தமிழ் சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகை ரோஜாவின் கணவர் செல்வமணி இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார். தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருப்பவர் மற்ற சங்கங்களின் நிர்வாகிகளுக்கு முன்மாதிரியாகவும், சம்மேளனத்தில் உள்ள சங்கங்களின் பிரச்சனைகளை காப்பவராகவும், தனது சகதொழிலாளர்களின் கோரிக்கைகளை தொழிலாளர் நல ஆணையம், அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்த்து வைப்பவராக இருக்க வேண்டும். ஆனால் இவரோ மற்ற சங்கங்களின் நிர்வாகத்தில் தலையிட்டு பிரச்சனைகளை உருவாக்குவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை சினிமாத் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு எந்தப் பயனும் ஏற்பட்டதில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக விஷால் பதவி வகித்த போது அவருடன் கூட்டு சேர்ந்து கொண்டு டெக்னீசியன் யூனியன் என்ற சங்கத்தை தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இருந்து நீக்கி 1500 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தான் இவர் தலைவராக வந்து செய்த சாதனை. முதன் முறையாக பதவி ஏற்றவுடன் அரசு வழங்கிய இடத்தில் 6 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று சொல்லி சக சங்கங்களிடம் பணத்தை வசூல் செய்து அதற்கான பூமி பூஜையும் போட்டார்..
பிறகு வீடு கட்டும் திட்டத்தை கைவிட்டு விட்டு படப்பிடிப்பு தளம் உருவாக்குவதாக கூறி பிரபல நடிகர்களிடம் நன்கொடையாக பண வசூல் செய்து ஏற்கனவே கடந்த கால நிர்வாகிகள் கட்டிடம் கட்டி திறப்பு விழா காணாத கட்டிடத்தை சுண்ணாம்பு அடித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அழைத்து திறப்பு விழா நடத்தினார். ஆனால் இன்று வரை எந்தப் படப்பிடிப்பும் நடக்க வில்லை. சங்கத்தின் பணத்தை வீண் விரயம் செய்து சுயவிளம்பரம் செய்து கொள்வதே இவரது வழக்கம். அந்த சமயத்தில் விஷால் சம்மேளனத் தொழிலாளர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் நன்கொடை கொடுத்து அந்த செய்தியை செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்தார். சம்மேளனத்தின் வரவு, செலவு கணக்கில் அந்த ஐம்பது லட்சம் என்ன ஆனதென்று தெரியவில்லை.
முதலாளிகள் சங்கத்திற்கு ஆதரவாக தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான இவரால் நீக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகிகள் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தனர். அந்த சமயத்தில் இவரது பதவிக்காலம் முடிந்து மீண்டும் இவரே தலைவராக வந்தார். ஆனால் முதலாளிகள் சங்கத்தில் விஷால் பதவி முடிந்து தமிழக அரசின் மேற்பார்வையால் சங்கத்தின் நிர்வாகம் நடந்து வருகிறது. இப்போது சில முதலாளிகளை சந்தித்து சம்மேளனத்தில் உள்ள 12 சங்கங்களை நீக்கி முதலாளிகளின் செலவுகளை குறைக்க நான் துணையாக இருப்பேன். நானும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் முதலாளிகளின் கஷ்டத்தை உணர்ந்து இந்த முடிவை எடுத்ததாக உறுதியளித்திருக்கிறார். இதனால் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இருக்கும் பாதிக்கும மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகளும் தொழிலாளர்களும் தங்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.
இவரால் நீக்கப்பட்ட டெக்னீசியன் யூனியனின் வழக்கில் சமாதானமாக பேச்சு வார்த்தை நடத்தி டெக்னீசியன் யூனியனை சேர்த்துக் கொள்ள இரண்டு தரப்பினரையும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாம். அந்த வகையில் டெக்னீசியன் யூனியன் நிர்வாகத்தினரும் பெப்சி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் செல்வமணி தலைவர் என்ற முறையில் அராஜகமான சில கண்டிஷன்கள் விதித்திருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது. அதாவது டெக்னீசியன் யூனியன் செயலாளர் இரண்டு ஆண்டுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சங்கத்தின் தேர்தலில் நிற்க கூடாது. ஏற்கனவே டெக்னீசியன் யூனியனால் நீக்கப்பட்ட சில உறுப்பினர்களை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வேறு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத நான் கொடுக்கும் முப்பது நபர்களை புதிய உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்து கையொப்பம் இட்டால் டெக்னீசியன் யூனியனை சேர்த்துக் கொள்வதாக கூறினாராம் பெப்சி தலைவர்.
