அரசியல்

இடைத்தேர்தல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்..!

இடைத்தேர்தலை எதிர்கொள்ளும், நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளில், அரசியல் கட்சியினர், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில், ஈடுபட்டுள்ளனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் மூன்று தொகுதிகளிலும், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரியகுளத்தில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த திமுக ஆட்சி காலத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு கூட அனுமதி கேட்டு வந்த நிலையில், தற்போது, அதிமுக ஆட்சியில், காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு, தமிழ்நாடு அமைதி பூங்காவாக மாறியுள்ளதாக அவர் கூறினார். பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்களின் மறதியை எதிர்கட்சிகளின் சொத்தாக நினைக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

நாங்குநேரியில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார் பட்டியில், திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட செல்லூர் ராஜூ “தமிழ்நாட்டில், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால்தான், சீன அதிபரும் – இந்திய பிரதமரும் மாமல்லபுரத்தில் சந்திக்கிறார்கள்” என பெருமிதம் தெரிவித்தார்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட, புதுச்சேரி 45 ரோடு சாலையில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை, முதலமைச்சர் நாராயணசாமி, அம்மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் திறந்து வைத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் நாராயணசாமி, மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதற்கு, புதுச்சேரி சார்பில் கடும் எதிர்ப்பை பதிவு செய்வதாக தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் முழுவதையும் தடுக்கும் நோக்கோடு செயல்படும், கர்நாடக அரசின் செயலுக்கு எதிராக, நீதிமன்றத்தை நாட உள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி கூறியிருக்கிறார்.

புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன், பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து வீடு வீடாக வாக்கு சேகரித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி, புதுச்சேரியில், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில், சட்டமன்றம், பாதுகாக்கப்பட்ட மக்கள் மன்றமாக இல்லை எனக் குற்றம்சாட்டினார்.

பிரச்சாரத்தில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னீர்பள்ளம் சென்ற அவருக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நடந்து சென்ற படி மக்களை சந்தித்த அவர் வாக்கு சேகரித்தார்.
பின்னர் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் குடிநீர் பிரச்சனைக்கு திட்டம் தீட்டி அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரிவித்தார்.

மேலும், “இந்த ஆட்சியில் காய்கறிகள், பால், மின் கட்டணம் என அனைத்தும் விலை ஏறி விட்டன. இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
மத்திய அரசுக்கு பணிந்து நடக்கும் ஆட்சியாக தான் அதிமுக ஆட்சி உள்ளது. நீட் தேர்வு பயங்கரத்தால் 8 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

நீட் தேர்விற்கு எதிராக அனுப்பப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டதை தமிழக அரசு மறைத்துவிட்டது. கோதாவரி – காவிரி இணைப்பு, நந்தன் கால்வாய் திட்டம், ஏரி குளங்களை நிரப்புவோம், அனைத்து வீட்டிற்கும் தண்ணீரை கொடுப்போம் என்றெல்லாம் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து பேசி வருகிறார்.
ஜெயலலிதாவிற்கு மக்கள் அளித்த வாக்கில் தான் பழனிசாமி முதலமைச்சராக இருந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கும் நமக்குமான வெற்றி வித்தியாசம் 1.1% மட்டுமே. என்னை பார்த்து சிரித்ததால் ஓ.பன்னீர்செல்வம் பதவியை இழந்தார்.

சசிகலா மூலம் பழனிசாமி முதலமைச்சர் ஆனார். இவ்வாறு ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டு, என் மீது குற்றம்சாட்டுகிறார். நான் தயாராகத் தான் இருக்கிறேன். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரச் சொல்லுங்கள்.
இருவரும் தேர்தலை சந்திக்கலாம். மக்கள் யாரை வெற்றி பெறச் செய்கிறார்கள் என்று பார்த்துவிடலாம். திமுகவிற்கு தான் மகத்தான எதிர்காலம் இருக்கிறது. இந்த ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட உதயசூரியனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று கூறினார்.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஏர்வாடி பஜாரில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளூர்காரர். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். நீங்கள் கொடுக்கும் மனுவை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து செயல்படுத்துவதில் வல்லவர். எனவே, அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தலை திணித்தவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இனிமேல் எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் ராஜினாமாவை எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மத்திய அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தை கொண்டு வந்தால் நாங்கள் ஆதரிப்போம். மக்களுக்கு எதிராக எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை அ.தி.மு.க. எதிர்க்கும். கூட்டணி வேறு, கொள்கை வேறு. ஆனால் கொள்கையை மாற்றிக் கொள்ளும் ஒரே கட்சி தி.மு.க. மட்டும் தான்.

நான் விபத்தால் முதல்-அமைச்சர் ஆகிவிட்டேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். 1987-ம் ஆண்டு நானும் எம்.எல்.ஏ., மு.க.ஸ்டாலினும் எம்.எல்.ஏ. தான். நான் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா 9 முறை எனக்கு வாய்ப்பு வழங்கினார். அதில் எம்.எல்.ஏ.வாகவும், எம்.பி.யாகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு, தற்போது முதல்-அமைச்சர் ஆகி உள்ளேன். எங்களுடைய பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களால் தான் நான் முதல்-அமைச்சர் ஆகி இருக்கிறேன். இது பெரும்பான்மையான அரசு.

ஜெயலலிதா வழியில் நாங்கள் இரவு-பகல் பாராமல் மக்கள் பணி செய்து வருகிறோம். வீடு இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும் காங்கிரீட் வீடு கட்டித்தரப்படும். அதற்கான பணி தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பேசினார்.

  • உதுமான்அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button