ஆசிரியர் பணிக்கு ரூபாய் 20 லட்சம் : முறைகேட்டில் சௌடாம்பிகை மேல்நிலைப்பள்ளி நிர்வாகம்
விருதுநகர் அருகே அல்லம்பட்டி கிராமத்தில் சௌடாம்பிகா மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் தாளாளராக வீரசேகர் என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இந்தப் பள்ளியின் நிர்வாகம் வந்ததில் இருந்து பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இது குறித்து அல்லம்பட்டி கிராம பொதுமக்களிடம் விசாரிக்கையில்..
தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசின் அனுமதி பெற்று சுயநிதி (Self Finance) யில் தான் பள்ளிகளை நிர்வகித்து வருகிறார்கள். பள்ளியில் கட்டிடம் கட்டுவதில் இருந்து பள்ளிக்குத் தேவையான நிர்வாக செலவுகளையும், அவர்களே செலவு செய்ய வேண்டும் என்பது தான் விதி. பள்ளியின் மாணவ, மாணவியர்களுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு அரசிடம் அனுமதி பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவர்களால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி முறையான அனுமதி பெற்றவுடன் அந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் எதுவும் இந்தப் பள்ளியில் கடைபிடிக்கப்படுவதில்லை. இந்தப் பள்ளியின் தாளாளரும், செயலாளரும் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தன்னிச்சையாக ஆசிரியர்களை நியமனம் செய்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் இந்தப் பள்ளியில் தனக்கு பணம் கொடுத்த ஒருவரை பணி உயர்வு செய்வதற்காக கடந்த முப்பது வருடங்களாக இந்தப் பள்ளிக்காகவும், பள்ளியின் வளர்ச்சிக்காகவும் கடுமையாக உழைத்த மல்லிகா என்னும் ஆசிரியையை கட்டாய விருப்ப ஓய்வில் செல்லுமாறு வற்புறுத்தி இருக்கிறார்கள். அவர் அதற்கு சம்மதிக்க மறுத்ததும் சில வருடங்களுக்கு முன் ஒரு மாணவனை திட்டியதாக புகார் இருப்பதாக கூறி நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படாவிட்டால் நீங்கள் ரொம்ப கஷ்டப்படுவீர்கள் என்று மிரட்டி வற்புறுத்தி மல்லிகா என்ற ஆசிரியரை கட்டாய விருப்ப ஓய்வில் ஓய்வு பெற வைத்து தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டார்களாம்.
ஒருவர் ஓய்வு பெற வேண்டுமானால் முப்பது நாட்களுக்கு முன் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அதிகாரிக்கு முறையாக கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால் மாவட்டக் கல்வி அதிகாரியின் அனுமதி இல்லாமல் இவர்கள் தன்னிச்சையாக இவர்களாகவே மல்லிகா என்ற ஆசிரியருக்கு ஓய்வு கடிதம் கொடுத்து அவரை ஓய்வு பெறவைத்தனர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார்கள். ஆனால் அந்தக் கடிதத்தை சம்பந்தப்பட்ட அதிகாரி ஏற்கவில்லை. மல்லிகா என்ற ஆசிரியர் இருந்த இடத்திற்கு தற்போது இருபது லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு ஒருவரை பணியல் அமர்த்தியிருக்கிறார்களாம்.
இதுகுறித்து கேள்வி கேட்டால், எங்கள் பள்ளி சிறுபான்மையினர் பள்ளி என்றும் எங்களுக்கு முப்பது சதவீதம் இடஒதுக்கீடு இருப்பதாகவும் கூறுகிறார்களாம்.
ஆனால் இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் விசாரித்ததில் இந்தப் பள்ளிக்கு சிறுபான்மையினர் இடஒதுக்கீடு தற்போது இல்லை என்றும் அது இரத்து செய்யப்பட்டு சில வருடங்கள் ஆனதாகவும் கூறுகிறார்கள்.
இந்தப் பள்ளியில் தற்போது கடந்த மூன்று மாதங்களாக 23 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கும், குடும்ப செலவுகளை சமாளிக்க கடன் வாங்கி கஷ்டப்படுகிறார்கள். சில தினங்களில் தீபாவளிப் பண்டிகை வர இருப்பதால் அதை எப்படி சமாளிப்பது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
- அன்பு