா, நாகர்கோவில் திருவள்ளுவர் வாலிபர் கழக ஆண்டு விழா, முக்கூடல் வள்ளுவர் கழக ஆண்டு விழா, தனிக்கோட்டை வள்ளுவர் கழக ஆண்டுவிழா என்று பல மேடைகளில் திருக்குறளைப் போற்றிப் பேசினார் பெரியார்.

திருவள்ளுவருக்கென்று சிறப்பு நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாடவேண்டும் என்பது பெரியாரின் விருப்பம். அதற்கான தீர்மானம் ஒன்றை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் புலவர் கோவிந்தன் சட்டமன்றத்தில் கொண்டுவரவே, அதனை முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்து, பெரியாரின் விருப்பத்தைப் பூர்த்திசெய்தார் கருணாநிதி. அந்த நாளை அரசு அலுவலகங்களிலும் கொண்டாட உத்தரவிட்டார் பின்னாளில் முதலமைச்சரான எம்.ஜி.ஆர்.

மறைமலை அடிகள் தலைமையிலான குழு வள்ளுவருக்கான காலத்தை கி.மு 31 என்று வரையறுத்து அறிவித்தது. அதன் நீட்சியாக, 1971 முதல் அரசு நாட்குறிப்புகளிலும் 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசு அலுவலகங்களிலும் திருவள்ளுவராண்டு பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இன்று இருக்கும் வள்ளுவரின் உருவம் கற்பனையானது. உலகப்பொதுமறை தந்த வள்ளுவருக்கு ஓர் உருவம் கொடுக்கவேண்டும் என்பது பாரதி தாசன், அண்ணா உள்ளிட்ட பலரது விருப்பம். அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை அப்போதைய முதலமைச்சர் காமராஜர் ஏற்றுக்கொண்டார். அவருடைய உத்தரவின்படி ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியம் அதிகாரபூர்வ வள்ளுவர் ஓவியமாக 1959-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்த ஓவியத்தை உருவாக்குவதற்கு முதலமைச்சர் காமராஜர், அமைச்சர் பக்தவத்சலம், பாரதிதாசன், அண்ணா உள்ளிட்டோர் காட்டிய ஆர்வமும் முனைப்பும் மிக முக்கியமானவை.

திருவள்ளுவருக்கு காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது உருவம் கொடுக்கப்பட்டது போலவே, வள்ளுவருக்குச் சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.கவின் சார்பில் கருணாநிதி முன்வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட சென்னை மாநகராட்சி, திருவள்ளுவர் பிறந்த ஊராக நம்பப்படும் மயிலாப்பூரில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்தது. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்தவர் பெரியவர் எம்.பக்தவத்சலம்.
காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது திருக்குறளைக் கொண்டாடும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டாலும், தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு கொண்டாட்டத்தின் வேகம் அதிகரித்தது. தமிழ்நாடு சட்டமன்றம் ஒவ்வொரு நாள் கூடும்போதும் ஒரு திருக்குறளை வாசித்துத் தொடங்கிவைக்கும் பழக்கத்தை அப்போதைய சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தொடங்கிவைத்தார். அந்த மரபு இன்றும் தொடர்கிறது. அதேபோல, இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அன்பளிப்பு கொடுத்த வள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.

திருக்குறள் சாமானியர்களுக்கும் சென்றுசேரவேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே அண்ணா ஆட்சிக்கு வந்த கையோடு அரசுப் பேருந்துகளில் திருக்குறள் பொறிக்கப்பட்டது. பின்னர் அரசினர் தங்கும் விடுதிகளிலும் திருக்குறள் பொறிக்கப்பட்டது. இப்படி, கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் பெருமை சேர்க்கும் காரியங்கள் பலவும் நடைபெற்றன. அவற்றில் சென்னையில் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டமும் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலையும் முக்கியமானவை.

