‘காலம் கனியும்; ஸ்டாலின் அரியணை ஏறுவார்!’ : பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி. அரசகுமார்
புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு இல்ல திருமணவிழா நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில், கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், “உள்ளாட்சியில் நல்லாட்சி புரிந்தவர் ஸ்டாலின். நான் பெருமைக்காகச் சொல்லவில்லை, அரசியலுக்காகச் சொல்லவில்லை. இறைவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, நான் ரசிக்கும் ஒரு தலைவர் ஸ்டாலின்தான். காரணம் நான் வாழும் காலத்தில், வாழ்ந்துகொண்டிருக்கிறார். அது நமக்குக் கிடைத்த பெருமை.
முதல்வர் இருக்கையை ஸ்டாலின் தட்டிப் பறிக்க வேண்டுமென்று நினைத்திருந்தால், ஒரே இரவில் கூவத்தூர் சென்று அதை முடித்து முதல்வராகி இருப்பார். ஆனால், ஸ்டாலினோ ஆட்சி அதிகாரம் என்பது ஜனநாயகத்தின் மூலம் கிடைக்க வேண்டும் என்று பொறுமையாகக் காத்திருக்கிறார். பொறுத்தார் பூமி ஆள்வார். அதுபோலத்தான் நிரந்தரமாக ஆளும் திருநாள் வருவதற்காகக் காத்திருக்கிறார்.
2011 அக்டோபர் மாதம் 31-ம் தேதி, நான் நெஞ்சில் வணங்கிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் இல்லையென்று சொன்னால், அன்று கொலைக்குற்றவாளியாக சிறைக்குச் சென்றிருப்பேன். அதற்காகத்தான் அவரது இறுதிப் பயணத்தின் போது, கோபாலபுரத்துக்கும் சிஐடி காலனிக்கும் அந்த தங்க முகத்தைக் காண இரண்டு மூன்று முறை காவலர் கட்டுப்பாட்டை மீறிச் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன்.
வேட்டியைக் கட்டு’ என்று அண்ணன் நேரு சொன்னார்.
அந்தக் கரை வேட்டி நான் கட்டிய வேட்டிதான் அண்ணா, எப்பொழுது வேண்டுமானாலும் எனக்குச் சொந்தமான வேட்டி. அதை யாரும் கொடுத்துக் கட்ட வேண்டாம்‘ என்பதை நான் கூறிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். காலம் கனியும் காரியங்கள் தானாக நடக்கும். விரைவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அரியணை ஏறுவார். நாம் அதையெல்லாம் பார்க்கத்தான் போகிறோம்“ என்றார். பி.டி.அரசகுமாரின் இந்தப் பேச்சு பா.ஜ.க பிரமுகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பி.டி.அரசகுமார் பேச்சு தொடர்பாக அறிக்கை வெளியிட்ட பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், “அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை அவர் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்சிகளிலும், கூட்டங்களிலும், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த பி.டி. அரசகுமார், தன் மீது நடவடிக்கை எடுக்க நரேந்திரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் தேசிய பொறுப்பாளர் முரளிதரராவிடம் இது பற்றி விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பி.டி.அரசகுமார் கூறும்போது “நீண்டகாலமாக என்னுடன் நட்பில் இருப்பவர் ஸ்டாலின். என்னை எங்கு பார்த்தாலும் நலம் விசாரிப்பவர். தொடர்ந்து அரசியலில் இயங்கிவரும் அவர் ஜனநாயக முறையில் முதலமைச்சராகப் பதவியேற்க உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரின் எண்ணம் வெற்றி பெறும் என்று நாகரிகமான முறையில் பேசினேன். அடுத்த தேர்தலில் அவர்தான் முதல்வர் என்று நான் கூறவில்லை. மற்றபடி இதைத் திட்டமிட்டுப் பேசவில்லை. யதார்த்தமாக வந்த வார்த்தையை சிலர் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
மாநிலத் தலைவர் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. அந்தப் பதவிக்கு நான் வந்துவிடக் கூடாது என நினைக்கும் சிலராகவும் இருக்கலாம். பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று இதுவரை கட்சி கொடுத்த அனைத்து வேலைகளையும் அதையும் தாண்டி கட்சியின் வளர்ச்சிக்காகப் பல வேலைகளையும் செய்துவருகிறேன். அதனால் என் மீது எந்தக் குற்றச்சாட்டையும் அவர்களால் எழுப்ப முடியவில்லை. இப்போது, அரசியல் நாகரிகத்துடன் பேசிய இந்த வார்த்தையை வைத்துக்கொண்டு எனக்கு எதிராகச் சிலர் வேலை செய்கிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
திராவிட இயக்கங்களிலிருந்து வந்தவன் நான். நம் அம்மா, அம்மாச்சியை மறந்து விடுவோமா.. அவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுவதில்லையா. அதுபோலத்தான் திராவிட இயக்கங்களும், அதன் மீதான மரியாதையும். அது எப்போதும் எனக்கு உண்டு.
அரசியல் மேடைகளில் பேசுவது என்பது வேறு, ஒரு குடும்பத்தின் விழாவில் பேசுவது என்பது வேறு. இதில், கட்சிக் கொள்கையின் அடிப்படையில் பேசுவதில்லை. தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் மீது மரியாதை உள்ளவன் நான். அதைத்தான் பேசினேன். அதுகூட, வருகின்றத் தேர்தலில் அவர்தான் முதல்வராக வருவார் என்று பேசவில்லையே…
மோடிதான் இந்த நாட்டைக் காக்கக் கூடியவர், திறமையானவர் என்ற அடிப்படையில் அவர் மீதான மரியாதையில் பா.ஜ.க-வில் இணைந்து செயலாற்றி வருகிறேன். நான் கட்சித் தலைமையிடம் விளக்கம் அளித்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக தலைமை அலுவலகத்தில் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்திருக்கிறார். அரசகுமார் திமுகவில் இணைந்ததால் தென்மாவட்டங்களில் திமுகவினர் மகிழ்ச்சியிலும், பாஜகவினர் கலக்கத்திலும் இருக்கிறார்கள்.
- சரவணகுமார்