அரசியல்

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் : வெற்றி பெற்றது அரசா? ஜாக்டோ ஜியோவா?

தமிழகத்தில் கடந்த 22ந்தேதி முதல் நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அறிவித்து உள்ளது. பொதுமக்களிடையே எழுந்த அதிருப்தி மற்றும் நீதிமன்றம், அரசு எச்சரிகைகளினால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது போராட்டம் நடத்துவதும் பின்னர் வாபஸ் வாங்குவதுமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த 22ந்தேதி முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியம், நிலுவைத்தொகை உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில், தொடக்க கல்வி ஆசிரியர்கள் மட்டுமே பெருமளவில் கலந்துகொண்டனர். உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், போராட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்த்து வந்தனர். ஆனால், ஜாக்டோ, ஜியோ அமைப்பில் உறுப்பினராக உள்ள நிர்வாகிகள் மட்டுமே போராட்டத்தில் கலந்துகொண்டனர். அதுபோல தலைமை செயலக ஊழியர் சங்கமும் போராட்டத்தில் கலந்துகொள்ள மறுத்த நிலையில் எழிலகம் பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள் சங்கம் போராட்டத்தில் கலந்துகொண்டது.

ஆனால், இதில் ஒரு தரப்பினர் தங்களது பணியை மேற்கொண்டு வந்தனர். இதன் காரணமாக  அரசு பணிகள் பெருமளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டத் தில் கலந்துகொண்டதால், பெரும்பாலான அரசு பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

இதன் காரணமாக, பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர் கடுமையாக அதிருப்தி அடைந்தனர். ஒரே காம்பவுண்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டும், உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது, மாணவர்களின் பெற்றோர்களிடையே மேலும் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கிலும், நீதிபதிகள் ஆசிரியர்களுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி பணிக்கு திரும்பு மாறு அறிவுறுத்தினார்.

அதேவேளையில், அரசும், நிதிச்சுமையை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால், போராட்டக்குழுவினர் பிடிவாதமாக வேலைக்கு திரும்ப மறுத்த நிலையில், போராட்டத்தில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க முடிவு செய்து பலரை கைது செய்து சிறையில் அடைத்தது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளத்தை பிடிக்கவும், அவர்களுக்கு மெமோ கொடுக்கவும் தொடங்கியது.

பிப்ரவரி 1ந்தேதிமுதல் தற்போது பிளஸ்2   வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற இருந்ததால், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு தங்களது பணியை ஆற்ற வேண்டும் என்று பல தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஆசிரியர்கள் பெறும் சம்பளம் குறித்த விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தனியார் பள்ளிகள் மற்றும்  நிறுவனங்களில் வழங்கப்படும் சம்பளத்தை ஒப்பிட்டு பேசப்பட்டது. உயர்நீதி மன்றமும் இதுகுறித்து கேள்விகளை எழுப்பியது.

இதற்கிடையில், பல இடங்களில் ஆசிரியர்களை கண்டித்து அந்த பகுதி மக்களும், மாணவர்களும் இணைந்து போராட்டத்தில் குதித்தனர். தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 26ந்தேதி குடியரசு தினத்தன்று ஆசிரியர்கள் கொடி ஏற்ற சென்றபோது, அவர்களிடம் தகராறு செய்த சம்பவங்களும் அரங்கேறின. இதன் காரணமாக ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொதுமக்களின் கோபம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது திரும்புவதை கண்ட பலர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப முடிவெடுத்தனர். இதன் காரணமாக போராட்டக்களம்  சற்று ஆட்டம் கண்டது.

இதற்கிடையில் அரசின் எச்சரிக்கை மற்றும் நீதிமன்றத்தின் கடுமையான கேள்விக்கணைகள் போன்றவற்றால், பல ஆசிரியர்கள் போராட்டக்குழுவினரின்  அழைப்பை தவிர்த்து  பள்ளிகளை திறந்து தங்களது பணியை ஆற்ற தொடங்கி விட்டனர். அதையடுத்து ஒருசிலரை தவிர்த்து சுமார் 99 சதவிகித ஆசிரியர்கள் தங்களது பணிகளை தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சிகளும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்த தொடங்கினர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அரசியல் கட்சிகளும் கைவிட்டு விட்டதால் செய்தவறியாது திகைத்த ஜாக்டோ, ஜியோ அமைப்பினர்,  தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை  தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

தற்போது பிளஸ்2   வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. மாணவர் களின் நலனை கருத்தில் கொண்டும் அனைத்து கட்சி தலைவர்கள், அமைப்புகளின் வேண்டு கோளை ஏற்று எங்களுடைய போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம் என்று அறிவித்து உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

8 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றது அரசா? ஜாக்டோ, ஜியோ சங்கங்களா? என்பது வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button