ஒரு தலைக் காதலால் சிறுமி கொலை..!
மாமல்லபுரம் அருகே காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமியை கத்தியால் குத்திக் கொன்ற ஆந்திராவைச் சேர்ந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
செங்கற்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கட்டிடம் ஒன்றில் கொத்தனாராகப் பணியாற்றி வரும் ஜெயராஜ் என்பவரது மகள் 17 வயதான லாவண்யா.
சம்பவத்தன்று காலையில் லாவண்யாவை அவருடைய தந்தையுடன் பணிபுரிந்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த துர்காராவ் என்பவன் கத்தியால் சரமாரியாகக் குத்தி கொலை செய்தான். துர்காராவை கைது செய்து விசாரித்தபோது, ஒரு தலைக் காதலில் இந்த கொலை அரங்கேறியிருப்பது தெரியவந்தது.
ஜெயராஜின் மனைவி ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் பட்டிபுலத்தில் தங்கி கட்டிட வேலை செய்துவர, லாவண்யா விஜயநகரத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்தார். அதே பகுதியைச் சேர்ந்த இந்த துர்காராவும் லாவண்யாவோடு ஒரே பள்ளியில் படித்து வந்ததாகவும் அவன் லாவண்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. படிப்பை முடித்து பட்டிபுலம் வந்த லாவண்யாவை பின் தொடர்ந்து வந்த துர்காராவ், அவருடைய தாய், தந்தையிடம் நல்லவன் போல் பேசி, அவர்களது சிபாரிசிலேயே அங்கு 6 மாதங்களுக்கு முன் வேலைக்கும் சேர்ந்திருக்கிறான்.
வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து தன்னை காதலிக்கும்படி லாவண்யாவை அவன் தொல்லை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமியான லாவண்யா, அவனுடைய காதலை ஏற்காமல், இந்த விஷயத்தை தனது பெற்றோரிடமும் சொல்ல பயந்து ஒதுங்கிச் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில்தான் வியாழக்கிழமை காலை லாவண்யாவை வழக்கம்போல் காதலிக்க வற்புறுத்தியவன், அவர் சம்மதிக்கவில்லை என்றதும் கத்தியால் முகம், கழுத்து, வயிறு என 6 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளான். படுகாயமடைந்த லாவண்யா, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் நிகழும் பதின் பருவ வயதில் எந்த ஒரு பிரச்சனையாயினும் பெற்றோரிடத்தில் பகிர்ந்துகொள்ளும் தைரியத்தையும் பக்குவத்தையும் பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
துர்காராவின் தொல்லை குறித்து லாவண்யா அவரது பெற்றோரிடம் தெரிவித்திருந்தால் கொலையை தடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.