தமிழகம்

லலிதா ஜுவல்லரி கொள்ளை : வேகமெடுக்கும் போலீசாரின் விசாரணை

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

திருவாரூரைச் சேர்ந்த கொள்ளையன் முருகனும், அவரது அக்காள் மகனான சுரேஷூம் இந்தக் கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டது, திருவாரூர் மாவட்டம் விளமல் அருகே வாகனச் சோதனையின் போது போலீசாரிடம் சிக்கிய கொள்ளையன் மணிகண்டன் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

கைது செய்யப்பட்ட அவனிடம் இருந்து நான்கரை கிலோ நகைகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கொள்ளை வழக்கில் தொடர்புடைய சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான்.

இந்த நிலையில் பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்தார். இவர் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள நறுங்குழல் நாயகி நகரில், கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி லலிதா ஜூவல்லரி நகைக் கடையை தனியாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

மனைவி, மகன், மகள் மற்றும் நாயுடன் வசித்து வந்திருக்கிறான் திருவாரூர் முருகன். ஆறாயிரம் ரூபாய் வாடகைக்கு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த அவன், பத்து மாத வாடகை தொகையான 60 ஆயிரம் ரூபாயை முன்பணமாக வீட்டு உரிமையாளரிடம் வழங்கி இருக்கிறான்.

வெல்டர் ராதாகிருஷ்ணன்

அவர் வசிக்கும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதை கண்ட கொள்ளையன் முருகன், அதனை சரி செய்ய அப்பகுதியினரிடம் முடிந்த அளவிற்கு பணத்தை திரட்டுங்கள், மீதம் தேவைப்படும் பணத்தை தாம் தருவதாக கூறியிருக்கிறார். கொள்ளையன் முருகன் இரண்டு கார்களில் அடிக்கடி வெளியே சென்று வந்த தகவலை அக்கம் பக்கத்தினர் மூலம் போலீசார் பெற்றிருக்கின்றனர்.

கடந்த மாதம் 29 ஆம் தேதி திடீரென குடும்பத்துனருடன் வெளியே சென்றதாக கூறப்படும் முருகன், அதன் பிறகு ஒன்றாம் தேதி வீடு திரும்பியதாக சொல்லப்படுகிறது. அடுத்த நாளான அதாவது லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 2ஆம் தேதி இரவுக்குப் முருகன் குடும்பத்தினரை பார்க்கவில்லை என்று கூறுகின்றனர் அப்பகுதியினர்.

இந்த நிலையில் கொள்ளையன் முருகன் தங்கியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு ஏதும் கைப்பற்றப்பட்டதா அல்லது ஏதும் சிக்கவில்லையா என்பது போன்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. தலைமறைவாக உள்ள கொள்ளையன் திருவாரூர் முருகனை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்.

திருவெறும்பூர் அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றில் புதைக்கப்பட்டிருந்த முருகனின் பங்கான 12 கிலோ தங்க நகைகளை எடுத்துச் சென்ற பெங்களூரு போலீசார், பெரம்பலூரில் முருகனுடன் திருச்சி தனிப்படை காவலர்களிடம் சிக்கினர். அப்போது ரகசிய இடத்தில் வைத்து முருகனிடம் திருச்சி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முருகன் அளித்த தகவலின்படி மதுரையை சேர்ந்த கணேசன் என்பவனை கைது செய்துள்ள திருச்சி தனிப்படை போலீசார், அவனிடம் இருந்து 6 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். நகைக்கடை கொள்ளையில் கணேசனும் ஈடுபட்டதை உறுதி செய்துள்ள போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகன் மீது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன. வடமாநிலங்களில் நடந்த பல்வேறு வங்கி, ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்களில் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த முருகனை, கர்நாடக போலீஸார் கடந்த 12ம் தேதி திருச்சி அழைத்து வந்தனர். அப்போது போலீஸாரிடம் முருகன், “திருச்சி வங்கியில் கேஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு மொத்த நகைகளையும் அள்ளிச்சென்றோம். சம்பவம் நடந்து ஒன்பது மாதமாகியும் போலீஸார் எங்களைக் கண்டுபிடிக்கவில்லை. அதனால், அடுத்து திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையைக் குறிவைத்தோம். அடுத்து கொள்ளையடித்த நகைகளைத் திருச்சி கொள்ளிடக்கரையில் வைத்து பங்கு போட்டோம்” எனக் கூட்டாளிகள் பெயரைச் சொன்னாராம்.

முருகன் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில், திருச்சி மாநகர தனிப்படை போலீஸார் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, குருவித்துறை, அம்பலக்காரத்தெருவைச் சேர்ந்த கணேசன் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த `வெல்டர்’ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரைக் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக், “திருச்சி சமயபுரம் பிச்சாண்டார் கோயில் பகுதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில், பேங்க் லாக்கரை உடைத்து 470 சவரன் தங்க நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகன் தலைமையில் சுரேஷ், மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன், தஞ்சாவூர் அடுத்த செங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கும்பல்தான் இந்தக் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது திண்டுக்கல்லில் வசித்து வரும் ராதாகிருஷ்ணனைக் கைது செய்துள்ளோம்.

