முறையான கட்டிடமோ, விளையாட்டு திடலோ இல்லாத பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது எப்படி?
இரும்பு ஸ்கேலால் மாணவனின் தலையில் தாக்கிய ஆசிரியை..!
புனித பிரான்சிஸ் பள்ளியில் சம்பவம்
சென்னை தரமணியில் புனித பிரான்சிஸ் சேவியோ மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இரண்டு வீடுகளை இணைத்து குறுகிய கட்டிடத்தில் இயங்கி வரும் இப்பள்ளியில் 200 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் லோகேஷ் என்ற மாணவன் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த சிறுவன் லோகேஷை பள்ளி ஆசிரியை கமலா என்பவர், தான் வைத்திருந்த இரும்பு ஸ்கேலால் தாக்கியதாக கூறப்படுகிறது. அது கத்திபோல கூர்மையாக வெட்டியதால் சிறுவனின் தலையில் இருந்து ரத்தம் கொட்டி சட்டையெங்கும் ரத்தக்கறையானது.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பெரிய காயம் இல்லாதது போல தலையில் கட்டுபோட்டு அழைத்து வந்த பள்ளி நிர்வாகம் அவனது சட்டையை கழற்றி ரத்தக்கறையை சோப்பு போட்டு அகற்றவும் முயன்றுள்ளனர். இந்த தகவலை சிறுவனின் பெற்றோரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் பள்ளி முடிந்து தலையில் கட்டுடன் வீடு திரும்பிய சிறுவனை கண்டு பதறிய பெற்றோர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவனின் தலையில் ஏற்பட்ட காயத்தை பார்த்த மருத்துவர் இரும்பு ஸ்கேலால் அடித்ததால் காயம் ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்ததோடு, சிறுவனின் தலையில் 3 தையல்களையும் போட்டு விட்டார்.
இதையடுத்து பள்ளியில் சென்று விசாரித்த மாணவனின் பெற்றோரிடம் இந்த ஆண்டு கல்விக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என்றும், மருத்துவ செலவுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர் பள்ளி நிர்வாகத்தினர்.
தங்கள் மகனுக்கு நேர்ந்ததுபோல வேறு குழந்தைக்கு நேர்ந்து விடகூடாது என்ற நோக்கில், தரமணி காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர். காவல் நிலையத்திலும், பள்ளி நிர்வாகத்தினர் சமரசம் பேசி உள்ளனர்.
சிறுவனின் பெற்றோர் ஒப்புக் கொள்ளாததால் ஆசிரியை கமலா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கல்வி கட்டணத்தில் தாங்கள் பாக்கி வைத்த காரணத்தால் மகன் தாக்கப்பட்டதாக மாணவனின் தாய் வேதனை தெரிவித்தார்.
முறையான கட்டிடமோ, விளையாட்டு திடலோ இல்லாமல் மொட்டைமாடியில் மாணவர்களை விளையாட வைத்துள்ள இந்த பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது எப்படி? என பெற்றோர்கள் கேள்விஎழுப்பிவந்த நிலையில், மாணவர்களை இரும்பு ஸ்கேலைக் கொண்டு ஆசிரியை அடித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததால் பள்ளி நிர்வாகம் கடும் பதற்றத்தில் உள்ளது.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் அரசியல் பிரமுகர்களை அழைத்து வந்து, தங்களிடம் 2 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசினார்கள் என்றும், அதனை கொடுக்க மறுத்ததால் பள்ளியின் நற்பெயரை கெடுக்கும் நோக்கில் அவதூறாக புகார் அளித்து வழக்குப் பதிந்துள்ளனர் என்கிறார் புனித பிரான்சிஸ் சேவியோ பள்ளியின் முதல்வர்.
கட்டிட விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத இது போன்ற தனியார் மெட்ரிக் பள்ளிகளை ஆய்வு செய்து விதி மீறிய பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு..!
சின்னஞ்சிறிய பூப்போன்ற குழந்தைகளின் கையில் தான் நாளைய சரித்திரமே எழுதப்பட இருக்கிறது. சிறுவயது முதலே குழந்தைகளுக்கு பகுத்தறிவு, பொதுவுடைமை கருத்துகளை மனத்தில் பதிய வைத்தால் அவர்களுக்கு துலங்கத் தொடங்கும் உலகம் பேதங்கள் இல்லாத பொன்னுலகமாக மாறும்.
குழந்தைகள் மீது உங்கள் லட்சியங்களைத் திணிக்காதீர்கள் என்று எச்சரிக்கின்றனர் சான்றோர்கள். “குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கலாம்- ஆனால் அவர்கள் எதிர்காலத்தில் வசிப்பவர்கள்; நீங்களோ கடந்த காலத்தில் வசித்தவர்கள்” என்று கூறினான் கவிஞன் ஒருவன்.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, செல்போன்கள், இணைய வளர்ச்சி சின்னஞ்சிறு நெஞ்சிலும் நச்சு விதைக்க சில நேரங்களில் காரணமாகி விடுகின்றன. இதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க புத்தக வாசிப்பும், முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளும் நிச்சயம் உதவும்.
குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை வழங்க அரசுகள் எவ்வளவோ பாடுபட்டு வந்தாலும், குடும்ப சூழ்நிலைகள் அவ்வப்போது குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கி விடுகின்றன.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்கின்றனர் பெரியோர்கள். நடந்தவற்றை மறப்பதும் மன்னிப்பதுவும் மட்டுமே துயரங்களை அகற்றும்- இந்த வழியைத்தான் குழந்தை உள்ளம் காட்டுகிறது.
ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கும் கனவு என்ன என்பதை அறிந்து, அதனை நிறைவேற்ற வேண்டியது பெற்றோரின் கடமை… குழந்தைகளின் ஆர்வம், ஆசை, அணுகுமுறை… இவற்றைக் கூர்மையாக கவனித்து தேவையானதை சரியான நேரத்தில் கொடுத்தால் அந்த குழந்தை எதிர்காலத்தில் சாதனையாளராவது நிச்சயம்…
- சூரியன்