சினிமா

கமலின் 60 ஆண்டு கால கலைப் பயணம் !

ஒவ்வொரு நூற்றாண்டிலும் மக்கள் தங்களை, தங்கள் வாழ்வை, சொந்த வாழ்வின் இன்ப துன்பங்களை ஏதோ ஒரு கலையோடு பிணைத்துக் கொண்டிருப்பார்கள். தெருக்கூத்து, பொம்மலாட்டம், கரகாட்டம், மக்களிசை, ஓவியம் என இப்படி பலவற்றையும் சொல்லலாம். ஆனால் இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலையான சினிமாவானது மேல் சொன்ன அனைத்தையும் தன்னுள் அடக்கி கலை வெளியில் எல்லையற்ற பேருருவாக திகழ்கிறது. கமல்ஹாசன் எனும் திரைக் கலைஞன் 60 ஆண்டுகளை தான் நேசிக்கும் சினிமாவில் வெற்றி தோல்வியோடு சாத்தியப்படுத்தி இருப்பதை சிறு செய்தியாக நாம் கடந்துவிட முடியாது.

ஐந்து வயதில் களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமான அந்தக் குழந்தை எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேஷன், நாகேஷ், மனோரமா, பாலச்சந்தர் என பல திரை ஆளுமைகளின் கைகளில் தவழ்ந்து இன்று திரைமொழியின் நிகரற்ற ஒற்றைச் சித்திரமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

களத்தூர் கண்ணம்மாவில் தடம் பதித்த அந்த பிஞ்சு கால்கள் தனது 60-வது ஆண்டு கலை வாழ்வை பூர்த்தி செய்திருக்கிறது.

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பல பரிச்சார்த்த முயற்சிகளை செய்தவர், யாரும் செய்யத்துணியாத விசயங்கள் பலவற்றையும் முதன் முதலில் செய்து பார்த்தவர். இதில் பல இழப்புகளை சந்தித்தாலும். தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியிலிருந்து சற்றும் பின் வாங்காத விக்ரமாதித்யன் அவர்.
ஸ்டெடிகேம் ஸ்டெயில் காட்சிகளை முதன் முதலில் குணாவில் முயன்றிருப்பார். இன்று வெளியாகும் எந்த சினிமாவிலும் ஸ்டெடி கேம் காட்சிகள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

சினிமாவில் காட்சிக்கு உள்ள முக்கியத்துவம் ஒலி அமைப்புக்கும் உண்டு. அதை கருத்தில் கொண்ட கமல் குருத்திப் புனல் படத்தில் டால்பி சவுண்ட் ஒலி அமைப்பை முயன்றிருப்பார். பிறகு வெகு காலத்திற்கு டால்பி சவுண்ட் முறை தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்தது. அதன் பிறகு தான் 3டி 4டி சவுண்ட் முறைகள் எல்லாம் தமிழ் சினிமாவில் மெல்ல எட்டிப் பார்த்தது. அதிலும் கூட 3டி சவுண்ட் முறையை விஸ்வரூபம் படத்தில் முதலில் பயன்படுத்தியவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசனின் நூறாவது படம் ராஜபார்வை, 1981ஆம் வருடம் உருவான இந்த சினிமா கமல்ஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த முதல் சினிமா. இதனை சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கி இருப்பார். இந்த படத்தில் தான் தமிழின் முதல் அனிமேசன் காட்சி இடம் பெற்றிருக்கும்.

அவ்வை சண்முகி படத்தில் பெண்வேடத்தில் நடித்திருப்பார் கமல். படப்பிடிப்பு முடிந்த ஒரு நாளில் அதே பெண் வேடத்தில் சென்று கருணாநிதியை சந்தித்தார். 1983ஆம் வருடம் கருணாநிதி கமல்ஹாசனுக்கு தன் கட்சியில் இணையும் படி கேட்டு ஒரு தந்தி அனுப்பினார். அதற்கு இப்போது வரை தான் பதில் எழுதவில்லை எனவும், அதுபற்றி கருணாநிதி எப்போதும் என்னிடம் கேட்டதில்லை என்றும் கூறியுள்ளார் கமல். நடுஇரவில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது திரைத்துறையில் இருந்து அதனை எதிர்த்து ஒலித்த முதல் குரல் கமலுடையது.

மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களில் சிறந்த நடிகருக்கான தேசியவிருதும் தேவர்மகன் படத்தில் சிறந்த தயாரிப்பாளர் எனவும் இதுவரை நான்கு முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார் அவர்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் தான் தமிழ் ரசிகர்களுக்கு முதன் முதலில் லேப்டாப் காண்பிக்கப்பட்டிருக்கும்.
விக்ரம் படத்தில் தான் முதன் முதலில் ஒரிஜினல் கம்ப்யூட்டர் தமிழ் ரசிகர்களுக்கு காண்பிக்கப் பட்டது. இதற்காக ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து புதிய கம்ப்யூட்டரை வாங்கினார் கமல்ஹாசன்.

பிரான்ஸ்நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது 2016’ஆம் ஆண்டு கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அதன் படி சிவாஜி கணேஷனுக்கு பிறகு செவாலியே விருது பெற்ற தமிழ் நடிகர் என்ற பெருமை கமல்ஹாசனுக்கு கிடைத்தது. இவை தவிர பத்ம ஸ்ரீ, பத்ம பூசன் விருதுகளையும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றவர் உலக நாயகன்.

இதுவரை கமல் ரஜினி இருவரும் இணைந்து 13 படங்களில் நடித்துள்ளனர். இவ்விரு திரை ஜாம்பவான்களும் இனைந்து நடித்த கடைசி படம் க்ரேஅப்தார். அதில் இந்தி திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடித்திருப்பார்.

பொதுவாக சினிமாவில் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளில் தான் டப்பிங் பேசி வசனங்கள் சேர்ப்பார்கள். ஆனால் விருமாண்டி ஹேராம் ஆகிய படங்களில் லைவ் ரெக்கார்டிங் முறையில் வசனங்களை ரெக்கார்ட் செய்து சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபத்தை கொடுத்தவர் கமல்ஹாசன். ஹேராம் படத்தில் காந்தியை தவறாக சித்தரித்து இருக்கிறார் கமல் என எதிர்ப்புகள் கிளப்பியது. அதையும் கடந்து முன் நகர்ந்தார் அவர். ஹேராம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் இந்தியில் நடித்து வெளியான படமான ‘ஏக் துஜே கேளியே’-வை. கமலின் குருவான பாலச்சந்தர் இயக்கி இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஹம்பனே தும்பனே ஏக்கு துஜே கேலியே’ என்ற பாடலை முனுமுனுக்காத உதடுகள் இல்லை. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த படத்தில் பாடியதற்காக தேசிய விருதைப் பெற்றார்.
கமல்ஹாசனின் இயற்பெயர் பார்த்தசாரதி. கமலின் அம்மா பார்த்த சாரதி என்றே அழைப்பார். கமலின் சகோதரர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தனர் ஆனால் கமல் கலையின் மீது மட்டுமே ஆர்வம் காட்டியதை அறிந்த அவரது தந்தை அவ்வை சண்முகம் என்ற நாடகாசிரியரிடம் கொண்டு போய் கமலை சேர்த்தார். தன் குருவுக்கு மரியாதை செய்யும் விதமாகத் தான் பின்னாளில் கமல்ஹாசன் அவ்வை சண்முகி படத்தில் தன் கதாபாத்திரத்திற்கு அவரது பெயரை வைத்தார்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ‘சிவராத்திரி தூக்கம் போச்சு ஓய்’ இந்த பாடலை முதலில் விளக்கிச் சொன்ன போது ‘ஐயையோ என்ன தம்பி. இதுல நான் நடிச்சா அவ்ளோ மரியாதையா இருக்காதே’ என மனோரமா சொன்னதும். அவருக்காக சில பகுதிகளை மாற்றி அமைத்தார் கமல். அந்த அளவிற்கு மனோரமா மீது பெரிய அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர் அவர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் முதன் முதலில் ரெட் எபிக் கேமராவை பயன்படுத்தி டிஜிடல் சினிமாவில் அடி எடுத்து வைத்தது. இன்று வெளியாகும் 99 சதவிகித தமிழ் சினிமா ரெட் எபிக் கேமராவால் எடுக்கப்படுகிறது.