எங்கள் விசாரணையில், முருகேசனும் கணேசனும் நண்பர்கள் என்பதும், அந்த வகையில் கணேசனின் உறவினரான கேஸ் வெல்டிங் தொழில் செய்துவரும் ராதாகிருஷ்ணனை அழைத்துவந்து திருச்சி வங்கிக் கொள்ளையில் கொள்ளையடித்துள்ளனர். இதற்குத் தேவையான வெல்டிங் பொருள்களை மதுரையிலிருந்து வாங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. விடுமுறை நாள்களைக் குறிவைத்துக் காத்திருந்த இந்தக் கும்பல், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்பக்க சுவரை இரண்டு நாள்கள் துளையிட்டிருக்கிறது. பின்னர், வங்கி லாக்கர்களை உடைத்து கைவரிசையைக் காட்டியுள்ளது.

கணேசனை திருச்சி தனிப்படை போலீஸார் மதுரையில் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள கணேசன் உள்ளிட்டோரை கஸ்டடியில் எடுத்து, கொள்ளையடித்த 470 சவரன் நகை மற்றும் ரூ.19 லட்சம் பணம் குறித்து விசாரிக்க உள்ளோம்” என்றார்.

இந்தநிலையில், செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்த சுரேஷ் மற்றும் கைது செய்யப்பட்ட கணேசன் உள்ளிட்டோர் திருச்சி குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். சுரேஷை, 7 நாள்களும், கணேசனை வரும் 25ம் தேதி வரையும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி திரிவேணி அனுமதித்து உத்தரவிட்டார். `விரைவில் பெங்களூர் சிறையிலுள்ள முருகனும் திருச்சி கொண்டுவரப்படுவார்’ என்கிறது காவல்துறை.

முருகனின் கூட்டாளி கணேசனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், “லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளைச் சம்பவம் நடந்தபிறகு நகைகளை கொள்ளிடக் கரையில் வைத்துப் பிரித்து கொண்டு, 4 பேரும் மதுரைக்குப் போனோம். அங்கு என்னை இறக்கிவிட்டனர். தொடர்ந்து சுரேஷ் வைத்திருந்த 950 கிராம் தங்க நகையை சமயநல்லூர் மகேந்திரனிடம் கொடுத்து மாற்றித் தரக்கூறி, அதற்காக 7 லட்ச ரூபாய் முன்பணம் வாங்கினார்கள். நான் வாங்கிய நகைகளை எனது வீட்டின் அருகே பதுக்கி வைத்துள்ளேன்’’ எனக் கூறி 6 கிலோ தங்க நகைகளை எடுத்துக் கொடுத்துள்ளார்.

மேலும், “கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த என்னைக் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கைது செய்த போலீஸார் சேலம் சிறையில் அடைத்தனர். அங்குதான் முருகன் எனக்கு அறிமுகமானார். அடுத்து சில வழக்குகளில் சிறையில் இருந்த முருகனை, ஜாமீனில் வெளியே எடுக்க உதவினேன். இதனால் முருகன் என்னை முழுமையாக நம்பியதுடன், செய்யும் வேலைகளுக்கு உடன் வைத்துக்கொண்டார்.

கடந்த 2014ம் ஆண்டு ஆந்திரா மாநிலம் மற்றும் கர்நாடகப் பகுதிகளில் முருகன் செய்த கொள்ளைச் சம்பவங்களில் கிடைத்த பணத்தை முருகன், சினிமாவில் முதலீடு செய்தார். அவருக்கு அடுத்து சில காரணங்களால் உடல்நலக் குறைவு ஏற்படவே, அவர் நடத்திவந்த சினிமா நிறுவனமும் மூடப்பட்டதாகக் கூறினார். அதனையடுத்து முருகன் அவருக்குச் சொந்தமான பெங்களூரு வீட்டில் குடியேறினார். தொடர்ந்து உடல் நிலை மோசமாகவே, திருவாரூருக்கு வந்தார்.

இந்நிலையில், முருகனுக்கு வலது கரமாகச் செயல்பட்ட தினகரன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதனால், அவருக்கு நம்பிக்கையான நபராக என்னை வைத்துக்கொண்டார். கடந்த மூன்று வருடங்களாகச் சென்னையில் சில சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாலும், அவரால் ஆந்திரா சினிமா நிறுவனம் மூடியதிலிருந்தும், பொருளாதாரச் சிக்கலிலிருந்தும் மீள முடியவில்லை.

அதையடுத்துதான் திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியைக் குறி வைத்தோம். அந்தக் கொள்ளையில் போலீஸார் எங்களைப் பிடிக்கவில்லை. அதனால் முருகன், லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார். இந்தச் சம்பவத்திற்கு வெல்டிங் தேவையில்லை என்பதால் ராதாகிருஷ்ணனை அழைக்கவில்லை.
லலிதா ஜுவல்லரி நகைக் கடையில் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தை வைத்து கர்நாடகாவில் குடும்பத்துடன் குடியேற முருகன் திட்டமிட்டார். ஆனால், உறவினர்களுக்கு நெருக்கடி அதிகமாகவே சுரேஷும், முருகனும் நீதிமன்றங்களில் சரணடைந்தனர். போலீஸ் விசாரணையில் முருகன் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என நம்பினேன். ஆனால் இப்படிச் செய்துவிட்டார்” என போலீஸாரிடம் கணேசன் புலம்பினாராம்.

  • முருகேசன், சுப்பிரமணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button