ஐஐடி மாணவி கொலையா? தற்கொலையா?
சென்னை ஐஐடி மாணவியர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி, ஐஐடி பேராசிரியர்கள் மூவரைக் குறிப்பிட்டு தனது தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம் என தெரிவித்திருந்த செல்போன் பதிவு கிடைத்துள்ளதால் மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் விடுதி அறையில் பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதே மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வு முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவியின் உடைமைகளும் ஒப்படைக்கப்பட்டன.
இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது அதில், தனது தற்கொலைக்கு இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், உதவி பேராசிரியர் ஹேமசந்திரன் கரா, இணை பேராசிரியர் மில்லிந்த் பிராமே ஆகியோரது பெயரையும் தற்கொலை குறிப்பில் மாணவி பாத்திமா லத்தீப் குறிப்பிட்டிருந்தார். கேரள முதல்வரை நேரில் சந்தித்த மாணவியின் பெற்றோர் இது குறித்து முறையிட்டதை அடுத்து, கேரள முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தினர்.
இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கிண்டியில் உள்ள ஐஐடிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஐஐடி இயக்குனர் மற்றும் துறை பேராசிரியர்களை சந்தித்து அவர் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
சுமார் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட இந்த விசாரணையின் போது மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஷ்வரமூர்த்தி, கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், மாணவியின் தற்கொலை வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாகவும், கூடுதல் துணை ஆணையர் பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி மெஹலினா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு சிறப்பு விசாரணை குழு புலனாய்வு செய்யும் எனவும் அவர் கூறினார்.
இதனிடையே இந்தியர் மாணவர் சங்கம், மாணவர் காங்கிரஸ், சமூக நீதி மாணவர் இயக்கம், முஸ்லிம் மாணவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகள் ஐஐடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்படும் பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கடந்த இரண்டு நாட்களாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
ஐஐடி மாணவர்களும் வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஐஐடி இயக்குனரிடம் மனு அளித்தனர்.
இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் கூடுதல் துணை ஆணையர் பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி மெஹலினா தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு புகாருக்குள்ளான பேராசிரியர்களிடம் விசாரணை தொடங்கியது.
மூவரிடமும் தனித்தனியே விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வகுப்புத் தோழிகள், விடுதி தோழிகள், விடுதி காப்பாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மாணவியின் செல்போன் ஆய்வுக்காக காவல் ஆணையர் அலுவலக சைபர் கிரைம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், மாணவி பாத்திமா லத்தீப்பின் தற்கொலை குறித்த போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணை முடிவதற்கு முன்பே சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகள், மாணவர்கள், பேராசிரியர்கள் விரக்தியடையும் விதத்திலும் ஐஐடி நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் சென்னை ஐஐடி நிறுவனம் குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அவரது தந்தை அப்துல் லத்தீப், டிஜிபி திரிபாதியை சந்தித்து மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்துல் லத்தீப், தனது மகள் தற்கொலை செய்த பின்னர் அவரது செல்போனை ஏன் போலீஸ் ஆய்வு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய அப்துல் லத்தீப், அந்த செல்போனின் ஸ்க்ரீனிலேயே இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் பற்றிய குறிப்பு இருந்ததாக கூறினார்.
கடந்த 8 ஆம் தேதி கடைசியாக தனது மகள் செல்போனில் தன்னுடன் பேசிய போது மன கஷ்டத்தில் இருந்தது போல் தோன்றியதாக அவர் கூறினார். மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்திருப்பார் என்பதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இணை பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மீது தனது மகள் பாத்திமாவுக்கு ஒருவித அச்சம் இருந்தது என்றும், அதை ஏற்கனவே தன்னிடம் கூறியிருப்பதாகவும் அப்துல் லத்திப் குறிப்பிட்டார். சுதர்சன் பத்மநாபனிடம் இருந்து எந்த விதமான துன்புறுத்தல் பாத்திமாவுக்கு கொடுக்கப்பட்டது என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தனது மகள் தற்கொலை செய்த பின்னர் ஐஐடி நிர்வாகம் சார்பில் ஆறுதல் வார்த்தை கூட யாரும் பேசவில்லை என்று அவர் வேதனை தெரிவித்தார். தற்கொலை தொடர்பான சிசிடிவி உள்ளிட்ட பதிவுகளை ஐஐடி நிர்வாகம் காட்டவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
தனது மகள் பாத்திமா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், தனது மகள் மரணத்தில் நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்றும் அப்துல் லத்தீப் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து சென்னை கிரின்வேஸ் சாலையிலுள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு சென்ற அப்துல் லத்தீப், பாத்திமா மரணம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.
கல்வி நிலையங்களைக் காவிமயமாக்கும் போக்கைத் தவிர்த்து, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தப்படுவது, ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் உறுதி செய்யப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்டிருக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவ மாணவி ஃபாத்திமா லத்தீப், தனது மரணத்திற்கு காரணமான பேராசிரியர்களின் பெயர்களை வெளிப்படுத்தியிருப்பது தெரியவந்திருப்பதாக, கூறியிருக்கிறார்.
தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி சென்னை ஐஐடி-யில் சேர்த்ததாகவும், அப்படி இருந்தும், தங்கள் மகளை சிறுமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு உட்படுத்தி உயிர்பலிக்கு ஆளாக்கிவிட்டதாக, மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் பெற்றோர் கூறியிருப்பதாக, மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து இத்தகைய சர்ச்சைகள் எழுவது புதிதல்ல என்றும், தமிழ்நாட்டின் தலைநகரில் ஐ.ஐ.டி. இருந்தாலும், அதன் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போலவே அமைந்துள்ளதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், உள்ளாட்சி தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு விருப்ப மனுக்களை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் பேசும்போது “ஐஐடி மாணவி விஷயத்தைப் பொருத்தவரையில் முழுமையான விசாரணை நடைபெறும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். எந்த இடத்தில் சர்ச்சைகள் இருந்தாலும் அவற்றின் வரலாற்றை தேடிப்பிடித்து உரிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இதுகுறித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ஐஐடி கல்வி நிறுவனத்தில் கடந்த ஒராண்டில் மட்டும் ஐந்து பேர் தற்கொலை செய்து மரணம் அடைந்துள்ளார்கள், இனி வரும் காலங்களில் இது போண்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
மாணவி பாத்திமாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
எனவே, மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது எந்தவித பாரபட்சம் பாராமல் பிணையில் வெளியில் வர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் , மாணவி பாத்திமாவின் குடும்பத்திற்கு இழப்பிடு 25 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும், பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
- சூரிகா