தமிழகம்

அண்ணா நகர் டவர் பார்க் கிளப் ஆக்கிரமிப்புக்கு சீல் வைப்பு..!

சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவின் 40 ஆயிரம் சதுர அடி நிலம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நீதிமன்ற உத்தரவின் படி கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணா நகர் டவர் கிளப், கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்டது. தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, கலையரங்கக் கட்டிடத்துடன் சேர்த்து சுமார் 5,827 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது.

அந்த நிலத்திற்கு அருகில், விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு காலியாக இருந்த 40 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் இந்த கிளப் சேர்த்து பயன்படுத்தி வந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த நிலத்தில் அனுமதி ஏதுமின்றி கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலத்துக்கான கால ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாலும், ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்காததாலும், நிலத்தை பயன்படுத்தியதற்காக சுமார் 48.85 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டு, இடத்தை காலி செய்யும்படி, டவர் கிளப் நிர்வாகத்திற்கு கடந்த 2012ம் ஆண்டில் மாநகராட்சி உத்தரவிட்டது.

ஆனால், எந்த வித நடவடிக்கையும் டவர் கிளப் சார்பில் மேற்கொள்ளப்படவில்லை. இதனை அடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, விஸ்வேஸ்வரய்யா பூங்காவிற்கு உரிய இடத்தில் அண்ணாநகர் டவர் பார்க் கிளப் நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ள சுமார் 31ஆயிரம் சதுர அடி நிலத்தை சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையர் பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து கையகப்படுத்தினர்.

இந்த நடவடிக்கையின்போது, புளியந்தோப்பு காவல் துணை ஆணையர் சாய்சரன் தேஜஸ்வி மற்றும் அண்ணாநகர் உதவி ஆணையர் சீனிவாசுலு ஆகியோரரின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.

தொடர்ந்து மாநகராட்சி நிலத்தில் கட்டப்பட்டு இருந்த கட்டிடங்கள் கையகப்படுத்தப்பட்டு, கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் இரும்புகளால் ஆன வேலி அமைக்கப்பட்டது.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது;
மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என்றும் கட்டிடங்களை இடிக்காமல் எப்படி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது என்பது குறித்தான ஆய்வுகள் இதன்பிறகு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்…

மேலும் இடம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button