தமிழகம்

350 பேரிடம் ரூ. 100 கோடி மோசடி..! : கணவன், மனைவி கைது

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மணிவண்ணன் என்பவர் ஆர்.எம்.வி குரூப் ஆஃப் கம்பனீஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

தமது நிறுவனத்தில் முதலீடு செய்தால் 100 நாட்களில் இரட்டிப்பாக்கி தருவதாகவும் நீண்ட நாள் முதலீட்டுக்கு, 25 சதவீத வட்டி வழங்குவதாகவும் அறிவித்தார். ஊறுகாய், மசாலா பொருள், சமையல் எண்ணெய் வகைகள் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்ததாகக் கூறப்படும் மணிவண்ணன், பகுதி வாரியாக அவற்றின் வினியோக உரிமையையும் தருவதாக உறுதியளித்தார்.

அதிகளவில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு, வெளிநாடு சுற்றுலா, உயர் ரக கார் பரிசாக வழங்குவதாகவும் அறிவித்த மணிவண்ணனின் இந்த கவர்ச்சிகர அறிவிப்பை அவரது ஊழியர்கள், முகவர்கள் ஏராளமான மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

தனது நிறுவனம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த நட்சத்திர ஓட்டல்களில் கூட்டங்கள் நடத்தி, கண்ணைக் கவரும் விளம்பரங்களை வெளியிட்டு பலரை நம்பவைத்தார். இதன் காரணமாக முதலீடுகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. மனைவி இந்துமதி, சகோதரர்கள் ராம், லட்சுமணன், மாமனார் மாணிக்கம், மாமியார் சரஸ்வதி, அலுவலக ஊழியர் சரஸ்வதி உள்ளிட்டோரின் ஒத்துழைப்புடன் பண வசூல் ஜரூராக நடைபெற்றுள்ளது.

நடுத்தர மக்கள் முதல் சிறிய அளவிலான தொழிலதிபர்கள் வரை போட்ட பணம் நூறு கோடி ரூபாயை தாண்டிய நிலையில், மணிவண்ணன் அண்ட் கோ 2018ஆம் ஆண்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. பணத்தை இழந்தவர்களில் 4 பேர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்று மோசடி கும்பல் தப்பித்து வந்துள்ளது. பணத்தை நேரடியாகக் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் சிலருக்கு மோசடி கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மணிவண்ணன் மீதான புகார்கள் குவியத் தொடங்கிய நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மோசடி கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மணிவண்ணனையும் அவரது மனைவி இந்துமதியையும் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு லேப்டாப், 2 டேப் (ஜிகிஙி) கள், 13 செல்போன்கள், 2 சொகுசுக் கார்கள், 10 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மோசடி செய்த பணத்தில் மணிவண்ணன் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாக இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திட்டம் போட்டு திருடுபவர்கள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டே இருக்கும் நிலையில், மக்கள்தான் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.

& செந்தில்குமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button