தமிழகத்தில் பால் தட்டுப்பாடு அபாயம்..!
தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 275 பால் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை 55 டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு சொந்தமானது ஆகும்.
இந்த லாரிகளுக்கு 2016ஆம் ஆண்டு டெண்டர் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் 2018 டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
புதிய ஒப்பந்தம் கொண்டுவர காலதாமதம் ஏற்பட்டதால், பழைய டெண்டர் விதிமுறைகள் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதற்கு லாரி உரிமையாளர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்த கால அவகாசம் முடிந்த பின்னரும், அதே வாடகைக்கு பால் டேங்கர் லாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கடந்த 10ஆம் தேதி டெண்டரை ஆவின் நிர்வாகம் திடீரென ரத்து செய்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதுதொடர்பாக ஆவின் ஒப்பந்த பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சுப்பிரமணி, சரவணன் ஆகியோர் நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் லாரி வாடகை கட்டுப்படியாகாமல், நஷ்டத்திற்கு இயங்கி வந்தன. ரூ.20 கோடி வரை ஆவின் நிர்வாகம் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. இதனால் லாரி ஓட்டுநர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. விரைவில் தீபாவளி வருகிறது. அதற்கு ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்க வேண்டும். எனவே டெண்டரை நடத்தி வாடகையை இறுதி செய்ய வேண்டும். நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கைகளை அரசும், ஆவின் நிர்வாகமும் ஏற்றுக் கொள்ளவில்லை. இனிமேலும் எங்களால் லாரியை இயக்க முடியாது.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள பால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதனால் பால் விநியோகம் பாதிக்கப்படும். தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும். எனவே அரசு தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.