தமிழகம்

நலிவடைந்து வரும் உலகப் புகழ்பெற்ற சுங்குடி சேலை தயாரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் என்றாலே உலக அளவில் புகழ் பெற்ற பல பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டும், விளைவிக்கப்பட்டும் வருகின்றது. இதில் திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழை, எலுமிச்சை, வெற்றிலை, திண்டுக்கல் பிரியாணி, வரிசையில் சின்னாளப்பட்டி சுங்குடி சேலையும் ஒன்றாகும்.
16 கஜம் என்று சொல்லும் நீட்டல் அளவை மூலம் சொல்லும் சுங்குடி சேலை என்பது கைத்தறியினால் தயாராகும் பருத்தி சேலைகளை திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வெள்ளை நிற காட்டன் சேலைகளாக வாங்கி வந்து சாயங்கள் நனைத்து அதன் பிறகு ஸ்கிரீன் பிரிண்டிங் மூலம் சுங்குடி, சிங்கிள் மற்றும் டபுள்கலர் டிசைன், முடிச்சு, கல்கட்டா, கைபுட்டா உள்ளிட்ட பல்வேறு விதமான டிசைன்களை மக்கள் விரும்பும் வண்ணங்களில் தருகின்றனர்.

மன்னர்கள் காலத்திலேயே புகழ் பெற்று விளங்கிய சுங்குடி சேலைகளின் பிறப்பிடமாக சினனாளப்பட்டி விளங்குகின்றது. அனைத்து தட்ப வெப்பத்திற்கும் ஏற்ற வகையில் பருத்தி ஆடையாக உள்ளதாலும், எளிதில் சாயம் போகாமல் கஞ்சி போட்டு இஸ்திரி செய்து அணியும் போது மெருகு ஏறும் தன்மை உள்ளதால் அனைத்து தரப்பு மக்களின் தேர்வாக சுங்குடி சேலை உள்ளது. குறிப்பாக கல்லூரி, அலுவலகம் மற்றும் ஆளுமை திறனுள்ள வேலைகளில் உள்ளவர்களின் தோற்றத்தை மேன்மை படுத்தி காண்பிப்பதால் உயர் தட்டு மக்களின் முதல் தேர்வாக சின்னாளப்பட்டி சுங்குடி உள்ளது. இந்த இரக சேலைகள் நூலாக இருப்பது முதல் சேலையாக நெய்து பிரிண்டிங், அயர்னிங் வரை மனித உழைப்பினால் மட்டுமே தயாராவதால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாத வண்ணம் இயற்கை சாயமே ஏற்றபட்டு வருகின்றது. முன்பு சுங்குடி சேலை ஆர்டர் கொடுத்து கடைகளுக்கு வாங்கி விற்க வேண்டும் என்றால் அதற்கு சில நாட்கள் வாரங்கள், மாதங்கள் வரை பொறுத்திருக்க வேண்டும், அந்தளவு தொழில் சிறந்து விளங்கியதோடு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆனது.இதனால் தொழிலும் சிறந்து விளங்கியோதோடு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுங்குடி சேலை தயாரிப்பு, விற்பனை, உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாயப்பட்டறைகளினால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி மாவட்ட நிர்வாகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கடும் நிபந்தனைகளை விதித்து சுங்குடி சேலை உற்பத்தியையும் இதனை நம்பி இருந்த தொழிலாளர்களின் நிலையும் கேள்விக்குரியதாகி உள்ளது.
இது குறித்து சின்னாளப்படடி சுங்குடி சேலை தொழிலாளர்கள் கூறும்பொழுது சீரும் சிறப்புமாக இருந்த இந்த சுங்குடி சேலை உற்பத்தி இன்று சீரழிந்து வருகின்றது. அரசு சொல்லும் முறையில் நாங்கள் மறு சுழற்சி முறையில் சாயப்பட்டறைகளை இயக்க தயாராக உள்ளோம். ஆனால் அரசு அதற்குரிய வழிமுறைகளை எங்களுக்கு தெரிவிப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றது. இது ஒருபுறம் என்றால் எங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய மாவட்ட தொழில் மையம், முன்னோடி வங்கி, மாவட்ட நிர்வாகம், மாசுகட்டுப்பாடு வாரியம் உள்ளிட்டவைகள் கண்டு கொள்வதில்லை. வங்கிகள் கடனுதவி செய்ய மறுக்கின்றனர். இதனால் நாங்கள் வேறு தொழிலுக்கு செல்லும் நிலையே ஏற்பட்டுள்ளது. அரசு அறிவிக்கும் கைத்தறி நெசவாளர்களுக்கான எந்த திட்டமும், செயல்படுத்தப்படுவதில்லை.
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும், ஹைதராபாத், கல்கட்டா, ஆந்திரா, கேரளா டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் சுங்குடி சேலை விற்பனையை அதிகரிக்க அரசு எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தொழில் முனைவோர் கூட்டங்களை ஏற்பாடு செய்து எங்களது உற்பத்தியை மேலும் பரவலாக கொண்டு செல்ல நிலைக்குழு ஏற்படுத்தி தர வேண்டும்,மேலும் அனைத்து தரப்பு மக்களும் சுங்குடி சேலைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும கோரிக்கை விடுத்துள்ளனர்.
& சி.முருகேசன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button