நீட் ஆள்மாறாட்ட விவகாரம்… : தாய், மகள் கைது!
நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை பத்துப் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும், மற்ற எட்டுப் பேர் தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முகமது சஃபி அவரது மகன் இர்ஃபான், சிறையில் அடைக்கப்பட்ட பிரியங்கா அவரது தாயார் மைனாவதி ஆகியோரைத் தவிர அனைவரும் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதில், சென்னையைச் சேர்ந்த பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த 11-ம் தேதி தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜாமீன் கோரியவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கல்லூரி துணையில்லாமல் தவறுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை.
கல்லூரி சேர்க்கையின் போது இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு குழுவை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார். அப்போது சி.பி.சி.ஐ.டி தரப்பிடம், “ஏன் கல்லூரி சான்றிதழ் சரிபார்ப்புக் குழுவினரை விசாரிக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி, சாய்சத்யா மருத்துவக் கல்லூரி, பாலாஜி மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி, தேனி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டியைச் சேர்ந்த 24 பேருக்கு சம்மன் அனுப்பியது சி.பி.சி.ஐ.டி.! சம்பந்தப்பட்டவர்கள் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடந்தது.
இது ஒருபுறம் என்றால், பிரவீன், சரவணன், ராகுல், டேவிஸ் ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, மருத்துவக் கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு கமிட்டியிடம் நடத்தப்படும் விசாரணை, இன்னும் முடிவடையவில்லை என சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மீ¢ண்டும் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணையின் போது என்ன நடந்தது என நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரி ஒருவர், “மாணவர்களின் சேர்க்கையின் போது அவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த அனைவரையும் விசாரணைக்காக அழைத்தோம். அனைவரும் சொல்லும் விசயம் ஒன்றே ஒன்றுதான். ’நீட் ஆவணங்களில் உள்ள புகைப்படமும், சேர்க்கையின் போது வந்த நபருக்குமான உருவ ஒற்றுமை ஓரளவிற்கு சரியாகவே இருந்தது.
ஆதார் கார்டில் நம்ம புகைப்படம் எப்படி இருக்கிறது? அது மாதிரி இருக்கும் என்றுதான் நினைத்தோம்!’ என்று கூறி கலாய்த்தனர். அவர்கள் கூறுவது சரிதான். விசாரணையின் போது பிடிபட்ட அனைவரது புகைப்படங்களையும் முதலில் சேகரித்தோம். குறிப்பாக பள்ளிப்பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேகரித்து, ஒப்பிட்டுப் பார்த்தோம்” என்றார்.
தொடர் விசாரணை, தொடர் கைதுகள், தொடர் ஜாமீன் மனுக்கள் எனப் பரபரப்பாகச் சென்றுகொண்டிருக்கும் நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
- ஜெ.அபு