பல்லடத்தில் பழுதான லாரியும் — டெரர் ஆன ஓனரும்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ளது ஜோத்தியம்பட்டி. இங்கு குடியிருந்து வருபவர் சண்முக சுந்தரம். லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் சண்முக சுந்தரத்தின் டாரஸ் லாரி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பழுதாகிவிட்டது. இதனை அடுத்து பல்லடத்தை அடுத்த பனப்பாளையத்தில் உள்ள பிரபல லாரி சர்வீஸ் செண்டரில் சர்வீஸ் செய்வதற்காக விட்டுள்ளார். பின்னர் சுமார் 15 நாட்களுக்கு பிறகு லாரி சரி செய்துவிட்டதாகவும் கட்டணமாக ரூபாய் 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பில் கொடுத்துள்ளனர். பில் தொகையை செலுத்திய சண்முகசுந்தரம் லாரியை ஊருக்கு எடுத்து செல்லும் போது பழுதாகியுள்ளது.
இதனை அடுத்து சர்வீஸ் செண்டருக்கு போன் செய்த லாரி உரிமையாளர் லாரியில் சத்தம் வருவதாக கூறியுளளார். பின்னர் லாரி சர்வீஸ் செண்டரில் இருந்து வந்த மெக்கானிக்குக்கள் லாரியை திரும்பவும் சரி செய்ய எடுத்து சென்றுள்ளனர். இதனிடையே சண்முக சுந்தரத்தை போனில் அழைத்த சர்வீஸ் செண்டர் மேலாளர் பில் அமெளன்ட் 2 லட்சத்து எழுபதாயிரத்தை கட்டசொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முக சுந்தரம் தனது உறவினர்களுடன் பல்லடத்தில் உள்ள லாரி சர்வீஸ் செண்டருக்கு நேரில் வந்து விசாரித்துள்ளார். அப்போது அங்கிருந்த மேற்பார்வையாளர் மற்றும் மெக்கானிக்குகள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். மேலும் ரிப்பேரான பாகத்தை விடுத்து நல்ல நிலையில் உள்ள பாகத்தை மாற்றிவிட்டு ரிப்பேரான பாகத்தை சரி செய்யாமல் கோட்டைவிட்டது தெரிய வந்தது.
இதனால டெரரான லாரி ஓனர் தனது காரை சர்வீஸ் செண்டரின் முன்பாக குறுக்கே நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் தற்கொலை செய்துகொள்வதை தவிர வழியில்லை எனவும், தனக்கு விஷத்தை வாங்கித்தருமாறு சர்வீஸ் செண்டர் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். இதனால் அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன உற்பத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கும் இது போன்ற லாரி விற்பனை நிறுவனங்கள் விற்பனைக்கு பிந்தைய சேவையிலும் முழு கவனம் செலுத்தி வாடிக்கையாளர்களின் வாகனங்களை பராமரிக்கும் பிரிவில் கைத்தேர்ந்த ஆட்களை நியமிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.