ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை… : அரசு நடவடிக்கை எடுக்குமா?
தமிழகத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை லாட்டரிச் சீட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கூலித்தொழிலாளர்கள் தங்களது அன்றாட வருமானத்தை லாட்டரிச் சீட்டுக்களை வாங்குவதிலேயே செலவழிப்பதால் அதிகமாக பாதிக்கப்படுவதாக பெண்கள் அனைவரும் லாட்டரி விற்பனையை தடைசெய்ய வேண்டி குரல் கொடுத்தனர். இதையடுத்து அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டது. ஜெயலலிதாவால் தடைசெய்யப்பட்ட லாட்டரிச்சீட்டு விற்பனை இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அமோகமாக நடைபெறுகிறது.
ஈரோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் விசைத்தறி நெசவாளர்கள் இந்த ஒரு நம்பர் லாட்டரிச்சீட்டு, சுரண்டல் லாட்டரியில் பணத்தை இழந்து தவிக்கின்றனர். விசைத்தறி முதலாளிகளிடம் அட்வான்ஸ் என்கிற பெயரில் முன்பணமாக கணிசமான தொகையை வாங்கி பணக்காரர் ஆகும் ஆசையில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு வாங்கி தங்கள் பணத்தை இழக்கின்றனர். தங்களது குடும்பத்தை நடத்துவதற்கு கந்துவட்டி, மீட்டர் வட்டி கட்டியே கஷ்டப்படுகிறார்கள். தமிழகத்தில் இந்த தொழில் தடைசெய்யப்பட்டும் சிலர் ஆளும் கட்சியினர் துணையோடு காவல்துறை உயர்அதிகாரிகள் முதல் கீழ்மட்டத்தினர் வரை மாதத்திற்கு கணிசமான தொகையை பெற்றுக் கொண்டு இந்த ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையை அனுமதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகிறார்கள்.
வாரம் முழுவதும் விசைத்தறி கூடங்களில் சம்பாதிக்கும் பணம் முழுவதும் கந்துவட்டிகாரர்களுக்கும், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுக்கும் செலவு செய்யப்படுவதால் குடும்பம் நடத்த வழியில்லாமல் சிலர் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த விசைத்தறி கூலித்தொழிலாளர்களின் கஷ்டத்தை உணர்ந்த புரோக்கர்கள் நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள் உங்களிடம் இருக்கும் உடல் உறுப்புகளை தானம் செய்தால் பத்து லட்சம் முதல் பல லட்சங்கள் உங்களுக்கு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி கஷ்டப்படும் விசைத்தறி கூலித் தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து அவர்களை பெங்களூர் அழைத்துச் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் இவர்களின் கிட்னியை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்து விடுகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில்தான் முதன்முதலில் கிட்னி திருட்டு அதிக அளவில் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அதன்பிறகு இரத்த உறவுகள் சட்டத்திற்கு உட்பட்டு சம்மதத்துடன் மட்டுமே கிட்னி கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் வரைமுறைப்படுத்தியது. அதனால் தமிழ்நாட்டில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்வது கஷ்டம் என்பதால் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு கஷ்டப்படும் தொழிலாளர்களை அழைத்துச் சென்று சோதனை செய்து வெளிநாட்டினருக்கு தனது கிட்னியை இழந்ததாக ஈரோட்டைச் சேர்ந்த தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனக்கு நேர்ந்த கொடுமைகைள நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
எனது கணவர் விசைத்தறி தொழிலாளி. எங்கள் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியில் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து விட்டார். எனது மகனும் காதல் திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் போய்விட்டார். அன்றாட குடும்பம் நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். அந்த சமயத்தில் புரோக்கர் ஒருவர் என்னிடம் உங்கள் கிட்னி கொடுத்தால் சில லட்சங்கள் தருவதாக கூறி என்னை பெங்களூர் அழைத்துச் சென்று விக்டோரியா மருத்துவமனையில் டயாலிசிஸ் பேசண்டுக்கு எனது கிட்னியை மாற்று அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவிட்டார்கள். ஆனால் என்னை அழைத்துச் சென்றவர் எனக்கு அறுபதாயிரம் மட்டும்தான் கொடுத்தார். அவர் பல லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டார். எனக்கு வங்கிக் கணக்கில் பணம் அனுப்புவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார்கள். நான் இன்று மருந்து மாத்திரை வாங்குவதற்கே மிகவும் கஷ்டப்படுகிறேன். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் என்னைப் போல் 300க்கம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்ணீர் மல்க கூறினார்.
ஒரு நம்பர் லாட்டரியில் ஈரோடு, நாமக்கல் பகுதிகளில ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து வருகின்றனர். தடைசெய்யப்பட்ட தங்கம், மயல், நல்லநேரம் போன்ற பெயர்களில் போலி லாட்டரிச் சீட்டுக்களை அரசு அதிகாரிகள் துணையோடு விற்பனை செய்கிறார்கள். ஏற்கனவே ஜெயலலிதாவால் தடைசெய்யப்பட்ட லாட்டரியை அம்மாவின் அரசு என்று அடிக்கடி கூறும் எடப்பாடி பழனிச்சாமி தடை செய்ய வேண்டும் என்பதே அந்தப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? பொறுத்திருந்து பார்ப்போம்.
– சௌந்திரராஜன்