சிலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க முடியாது ..! : பொன் மாணிக்கவேல்
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்கும்படி சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நியமிக்கப்பட்டிருந்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நியமனத்தின் அடிப்படையிலான பொன் மாணிக்கவேலின் பதவிக் காலம் நவம்பர் 30 அன்று முடிவடைந்தது.
இதனை சுட்டிக்காட்டி, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை ஒப்படைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொன் மாணிக்கவேல் பணிக்காலம் முடிவடைந்துள்ளதால், அவரிடம் இருக்கும் வழக்கு கோப்புகள் உள்ளிட்டவற்றை ஒப்படைக்க உத்தரவிடுமாறு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி மற்றும் தமிழக காவல்துறை இயக்குனர் விடுத்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனை பரிசீலித்த தமிழக அரசு, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் கோப்புகள், விவரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் ஒப்படைக்கும் படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோருக்கு பொன்மாணிக்க வேல் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக தான் நியமிக்கப்பட்டதையும், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்றி சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்க சட்டப்படி அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மேலும் பணி நீட்டிப்பு வழங்குமாறு, பொன்மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் இன்னும் பல வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உரிய வசதிகள் செய்துதராதது தொடர்பாக, தமிழக அரசு மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யும் வரை சிறப்புக் குழுவின் பணிக்காலத்தை நீட்டிக்குமாறு கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.