தமிழகம்

அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்த கீழடி..! : வெளிவந்த புதிய ஆதாரங்கள்…

கீழடியில் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து கொண்டிருப்பது பற்றி அனைவரும் அறிந்த விஷயம்தான். அதன் நான்காம் கட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த முடிவுகள் வெளியான அடுத்த வினாடியே கீழடி உலக நாடுகளே உற்று நோக்கக் கூடிய இடமாக மாறியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம்தான் இன்று தமிழர்களின் வரலாற்றையே திருத்தி எழுத வைக்கம் ஒரு மகுடமாக விளங்குகிறது. அங்கு கிடைத்த பொருட்கள் எல்லாமே ஆய்வாளர்களை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அதன் தொன்மையை அறிவதற்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனெலிட்டிக்ஸ் ஆய்வகத்திற்கு சில பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஆக்ஸினேட்டர் மாஸ் பெட்ரோ மெட்ரி என்னும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மிகவும் நம்பகத்தன்மை கொண்ட அந்த ஆய்வின் முடிவுகள் தமிழகர்களின் தொன்மையையே புரட்டிப் போட்டுள்ளது. இதுவரை சங்க காலத்தின் தொன்மை தொடர்பாக நிலவி வந்த அனைத்து கருத்துக்களையம் இந்த ஆய்வு தகர்த்தெறிந்துள்ளது. தமிழின் இலக்கிய இலக்கண வளங்கள் செழித்தது சங்க காலத்தில் தான் என்று பலரும் கூறுவதுண்டு.

ஆண், பெண் என இருபாலரும் அக்காலத்தில் புலவர்களாக இருந்துள்ளனர். அப்படிப்பட்ட சங்க காலத்தின் துவக்கம் கிமு மூன்றாம் நூற்றாண்டாக இதுவரை கருதப்பட்டது. கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்துக்களின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமிய எழுத்துகளின் காலம் மூன்றாம் நூற்றாண்டுதான் என்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் சங்க காலம் என்பது அதற்கும் முந்தைய காலம். அதாவது ஏசு பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது என்று தற்போது கீழடியின் ஆய்வுகள் உறுதி செய்துள்ளது. அங்கு கிடைத்துள்ள தமிழ் பிராமிய எழுத்துக்கள் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி என்பது வெறும் வாய்ச்சொல் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் எழுத்தறிவு பெற்றுள்ளான் என்பதை உலகத்தரத்தில் நிரூபித்துள்ளது கீழடி ஆய்வுகள். இதுவரை இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சிந்துவெளி நாகரீகம் தான் முதலாம் நகர நாகரீகமாக அறியப்பட்டுள்ளது. அதற்கடுத்த படியாக கங்கை சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் இருந்தது கண்டறியப்பட்டது. அதன் தொன்மை கிமு ஆறாம் நூற்றாண்டாக உறுதி செய்யப்பட்டது.

தற்போது அதே ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகரீகமாக கீழடி நாகரீகம் இருந்துள்ளதை கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போதைய கண்டுபிடிப்புதான். ஆனால் தொடர்ந்து அங்கு அகழ்வாய்வை மேற்கொண்டால் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை கண்டறிய வாய்ப்புகள் உள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கீழடியில் கிடைத்த பல பொருட்கள் சிந்துவெளி நாகரீகத்தில் கிடைத்த பொருட்களோடு ஒத்துப்போகிறது. அந்தக் காலத்திலேயே தமிழர்கள் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வாழ்ந்த மக்களோடு வர்த்தகத் தொடர்பு கொண்டதற்கான பல ஆதாரங்களும் கீழடியில் கிடைத்துள்ளன. அதேபோல் ரோம் போன்ற பகுதிகளில் கூட தமிழர்கள் வர்த்தக ரீதியாக தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கீழடியின் ஆய்வில் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் ரோம் நாட்டைச் சேர்ந்த அரினென் என்ற ஒரு வகை பானை ஓடு இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரினென் பானை ஓடுகள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் புழக்கத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர்த்து கீழடியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆடு, பசு, காளை, எருமை ஆகியவற்றின் எலும்புத் துண்டுகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே ஆதித் தமிழன் உணவுக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் ஆடு, மாடுகளை நேசத்தோடும், பாசத்தோடும் வளர்த்து வந்துள்ளான் என்பது இந்த ஆய்வில் தெள்ளத் தெளிவாகிறது. அதோடு இங்கு கிடைத்துள்ள பானை ஓடுகளில் குவிரன், ஆத(ன்) உள்ளிட்ட பெயர்கள் தமிழ் பிராமிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி தறியில் தொங்கவிடும் கருங்கல் போன்ற பொருட்கள் இப்பகுதியில் கிடைத்திருப்பதால் இப்பகுதி மக்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இங்கு ஒட்டுமொத்தமாக சுடுமண்ணால் ஆன பதிமூன்று மனித உருவங்கள், மூன்று விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள் மற்றும் பிற அணிகலன்கள் கிடைத்துள்ளன. ஆனால் வழிபாடு தொடர்பான எந்த ஒரு சிலையோ அல்லது குறியீடோ இங்கு இதுவரை கிடைக்க வில்லை. ஆகையால் ஆதித்தமிழன் இயற்கையைத் தான் தெய்வமாக வழிபட்டானா என்ற சந்தேகமும் எழுகிறது.

கிமு இரண்டாம் நூற்றாண்டில் சமணர்களால் தமிழகத்தில் பரப்பப்பட்டதே தமிழ் என்று சில ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. ஆனால் அவர்களது கூற்றைத் தகர்த்தெறிந்து கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு வந்து நிற்கிறது கீழடி ஆய்வு. “தமிழ்” என்பது யார் தந்த கொடையும் அல்ல. நாங்கள் “சுயம்பு” என்பதை மீண்டும் உலகறியச் செய்துள்ளது கீழடி. இன்னும் சிலகாலம் நிறைய ஆய்வுகள் செய்தால் உலகில் யாரும் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு சங்கத் தமிழ் பொறிக்கப்பட்ட பொருட்கள் கீழடியில் கிடைக்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

  • சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button