இஸ்லாமிய பெண்ணின் புகைப்படத்துடன், இழிவான வகையில் முகநூலில் பதிவு ! பாஜக நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு !
சென்னை நங்கநல்லூர், கனிகா காலனியைச் சேர்ந்த கோகுல் நாயுடு என்பவர் தென்சென்னை பாஜகவின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் தனது முகநூலில் கடந்த ஜூன் 10 ஆம் தேதி சாமியாரின் மடியில் பர்தா அணிந்த இளம் பெண் அமர்ந்திருப்பது போலவும், அந்த பெண்ணை சாமியார் கட்டி அனைத்திருப்பது போல் ஒரு படத்தை பதிவிட்டிருந்தார். அதனுடன் அருவருக்கத்தக்க வகையில் வாசகங்களையும் பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவை பார்த்த அப்பகுதியினரும், இஸ்லாமியர்களும் அதிர்ச்சி அடைந்து, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் எந்தவித மத கலவரங்களும் ஏற்படாமல், இந்து, முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வருகின்றனர். அமைதியான தமிழகத்தில் இந்து, முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், மத கலவரத்தை தூண்டும் விதமாக, சமூக வலைதளங்களில் தவறான, அருவருக்கத்தக்க பதிவுகளை பதிவு செய்த கோகுல் நாயுடு என்பவரை, கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர், சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் எழுதுவது, மத உணர்வுகளை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கோகுல் நாயுடுவை கைது செய்துள்ளனர். பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கோகுல் நாயுடு ஜாமீன் கோரி, தனது வழக்கறிஞர் மூலம் ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அவரது ஜாமீன் மனு இதுவரை மூன்று முறை விசாரணைக்கு வந்தும், மூன்று முறையும் நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி கூறுகையில்.. கோகுல் நாயுடுவுக்கு ஜாமின் வழங்க கூடாது என நீதிமன்றத்தில் நானே மனு தாக்கல் செய்துள்ளேன். காலங்காலமாக இஸ்லாமியர்களும், இந்துக்களும் அண்ணன், தம்பிகளாக மாமன் மச்சான்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில், சமீப காலமாக பாரதிய ஜனதா கட்சியின் பின்புலத்தோடு, கோகுல் நாயுடு போன்ற சமூக விரோதிகளின் செயல்பாடு அதிகரித்து வருகிறது. இவர்களது நோக்கம் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்து மத கலவரத்தை உருவாக்குவதே ! இவரது முகநூலில் சிறுபான்மையினருக்கு எதிரான பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இவரது பதிவுகள் அனைத்தும் பிறரின் மனதை புண்படுத்துமே தவிர, பயனுள்ள தகவல்கள் எதுவும் இருக்காது என்றார்.