பொன்பரப்பியைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஜாதியின் அடிப்படையில் கலவரம் மூண்டது அதிர்ச்சிக்குரிய தகவலாகும். இவை தொடரக்கூடாது என்றும் ஜாதி நோய் ஒழிய பாடுபடுவோம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்கள் பற்றி கீழ்த்தரமாக இன்னொரு பிரிவைச் சேர்ந்த யாரோ பதிவிட்டதன் அடிப்படையில், அந்தப் பகுதியில் கலவரம் வெடித்துள்ளது.
இது குறித்து புகார் வந்தவுடனேயே காவல்துறை உரிய முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைதுசெய்ய உத்தரவாதம் கொடுத்திருந்தால் இந்த அளவுக்கு பெரிதாக வெடித்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.
மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை அதிகாரிகளின் கைகள் கட்டப்படாத வகையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டு வந்து இருக்க முடியும் என்று கூறினார்.
எல்லாம் ஆட்சி அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளின் பிடிகளுக்குள் சிக்கிக் கொண்டு விழிப்பிதுங்குவதால், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் தவிக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
இந்தத் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட, பிரச்சினைக்குக் காரணமானவர்களை உடனே கைது செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படித்த இளைஞர்கள், மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் ஜாதி ஒழிப்பை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.