உலக சினிமா இயக்குனர்கள் தங்கள் சினிமாவில் பயன்படுத்திய யுக்திகளை தமிழ் சினிமாவில் துணிச்சலாக முயன்று பார்த்தவர் கமல்ஹாசன். அதற்கு உதாரணமாக ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோஷாவா இயக்கிய ரோஷோமான் படத்தின் திரைக்கதை பாணியை விருமாண்டியில் பயன்படுத்தியிருப்பதைக் குறிப்பிடலாம்.
இப்படி எத்தனை எத்தனையோ முதன் முதல்களை சோதனை செய்து சினிமாவை கொண்டாடி வருபவர் கமல். அதற்கு அவ்வப் போது பெரிய இழப்புகளையும் விலையாக கொடுத்தார். தமிழ் சினிமா இன்று நடைபோடும் தொழில் நுட்ப வீதியின் முதல் பாதசாரி கமல்.

இவரது பெரும்பாலான படங்கள் அது வெளியான காலத்தில் கொண்டாடப் படவில்லை ராஜபார்வை, குருதிப்புனல், குணா, விக்ரம், ஹேராம், அன்பேசிவம் இப்படி பல படங்கள் வெளியாகி வெகுகாலம் கழித்து தான் அதற்கான மரியாதை கிடைத்தது.

சினிமா ஒரு மாய புத்தகம்., ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதுப்புதுக் கதைகளைச் சொல்லும் அப்புத்தகத்தின் பக்கங்களில் கமல் ஒரு நிரந்தர ஆச்சர்யக் குறி. இன்னும் அறுபது ஆண்டுகள் இக்கலைஞன் உயிர்ப்புடன் இயங்க வாழ்த்துவோம்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை, பரமகுடியில் திறந்து வைத்தார். இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது ராஜ்கமல் அலுவலகத்தில் நிறுவப்பட்ட இயக்குனர் கே.பாலசந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
நடிகர் ரஜினிகாந்த், மணிரத்னம், வைரமுத்து, நாசர் உட்பட பலர் கலந்துகொண்ட இந்த விழாவில், கமல்ஹாசன் பேசும்போது கூறியதாவது:
ரஜினிகாந்துக்கு தாமதமாக ஐகான் விருது அறிவித்திருந்தாலும் தக்க மனிதரைதான் கவுரவித்திருக்கிறார்கள். நடிக்க தொடங்கிய முதல் வருடத்திலேயே அவர் ஐகான் தான். தன்னை பற்றி நினைத்துக்கொள்ளாமல், படம் பற்றி அவர் எடுத்துக்கொண்ட சிரத்தை என்னில் சற்றும் குறையாதது. அவர் பாணி வேறு, என் பாணி வேறு என்பதை தவிர வேறொன்றும் இல்லை.

ஏவிஎம் வேப்பமரத்தடியில் நின்று நாங்கள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டது ஞாபகத்துக்கு வருகிறது. எங்கள் முதல் ரசிகரும் விமர்சகரும் நாங்கள்தான். எங்களையே நாங்கள் பாராட்டிக்கொள்வோம், விமர்சித்துக் கொள்வோம். நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் ரசிகர்கள்தான். அது மணிரத்னத்துக்கும் வைரமுத்துவுக்கும் பொருந்தும். நாங்கள் ஆசை பட்டதை மணிரத்னமும் நானும் செய்துகொண்டிருக்கிறோம். இங்க கற்றுக் கொள்வதற்காக எந்த வசதியும் கிடையாது.

’தளபதி’ பட டைட்டில் முடிவு பண்ணும்போது என் காதில் அதை ரஜினி சொன்னார். என் காதில் ’கணபதி’ன்னு கேட்டது. எப்படின்னு கேட்டார். ’நல்லா இல்லை’ன்னு சொன்னேன். ஏன்?ன்னு அவருக்கும் புரியல. பிறகுதான் ’தளபதி’ன்னு சொன்னார்.பிரமாதம்னு சொன்னேன்.
எங்க ரசிகர்கள் இன்னும் மோதிட்டு இருக்காங்க. அவங்க நாங்க பேசிட்டு இருக்கிறதை பார்த்தா, என்ன நினைப்பார்களோ? நாங்களும் விட்டுடோம். இரண்டு கோல் போஸ்ட் இருந்தால்தான் நல்லாயிருக்கும்.

