சினிமா தொழிலாளர்களின் சொந்த வீடு கனவு நிறைவேறுமா?
கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தபோது திரைப்பட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மாமல்லபுரம் அருகே பையனூரில் திரைப்பட தொழிலாளர்கள் வீடுகட்டி குடியேறுவதற்கும், சினிமா படப்பிடிப்பு தளம் அமைப்பதற்கும் அரசின் இடத்தை குத்தகைக்கு (அதாவது தரை வாடகைக்கு) வழங்கினார். அந்த சமயத்தில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக திரைப்பட இயக்குனர் V.C.குகனாதன் பதவி வகித்து வந்தார். அவருடன் சாமிநாதன் என்பவரும் அந்த நிர்வாகத்தில் இருந்துள்ளார். அரசு அந்த இடத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிய போது அந்த இடம் பெரும் காடு போல் காட்சியளித்ததாம். அப்போது அந்த இடத்தை சுத்தம் செய்வதாக கூறி தற்போது சம்மேளனத்தின் பொருளாளராக இருக்கும் சாமிநாதன் என்பவர் அந்த இடத்தில் இருந்த மரங்களை வெட்டி பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து அந்தப் பணத்தை பெப்சிக்குத் தராமல் தனது சொந்த ஊரில் தோப்புகளை வாங்கி குவித்து இருக்கிறாராம். அதேபோல் தொழிலாளர்களுக்கு கொடுத்த இடத்தின் அருகே ஒரு குளம் இருந்திருக்கிறது. அந்த குளத்தையே ஒரு சில நிர்வாகிகளுடன் கூட்டு சேர்ந்து விற்பனை செய்து பணத்தை பகிர்ந்து கொண்டாராம்.
அந்த விஷயம் மற்ற நிர்வாகிகளுக்கு தெரிந்து சம்மேளன பொதுக்குழுவில் பிரச்சனையானதும் அந்த இடத்திற்கு எதிரிலேயே வேறு இடத்தை விலைக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார் சாமிநாதன்.
அரசு குத்தகைக்கு வழங்கிய இடத்திற்கு வருடத்திற்கு (அறுபத்து ஆறாயிரம் ) ரூபாய் 66,000 கடந்த பத்து வருடங்களாக பெப்சி நிர்வாகம் அரசுக்கு செலுத்தி வருகிறது. இந்த சமயத்தில் செல்வமணி தலைவராகவும், சாமிநாதன் பொருளாளராகவும் பெப்சி நிர்வாகத்தில் இருக்கிறார்கள். தற்போது தமிழக அரசு ஜெயலலிதா பெயரில் அரங்கம் கட்டுவதற்காக ஐந்து கோடி ரூபாய் அறிவித்து ஒரு கோடி முன்பணமாக பெப்சிக்கு வழங்கி இருக்கிறது. அந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட செல்வமணி நான் சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தரப்போகிறேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த உடனேயே அதற்கான அறிவிப்பினையும் அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து சில சங்க நிர்வாகிகளும், சினிமாத் தொழிலாளர்களும் கூறுகையில், செல்வமணி பெப்சியின் தலைவராக வந்ததில் இருந்தே பெப்சியில் எந்த வேலையும் நடக்கவில்லை. பொதுவாக பெப்சியின் வேலைகள் சம்பந்தமாக முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்திக்கச் செல்லும்போது பெப்சி நிர்வாகிகளை பெப்சியின் தலைவர் தன்னுடன் அழைத்துச் செல்வது தான் காலம் காலமாக இதற்கு முன் இருந்த தலைவர்கள் கடைபிடித்து வந்த மரபு. ஆனால் செல்வமணி அவர் சார்ந்த இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளை முன்னிலைப்படுத்தி பெப்சியின் நிர்வாகிகளை இருட்டடிப்பு செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருவதாக கவர்ச்சியான அறிவிப்பை அட்டவணைப் படுத்தி விளம்பரம் செய்துள்ளார். இப்போது தொழிலாளர்களின் நிலை இவர் தலைவராக வந்ததற்கு பிறகு மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. கடந்த 1 1/2 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சு வார்த்தை நடத்தவில்லை. தொழிலாளர்களுக்கு வேலை பார்த்ததற்கான சம்பளம் முறையாக வழங்கப்படுவதிலலை. ஏனென்றால் கார்பரேட் கம்பெனிகாரர்கள் மாதம் ஒரு முறைதான் பணம் கொடுக்கிறார்கள். அதுவும் முறையாக கொடுக்க மறுக்கிறார்க்ள. இருந்தாலும் குடும்பத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட நேரததில் தொழிலாளர்களை ஐம்பதாயிரம், 1 