சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக சினிமா நடிகரும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி லாக் நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் கவித்திரன். இவர் ‘நம்மகத’ என்ற படத்தில் நடித்துவிட்டு, ‘ரூட்டு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அடுத்துள்ள சின்னசேலம் அடுத்த நயினார்பாளையம் பகுதியை சேர்ந்த 26 வயதான மூர்த்தி என்ற இளைஞர் புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார், கவித்திரன் மற்றும் அவரது தந்தை கண்ணனை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கடந்த 2017-ம் ஆண்டு மூர்த்தி என்பவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக ஒன்றரை லட்ச ரூபாய் பணத்துடன் சென்னை வந்துள்ளார்.
அப்போது திருவல்லிக்கேணி பகுதியில் பார்ட் டைமாக வேலை பார்த்துக்கொண்டு மேன்சனில் தங்கியிருந்த போது சென்னை பல்கலைக்கழகத்தில் படித்துவந்த கவித்திரன் உடன் மூர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி அவரிடம் பணத்தை பறிக்க கவித்திரன் முயற்சித்துள்ளார்.
தனது தந்தைக்கு மருத்துவ செலவுக்காக அவசரமாக ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாக மூர்த்தியிடம் கேட்டுள்ளார்.
மூர்த்தியும் கல்லூரியில் சேருவதற்காக வைத்திருந்த பணத்தில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயை கவித்திரனிடம் கொடுத்துள்ளார். ஒருவாரத்தில் திருப்பித் தருமாறும், அந்த பணம் இருந்தால்தான் தன்னால் கல்லூரியில் சேர முடியும் எனவும் மூர்த்தி கூறியுள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட கவித்திரன் அதன் பிறகு மூர்த்தி கேட்கும்போதெல்லாம் தன்னிடம் பணம் இல்லை எனவும் கூடிய விரைவில் தந்துவிடுகிறேன் என சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
பணம் கிடைக்காததால் கல்லூரியில் சேர முடியாத மூர்த்தி தனது சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றார். பணத்தை ஏமாந்து விட்டாய் என்ற சொந்தபந்தங்களின் பழிச்சொல்லுக்கு ஆளாகி கூலி வேலை செய்து வந்தார். கொடுத்த பணத்தை கேட்டதற்காக மூர்த்தி, கவித்திரனின் கடுமையான மிரட்டலுக்கும் ஆளாக்காப்பட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் சென்னை வந்த மூர்த்தி, நேரடியாக லாக் நகரிலுள்ள கவித்திரனின் வீட்டுக்கு சென்று அவரது தந்தை கண்ணனிடம் பணத்தைக்கேட்டு முறையிட்டுள்ளார்.
அதற்கு கவித்திரனின் தந்தையான கண்ணன், பெல் சாலையிலுள்ள ஹோட்டல் செஞ்சூரியன் அருகில் சென்று காத்திருக்கும் படியும் தான் பணத்துடன் வந்து சந்திப்பதாகவும் மூர்த்தியிடம் கூறியுள்ளார்.
மூர்த்தி அங்கு காத்திருக்க, கவித்திரன் மற்றும் அவரது தந்தையும் அங்கு சென்றனர். கொடுத்த பணத்தை எங்களிடமே கேட்கிறாயா? உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என சொல்லி மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயம்பட்ட மூர்த்தி போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மூர்த்தியிடம் புகாரைப் பெற்ற திருவல்லிக்கேணி போலீசார், ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதுடன், மூர்த்தியை தாக்கியதாக நடிகர் கவித்திரன் மற்றும் அவரது தந்தை கண்ணனை கைது செய்தனர்.
சினிமாவில் நடிக்கும் ஆசையில் தன்னுடன் படித்த சக மாணவர்களிடம் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஆசை காட்டி பணத்தை பறித்ததாகவும், கவித்திரன் மீது புகார் வந்துள்ளதால் அது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.