திருவள்ளுவருக்குச் சிலை அமைப்பது, கோட்டம் அமைப்பது என்ற இருபெரும் காரியங்களுமே எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஆரம்பமாகிவிட்டன. ஆனால் வள்ளுவர் கோட்டம்தான் முதலில் அமைந்தது. அதன்பிறகு கால் நூற்றாண்டு கழித்தே வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. இங்கே கவனிக்கவேண்டிய செய்தி என்னவென்றால், திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் பெருமை சேர்க்க வள்ளுவர் கோட்டம் கட்டிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அதன் திறப்புவிழாவில் பங்கேற்கவில்லை. காரணம், டெல்லிக்கும் தமிழகத்துக்கும் இடையே நடத்த அரசியல் மோதல் விளையாட்டு.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. முதலமைச்சர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் தோரண வாயில், அரங்க மண்டபம், கருங்கல் தேர், குறள் மணி மாடம், மாடித்தோட்டம், ஆராய்ச்சி நிலையம். தேர்க்கோபுரம், தேர்க்கலசம் ஆகியவற்றைக் கொண்ட வள்ளுவர் கோட்டம் உருவானது. நெருக்கடி நிலைக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது திறந்துவைக்கப்பட்டது. அப்போது தமிழகத்திலிருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு கலைத்திருந்தது. ஆகவே, திறப்புவிழாவில் பங்கேற்க முடியாத கருணாநிதி, அதன்பிறகு 1989-ம் ஆண்டு மீண்டும் முதலமைச்சரானபோது தனக்கான பதவியேற்பு விழாவை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து நடத்தினார்.

வள்ளுவர் கோட்டம் போலவே வள்ளுவருக்கு குமரி முனையில் பிரம்மாண்ட சிலை அமைக்கவேண்டும் என்ற விருப்பத்தை முதலமைச்சர் கருணாநிதி அதிகாரபூர்வமாக அறிவித்தது 1975 ஆம் ஆண்டு இறுதியில்தான். ஆனால் அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்குள் கருணாநிதி ஆட்சி கலைக்கப்படவே, வள்ளுவர் சிலை உருவாக்கும் பணி நின்றுபோனது. பிறகு எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபிறகும் வள்ளுவர் சிலைக்கான பணிகள் வேகமெடுக்கவில்லை. பிறகு திமுக கொடுத்த அழுத்தம் காரணமாக 1979 ஏப்ரலில் குமரி முனையில் வள்ளுவர் சிலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டப்பட்டு, ஆய்வுப் பணிகளுக்கான குழு அமைக்கப்பட்டபோது வள்ளுவர் சிலை பணிகள் நின்றுபோயின. பிறகு 1989-ல் ஆட்சிக்கு வந்தபிறகு வள்ளுவர் சிலைக்கான பணிகளை மீண்டும் தொடங்கினார் முதலமைச்சர் கருணாநிதி. சிலையை வடிவமைக்கும் பொறுப்பு கணபதி ஸ்தபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அந்தப் பணிகள் முடிவதற்குள் மீண்டும் கருணாநிதி அரசு கலைக்கப்பட்டது. பிறகு 1996-ல் ஆட்சிக்கு வந்தபிறகுதான் வள்ளுவர் சிலை அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பமாகின.
முதலமைச்சர் கருணாநிதியின் நேரடியான கண்காணிப்பின் பலனாக 1999 அக்டோபரில் வள்ளுவர் சிலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து 31 டிசம்பர் 1999 தொடங்கி 1 ஜனவரி 2000 வரை இரண்டு நாள்களுக்கு சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, 133 அடி உயர வள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டில் அறிவிப்பை வெளியிட்ட தன்னுடைய பெயர் மட்டுமின்றி, அடிக்கல் நாட்டிய எம்ஜிஆர் பெயர் வரை எல்லாவற்றையும் விரிவாகப் பதிவுசெய்திருந்தார் முதலமைச்சர் கருணாநிதி.

கன்னியாகுமரி வள்ளுவர் சிலை போல கர்நாடகத்தின் அல்சூரில் வள்ளுவருக்குச் சிலை வைக்க ஏற்பாடுகள் செய்தார் முதலமைச்சர் கருணாநிதி. அந்தச் சிலையை கர்நாடக முதல்வர் பங்காரப்பா திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பவே, சிலை திறப்பு விழா தள்ளிப் போனது. பிறகு கன்னட அறிஞர் சர்வக்ஞர் சிலை தமிழகத்தில் திறக்கப்படும் என்ற உறுதிமொழியைக் கொடுத்து, வள்ளுவர் சிலையைத் திறந்துவைக்க முயற்சி எடுத்தார் முதலமைச்சர் கருணாநிதி. அதன்படியே கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வள்ளுவர் சிலையைத் திறந்துவைத்தார். அதேபோன்று தமிழகத்தில் சர்வக்ஞர் சிலை திறக்கப்பட்டது.

இப்படி, பெரியாரில் தொடங்கி கருணாநிதி வரை திராவிட இயக்கத்தினர் வள்ளுவரையும் திருக்குறளையும் கொண்டாடியதற்கு நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கிறது. அந்த வகையில், திருவள்ளுவரையும் திருக்குறளையும் கடைக்கோடித் தமிழனிடம் கொண்டுசென்ற பெரும்பணியைச் செய்தது திராவிட இயக்கம்!

  • சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button