விமானத்தில் பறந்து வந்து கோவில் திருவிழாவில் கைவரிசை காட்டிய சகோதரிகள்…
தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்ற கோவில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பக்தர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்துச்செல்லும் திருட்டு சகோதரிகள் மூவர் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளனர்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளிலும் வியத்தகு சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய சாதனை பெண்களுக்கு மத்தியில் கோவை கோணியம்மன் கோவில் தேர் திருவிழாவில் 10 பெண்களின் கழுத்தில் இருந்து நகைகளைத் திருடி காவல்துறையினரிடம் சிக்கி உள்ளனர்.
இந்துமதி… பராசக்தி… செல்வி ஆகிய இந்த முப்பெரும் தேவியரின் திருட்டு பின்னணி சுவாரஸ்யமானது என்கின்றனர் காவல்துறையினர். சிறுவயதில் திருவிழாக்களில் பொம்மை திருடிய இந்த கைகள் வளர்ந்த பின்னர், சாமிகும்பிட வரும் பெண்களின் கழுத்தில் உள்ள நகைகளை நோக்கி திரும்பியதாக கூறப்படுகின்றது.
ஆரம்பத்தில் பலகோவில் திருவிழாக்களில் கைவரிசைகாட்டி சென்னை திருவான்மியூரில் சொந்தமாக வீடே கட்டிஉள்ளனர் இந்த திருட்டு சகோதரிகள்.
திருமணத்திற்கு பின்னர் ஆளுக்கு ஒரு தேசமாக பிரிந்துள்ளனர். பராசக்தி இலங்கையிலும், செல்வி கணவருடன் லண்டனுக்கும், இந்துமதி கணவருடன் கேரள மாநிலத்திற்கும் இடம் பெயர்ந்துள்ளனர். மது குடித்த வாயும்… டிக்டாக்கில் நடித்த பெண்ணும் எப்பவும் திருந்தாது என்பது போல தேசம் விட்டு தேசம் போனாலும் இவர்களின் திருட்டு புத்தி மாறவில்லை..!
திருமணத்திற்கு பின்னர் இந்த மூவரின் திருட்டுக்கும் மூலவராக இந்துமதியின் கணவர் பாண்டியராஜன் இருந்துள்ளார். கேரளாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் பாண்டியராஜன், இணையதளம் வாயிலாக கோவில் திருவிழாக்களை தெரிந்து கொண்டு பாய்ஸ் பட செந்தில் போல எந்தெந்த கோவில்களில் திருட போகிறோம் என்பதை முன் கூட்டியே மெயில் மூலம், இலங்கை பராசக்திக்கும், லண்டன் செல்விக்கும் அனுப்பி வைத்து விடுவாராம்.
இரு சகோதரிகளும் சுற்றுலா விசாவில் அங்கிருந்து சென்னை வந்ததும். பாண்டியராஜன் தனது மனைவி இந்துமதியுடன் அவர்கள் இருவரையும் சேர்த்து எந்த கோவிலில் கைவரிசை காட்ட போகின்றனரோ அங்கு அழைத்து சென்று விடுவார் என்று கூறப்படுகின்றது.
கோவிலின் அருகில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கும் இவர்கள் திருவிழாவுக்கு முந்தைய நாள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது போல நோட்டமிட்டு வருவார்கள். மறு நாள் கூட்டம் முண்டியடிக்க ஆரம்பித்ததும் கழுத்தில் அதிக நகைகள் அணிந்திருக்கும் பெண்களுக்கு பின் பக்கம் அடுத்தடுத்து நின்று கொள்வார்கள்.
கூட்டம் முண்டியடிக்கும் போது டக்கென்று தங்க சங்கிலிகளை பெண்களின் கழுத்தில் இருந்து அபேஸ் செய்து ஒருவர் கை மாற்றி ஒருவர் என கூட்டத்தில் இருந்து வெளியே கொண்டு சென்று விடுவார்கள் என்றும் இறுதியில் அந்த திருட்டு நகைகள் பாண்டியராஜன் கரங்களுக்கு சென்று சேர்ந்து விடும் என்றும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
ஒரு திருவிழாவுக்கு குறைந்தது 100 சவரன் நகைகளையாவது கழட்டிச்செல்லும் இந்த திருட்டு சகோதரிகள், கடந்த மாதம் பழனியில் தொடங்கி திருச்செந்தூரில் புகுந்து கோவையில் கைவரிசை காட்டி தப்ப நினைத்த போது சிசிடிவி காட்சிகள் மூலம் கையும் களவுமாக காவல்துறையினரிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து 35 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்ட நிலையில் 15 சவரன் நகைகளுடன் பாண்டியராஜன் தப்பி சென்று விட்டார்.
தமிழக கோவில்கள் மட்டுமல்லாது, திருப்பதிக்கும் சென்று கூட்ட நெரிசலில் கைவரிசை காட்டி வந்துள்ளனர். தங்களுக்கு தெரிந்த ஏஜெண்டு ஒருவர் மூலம் திருட்டு நகையை விற்று பணமாக்கி அதனை தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு மீண்டும் இலங்கைக்கும் லண்டனுக்கும் விமானத்தில் பறந்து சென்று விடுவார்கள் என்று கூறப்படுகின்றது.
பல ஆண்டுகளாக பறந்து பறந்து கைவரிசை காட்டிய இந்த மூன்று திருட்டு பறவைகளையும் முதல் முறையாக கைது செய்துள்ள காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கடந்த மாதம் சொகுசுப் பேருந்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை மத்திய பிரதேசத்தில் வைத்து போலீசார் மீட்டுள்ளனர்.
தெலுங்கானாவைச் சேர்ந்த நகை வியாபாரியான கௌதம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளோடு கோவை நோக்கி சொகுசுப் பேருந்து ஒன்றில் வந்துள்ளார்.
சங்ககிரி அருகே உணவு இடைவேளைக்காக பேருந்து நின்றபோது, பயணிகள் யாரும் இல்லாததைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் நகைகள் வைத்திருந்த பையை திருடிச் சென்றனர். இந்தக் காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.
சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் என விசாரணை தீவிரமடைந்தது.
முடிவில் நகைகளைத் திருடியது மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தபா, அக்தர், முனீர், அகமதுகான், அஜய்ரத்தோர் ஆகியோர்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை கூட்டாக ஒரே இடத்தில் வைத்து மடக்க திட்டமிட்ட போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மூலம் நகைகள் வாங்குவது போல் பேசி காளிபாவடி என்ற இடத்துக்கு வரவழைத்து அம்மாநில போலீசாரின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைத்தனர்.
அப்போது நகைகளை விட்டுவிட்டு தங்கள் பிடியில் இருந்து அவர்கள் 5 பேரும் தப்பியோடிவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். தொடர்ந்து அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
– ப.வேல்மணி, சாகுல் ஹமீது