நாமக்கலில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்… : வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே 28 வயது இளம்பெண், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 11ம் தேதி, கரப்பாளையும் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பட்டதாரி பெண் ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் இரு சமூகத்தினர் இடையேயான பிரச்னையாக மாறியுள்ளது.
இந்நிலையில் வெல்லக்கொட்டகை, வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைப்பது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியது.
இந்த நிலையில், ஜேடர்பாளையத்தில் கரும்பு ஆலைக் கொட்டகையில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைக்கு தீ வைக்கப்பட்டது. அறையில் இருந்த ராகேஷ், சுகுராம், யஸ்வந்த், கோகுல் ஆகிய நான்கு தொழிலாளர்கள் காயமடைந்தனர். இந்த நிலையில் இளம்பெண் கொலை வழக்கை சிஙிசிமிஞி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-, நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு கிராமத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிப்பு தொழிலகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றியுள்ளனர். இவர்கள் தங்கியிருந்த கொட்டகையை உடைத்து, உள்ளே மண்ணெண்ணெய் நனைத்த துணியில் தீ வைத்து வீசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் நான்கு வட மாநிலத் தொழிலாளர்கள் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வட மாநிலத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து இப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதுடன் ஆங்காங்கு சில தீ வைப்பு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. இதன்மீது காவல்துறை இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
வட மாநிலங்களிலிருந்து வேலை தேடி தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ள நிலையில், மோதலை உருவாக்கும் வெறுப்பு அரசியல் சக்திகளின் ஊடுருவல் குறித்து விசாரித்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.