அரசியல்

டெண்டர் முறைகேடு வழக்கு… : விசாரணை வளையத்தில் பழனிசாமி…

தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைத்துறை பணிக்கான பல்வேறு டெண்டர் ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் நிறுவனங்களுக்கே வழங்கியதாகவும் அதனால் தமிழக அரசுக்கு சுமார் 4,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சார்பில் 2018ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு 2018-ம் ஆண்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

4 ஆண்டுகளாக நடத்தப்படாமல் நிலுவையில் இருந்த இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தலைமை நீதிபதி என்வி ரமணா முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் கூடுதல் ஆவணங்கள் சேர்க்கப்பட வேண்டும் எனவும் வக்காலத்து தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் ஆர்.எஸ் பாரதி தரப்பில் முறையிடப்பட்டதால் வழக்கு வேறு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கை நாளையதினம் ஒத்திவைக்க வேண்டும் என்னும் கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய தலைமை நீதிபதி எதிர் மனுதாரரான ஆர்.எஸ்.பாரதி தரப்பினரிடம் கருத்தை கேட்டார். அதற்கு பதிலளித்து பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் நாங்கள் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைதான் நடத்த வேண்டும் என எப்பொழுதும் கேட்கவில்லை எனவும் சுதந்திரமான நேர்மையான தனி அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் எனவும் பதிலளித்தார்.

அனைத்து தரப்பினரும் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்காததால் சிபிஐ விசாரனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். அதே வேளையில் ஏற்கெனவே இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருப்பதால் அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.

சிபிஐ விசாரனை ரத்து செய்யப்பட்ட பின்னர் இது தன்மீது சுமத்தப்பட்ட சூழ்ச்சி பழி என பழனிசாமி தெரிவித்தார். திமுக அரசுக்கு யார் மீதும் வீண் பழி சுமத்தும் அவசியம் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ விசாரணையில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு நிவாரணம் கிடைத்திருந்தாலும் மீண்டும் இந்த விவகாரம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசின் கீழ் வரும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றப்பட்டுள்ளதால் தலை மேல் தொங்கும் கத்தியாகவே இந்த வழக்கு பழனிச்சாமிக்கு அமைந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button