ஒரு கட்டத்துல, நான் ஒதுங்கிரலாம்னு இருக்கேன்னு கேட்டார் ரஜினி. அவர் கேட்ட இடத்தை பாருங்க… எங்கிட்ட கேட்டார். எனக்கே அந்த நிலைதான். ஆனால் ஒதுங்கக் கூடாதுன்னு சொன்னேன். நீங்க ஒதுங்கினா, என்னையும் ஒதுங்கச் சொல்வார்கள் என்று சொன்னேன்.
இங்கே பாலசந்தரின் சிலையை திறந்து வைப்பதில் பெருமைப்படுகிறோம். கூடிய விரைவில் ராஜ்கமலின் 50 வது படம் பற்றிய அறிவிப்பு பிரமாண்டமாக வரும். அதில் நான் நடிக்க வேண்டிய அவசியமில்லை. நானும் மணிரத்னமும் தனித்தனி அலுவலகம் வைத்திருந்தாலும் எங்கள் கனவு ஒன்றுதான்.
சினிமாவில் கோபம், அவமரியாதை, பொறாமை எல்லாம் இருக்கும். சிலர் போட்டுக் கொடுப்பார்கள். யார் எதை சொன்னாலும் நாங்கள் இருவரும் அதை பேசிக்கொள்வோம். அதற்குப் பிறகு போட்டுக் கொடுப்பது குறைந்திருக்கிறது. எங்களை பிரிக்க முடியாது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

விழாவில், வைரமுத்து பேசும்போது, ‘’கமலுக்கு இது, சிலைகளின் வாரம் போலும். பெற்றுத் தந்த தந்தைக்கு ஒரு சிலை பரமகுடியில். கற்றுத்தந்த தந்தைக்கு இங்கே இன்று சிலை. கமல்ஹாசனை பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பாலசந்தர் பற்றி ஒரு வரியில் சொல்ல முடியுமா? என்று. ’என் வருமானவரிக்கு காரணமானவர் அவர்தான்’ என்று சொன்னார் கமல். இதை விட ஒருவார்த்தையில் அவரை பாராட்ட முடியாது. இருவருக்கும் இடையில் ஊடலும் இருக்கும் கூடலும் இருக்கும். அது இரண்டு கற்கண்டு கட்டிகள் முட்டிக்கொண்டது போலதான். ஒரு தகப்பனாக, கலை ஆசானாக, பாலசந்தரை கொண்டாடியவர் கமல்ஹாசன்.

தமிழ்நாட்டுக்கு கலைப் பொக்கிஷங்களை கொடுத்தவர் பாலசந்தர். அவர் போட்டது வீரிய விதை என்பதை இருவரும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கே சாதித்த பெருமக்கள் பக்கத்தில் நான் இருப்பதற்கு காரணம், பாரதிராஜாவும் பாலசந்தரும். அவர் எழுத்து மேதை. தமிழில் ஆழ்ந்த நுணுக்கங்களை அறிந்தவர். ’சிந்து பைரவி’யில் ஒரு பாடல். உழைக்கும் மக்களுக்கும் கடைசி தமிழனுக்கும் பாடல் சேர வேண்டும் என்று கவலை ஏதுமில்ல, ரசிக்கும் மேட்டுக்குடி சேரிக்கு சேரவேணும் அதுக்கு பாட்டப் படி’ என்று எழுதினேன். எழுதியதை பார்த்துவிட்டு யோசித்த பாலசந்தர், இரண்டு ’ம்’ மட்டும் சேர்த்துக்கொள்ளலாமா என்று கேட்டார்.

’சேரிக்கும் சேரவேண்டும் அதுக்கும் பாட்டுப்படி’ என்பதுதான் அது. இப்படி, இரண்டு புள்ளிகளை வைத்து கற்பித்தவர் பாலசந்தர். இந்த (ரஜினி, கமல்) இரண்டு கலை சின்னங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பாலசந்தர். அவர் சிலையை இங்கு நிறுவியிருக்கிறீர்கள். இந்த சிலையை கமல் வைத்ததில் ஒரு குறியீடு இருக்கிறது. வாழ்வில் உன்னை யார் மேம்படுத்தினாரோ, அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்பதை இந்த கலை உலகம் உணர வேண்டும்’’ என்றார்.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button