தமிழகம்

போலீஸ் வேடமிட்டு 1 கோடியே 10 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் நிருபர் கைது

திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் சரகத்திற்குட்பட்ட அவினாசிபாளையம் அருகே நடந்த வழிப்பறி வழக்கில் முக்கிய குற்றவாளியான பத்திரிகை நிருபரை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நகை கடைக்கு தேவையான நகைகளை கொள்முதல் செய்ய அடிக்கடி கோயமுத்தூர் சென்று வருவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓட்டுநர் ஜோதி என்பவரை அழைத்துக் கொண்டு ரூபாய் ஒரு கோடியே 10 லட்சம் ரொக்க பணத்தை எடுத்துக்கொண்டு தங்க நகைகள் வாங்குவதற்காக கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கார் காங்கேயத்தை அடுத்த சம்பந்தம்பாளையம் பிரிவு அருகே நெருங்கியபோது வெங்கடேஷின் காரை மறித்து மற்றொரு காரில் வந்த நான்கு நபர்கள் தாங்கள் போலீஸ் எனக் கூறி வெங்கடேஷ் வந்த காரில் மூன்று நபர்கள் ஏறி உள்ளனர். ஓட்டுனர் இருக்கையில் ஏறிய நபர் வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் அவிநாசிபாளையத்தை அடுத்த தாராபுரம் ரோட்டில் செலுத்தியுள்ளார். கார் வேங்கிபாளையம் வாய்க்கால் அருகே சென்ற போது, வாகனத்தை நிறுத்தி வெங்கடேஷிடம் இருந்த ரூ.1 கோடியே 10 லட்சம் பணம், 3 செல்போன்களையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து சம்பவம் குறித்து காங்கேயம் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலில் காங்கேயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தபோது, சம்பவம் நடந்த இடம் அவினாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என தெரியவந்தது. அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அவிநாசிபாளையத்தில் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையில், தனிப்படையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். முதல் கட்டமாக ஓட்டுநர் ஜோதிவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வழிப்பறி சம்பவத்தில் தொடர்பு இருப்பது வந்துள்ளது.

பத்திரிகை நிருபர் & எடிட்டர் அலாவுதீன்

அதனை தொடர்ந்து ஜோதி கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கரூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன், குளித்தலை பகுதியை சேர்ந்த விக்னேஷ், ஸ்ரீகாந்த், மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து ரூ. 90 லட்சத்தை மீட்டனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அலாவுதீன் என்பவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே பெட்டவாய்த்தலையில் பதுங்கியிருந்த அலாவுதினை சுற்றி வளைத்து கைது செய்த ஆய்வாளர் கோவர்த்னாம்பிகா மேற்கொண்ட விசாரணையில், அலாவுதீன் குளித்தலையை சேர்ந்தவர் என்பதும் இரண்டு வார பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் அரசு அதிகாரிகளை மிரட்டியது உட்பட ஏராளமான வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் வழிப்பறி வழக்கில் மூளையாக செயல்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனை அடுத்து அலாவுதீனிடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய கார், செல்போன், ரொக்கப்பணம் ரூ.1.30 லட்சத்தை கைப்பற்றிய போலீசார் அலாவுதீனை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பத்திரிகை நிருபர் போர்வையில் வழிப்பறி சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button