பெப்சி தலைவர் என்ற முறையில் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்து, தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய இவர், இன்னொரு சங்கத்தின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. அதாவது டெக்னீசியன் யூனியன் செயலாளர் பதவி விலகினால் அந்த சங்கத்தை சேர்த்துக் கொள்ளலாம் என்பது பெப்சி பொதுக்குழுவின் தீர்மானம். அந்த தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் டெக்னீசியன் யூனியன் செயலாளரும் உறுப்பினர்களின் நலன் கருதி பதவி விலக தயாராக இருக்கிறார். ஆனால் அவரை அடுத்த இரண்டாண்டுகளுக்கு அவர்கள் சங்கத்தின் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எழுதி வாங்க பெப்சி வைலாவில் ஏதும் புதிய விதியை சேர்த்து இருக்கிறாரோ என்னமோ தெரியவில்லை. பெப்சியின் தலைவர் என்ற முறையில் மற்ற சங்கத்தின் உள்விவகாரங்களில் அராஜகமாக தலையிட்டு பிரச்சனையை உருவாக்குவதே இவரது வேலையாக உள்ளதாம். சமீபத்தில் உணவு பரிமாறுவோர் சங்கத்தில் நடந்த தேர்தலில் பல வருடங்களாக இருந்த தலைவருக்கும் இவருக்கும் பெப்சி தேர்தலில் பிரச்சனை ஏற்பட்டதாம். அதனால் அவரை தோற்கடிக்க இவர் நேரடியாக தலையிட்டு வேலை செய்ததாகவும் தகவல்.
இவர் சார்ந்திருக்கும் இயக்குனர்கள் சங்கத்தின் தேர்தல் சமயத்தில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேறு சங்கத்தில் நிர்வாக பொறுப்பில் இருக்கக்கூடாது என்ற புதிய விதியை கொண்டு வந்தாராம். ஆனால் இவர் மட்டும் எழுத்தாளர்கள் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்து கொண்டு இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடலாமாம். அவருக்கு மட்டும் எந்த விதியும் பொருந்தாதாம். இது எந்த வகையில் நியாயம் அவர்தான் விளக்க வேண்டும்.
இவர் துணைத் தலைவராக இருக்கும் எழுத்தாளர்கள் சங்கத்தில் திருட்டு சம்பந்தமாக 19 புகார்கள் இதுவரை விசாரிக்காமலே இருக்கிறதாம். அங்கு ஏற்கனவே கதை திருட்டில் அதிகம் பேசப்படும் இயக்குனர் முருகதாஸ் விஷயத்தில் பாக்யராஜ் எடுத்த நியாயமான முடிவிற்கு எதிராக செல்வமணி செயல்பட்டதால் அந்த சங்கத்திடம் பாக்யராஜ் தனியாகவும் செல்வமணி அன் கோ தனி அணியாக செயல்படுவதாகவும் தகவல்.
சமீபத்தில் ஆந்திராவில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்று நடந்து வருகிறது. நடிகை ரோஜாவுக்கு வாரியப் பதவி கொடுத்து இருக்கிறார் ஜெகன்மோகன். அதனால் மாநிலத்தில் புதிய தொழில் தொடங்க வரும் தொழிலதிபர்கள் அனைவரும் ரோஜாவை பார்த்து அவரின் சம்மதத்தை பெற்றால் தான் அங்கு தொழில் தொடங்க முடியுமாம். அதற்காக தனது கணவரையே ரோஜா பெர்சனல் செகரட்டரியாக்கியிருக்கிறாராம். சில தினங்களுக்கு முன் ஐந்து பேர் இங்கு வந்து செல்வமணியை சந்தித்து பேசியிருக்கிறார்கள். பெப்சி அலுவலகம் பெரும்பாலும் நடிகை ரோஜா, செல்வமணி இவர்களின் சொந்த வேலைகளுக்கு மட்டும்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
தொழிலதிபர்களை சந்திக்க வேறு நபர்களை நியமித்தால் ரகசியம் வெளியே தெரிந்து விடும். அதனால் தனது கணவரை பெர்சனல் செகரட்டரியாக நியமித்தது அவரது குடும்பத்தினருக்கு வேண்டுமானால் நன்மையாக இருக்கும். தமிழகத்தில் பெப்சி தொழிலாளர்கள் இருபத்தி ஐந்தாயிரம் பேருக்கு தலைவராகவும், இயக்குனர்கள் சங்கத்தின் மூவாயிரம் உறுப்பினர்களின் தலைவராகவும், எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகிக்கும் இவரை தேர்வு செய்த உறுப்பினர்களின் நிலை அதோ கதிதானா?
இதற்கெல்லாம் விளக்கம் பெற பலமுறை பெப்சியின் தலைவரையும், பொதுச்செயலாளரையும் தொடர்பு கொண்டும் அவர்கள் பதிலளிக்க விரும்பவில்லை.
பதில் அளித்தால் அடுத்த இதழில்..
- சூரியன்