லட்சம் முன்பணம் கட்டச் சொன்னால் எந்தத் தொழிலாளர்கள் கட்டுவார்கள். செல்வமணிக்கு தொழிற்சங்கம் பற்றி எதுவும் தெரியாது. அவர் பெப்சிக்கு வந்த பின்புதான் கற்றுக் கொண்டு வருகிறார். இதற்கு முன் அவர் சார்ந்த சங்கத்தின் செயலாளராக இருக்கும் போதே தொழிற்சங்கம் பற்றிய தெளிவு இல்லாத காரணத்தால் தான் இயக்குனர் சங்கத்தின் பதிவு இரத்தானது. இவருக்கு முன் பெப்சியின் தலைவராக இருந்தவர்கள் தொழிற்சங்கம் பற்றி நன்கு அறிந்தவர்கள். அவர்களாலேயே அந்த இடத்தில் வீடு கட்ட முடியவில்லை. இவர் கட்டுவதாக வாய் சவடால் விடுகிறார். அதாவது குத்தகைக்கு வாங்கிய இடத்திற்கு எந்த வங்கி கடன் கொடுக்க முன்வரும். அந்த இடத்தை தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கச் சொல்லி அரசிடம் கேட்டு, வீட்டு வசதி வாரியமோ, குடிசை மாற்று வாரியமோ வங்கிக் கடன் பெற்று வீடு கட்டி கொடுத்தால் தான் இவர் நினைப்பது நடக்கும். இவர் தலைவராக வருவதற்கு முன் V.C.குகனாதன் ஏற்கனவே சொசைட்டி மூலம் வீடு கட்டி தருவதாக பணத்தை வசூல் செய்தார். உறுப்பினர்களிடம் வசூல் செய்த அந்தப் பணம் என்ன ஆனது? அந்த சொசைட்டியின் தற்போதைய நிர்வாகிகளில் சாமிநாதன் மற்றும் ஒரு நிர்வாகியின் பதவி நிலைக்குமா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இரண்டு சொசைட்டிகளில் உறுப்பினராக இருப்பவர்கள் ஒரு சொசைட்டியில் பதவிக்கு வர வேண்டுமானால் ஒரு சொசைட்டியில் தனது உறுப்பினர் தகுதியை இராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதி. இது தெரிந்தும் சாமிநாதன் மற்றும் சண்முகம் தற்போது வீடு கட்டித் தருவதாக சொல்லும் சொசைட்டியில் பதவி வகிக்கிறார்கள். சொசைட்டியின் பெயரில் வீடு கட்டித் தருவதாக சொசைட்டி தலைமையின் அனுமதி வாங்காமலே விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். இதுவே மிகப்பெரும் தவறு. அந்த சொசைட்டியில் முறையான கணக்கு வழக்கு புத்தகங்களை இந்த நிர்வாகிகள் பின்பற்றாமல் இருக்கிறார்கள். ஏற்கனவே செல்வமணியும், விக்ரமனும் இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் இதேபோல் வீடுகட்ட இடம் வாங்கித் தருவதாக சொல்லித்தான் இரண்டு முறை வெற்றி பெற்றார்கள். ஆனால் அந்த உறுப்பினர்களுக்கு இதுவரை இடம் வாங்கி கொடுக்கவில்லை.
டெக்னீசியன் சங்கத்தை வெளியே அனுப்பிய செல்வமணி, தான் இயக்கிய குற்றப்பத்திரிகை என்ற படத்தின் தயாரிப்பாளரை தலைவராக கொண்டு இயங்கும் தொழிற்சங்கத்தை தற்போது பெப்சியில் இணைத்திருக்கிறார். சண்டைக் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக பயணிக்கும் ஜிம்பாய்ஸ் என்றழைக்கப்படும் உறுப்பினர்களை பிரித்து தனியாக சங்கம் துவங்கச் சொல்லி அதனையும் பெப்சியில் இணைக்க தயாராகி வருகிறார். மேலும் போட்டோ பிளட் சங்கத்தையும் இரண்டாக உடைத்து தனியாக பிரிக்கவும் தயாராகி வருகிறார்.
ஏற்கனவே பெப்சிக்கு எதிராக படைப்பாளிகள் என்ற அமைப்பை தொடங்கி அதில் தமிழ் திரை தெலைக்காட்சி துவங்க பல லட்ச ரூபாய் வசூல் செய்த செல்வமணி இன்று வரை கணக்கு கொடுக்கவில்லை. இவர் இன்று பெப்சிக்கு தலைவரானதும் தொழிலாளர்களுக்கு நன்மை செய்வதாக கூறுகிறார். அப்படியே செல்வமணியின் இந்த வீடுகட்டும் நோக்கம் நல்ல நோக்கமாக இருந்தாலும் இந்த இடத்தில் ஆரம்பத்திலேயே பல லட்ச ரூபாய்களை கொள்ளையடித்த பொருளாளர் சாமிநாதன் தன்னுடன் இருக்கும் போது செல்வமணியின் நோக்கம் எப்படி நல்ல நோக்கமாக இருக்கும் என்று நாங்கள் எப்படி நம்ப முடியும். எது எப்படியோ தொழிலாளர்கள் விழித்துக் கொண்டால் சரி என்று கூறினார்கள்.
இந்த இதழ் வெளிவரும் சமயத்தில் டெக்னீசியன் சங்கத்தினரால் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதாக நமக்கு தகவல் வந்தவண்ணம் உள்ளது.
இது சம்பந்தமான செய்திகளை அடுத்த இதழிலும், நாற்காலி செய்தி யூடியூப் சேனலிலும் விரைவில்…
- சூரியன்