தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள்…
கன்னியாகுமரியில் 10-ம் வகுப்பு சிறுமி ஒருவரின் பெற்றோர் தனது மகளை இரணியல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த சிறுமி கோவில் திருவிழாவின்போது யானை ஊர்வலத்திற்கு யானை பாகன் ஒருவருடன் உதவியாளராக வந்த இரணியல் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவரைக் காதலித்ததாகவும், கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வல்லுறவு செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.
அந்த சிறுமியை பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த சிறுவனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகர்கோயில் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே பகுதியில் 12ம் வகுப்பு மாணவி ஒருவரை கர்ப்பமாக்கியதாக 18 வயது வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பாலியல் தொடர்பான இரு குற்றச் சம்பவங்கள் நடந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெண் ஒருவரின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தச் சிறுமிக்கும் பக்கத்து வீட்டு இளைஞனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், அந்தச் சிறுமிக்கு கடந்த சில தினங்களாக உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், பெற்றோர் இரணியலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அந்த சிறுமி 6-மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பெற்றோர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 18 வயது இளைஞனை காதலித்து வந்ததாகவும் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி அவரது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சிறுமியை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். தான் மட்டுமே தவறுக்கு காரணம் இல்லை என்றும் அவர் அழைத்ததின் பேரில்தான் தனிமையில் கழித்ததாகவும் கூறிய அந்த இளைஞர், எனக்கு மட்டும்தான் தண்டனையா எனக் கூறி தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தார். போலீசார் அவரை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமான கோவையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவாகி வருகின்றன. கோவை மாநகரில் மட்டும் ஐனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 52 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 26 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு ஐனவரி முதல் டிசம்பர் வரை மொத்தமாக 40 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. ஆனால் தற்போது கடந்த ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளை காட்டிலும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடைய இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் கோவை மாநகரில் பதிவாகும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கின்றது.
உண்மையில் பெண் குழந்தைகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் காவல் நிலையங்களில் வழக்குகளாக பதிவாகி இருப்பதை விட அதிகம் இருக்கும் எனவும், பல்வேறு தடைகளை கடந்துதான் இவ்வளவு வழக்குகள் பதிவாகி இருப்பதாக ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா தெரிவித்தார். மேலும் பொது முடக்க காலத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து இருப்பதற்கு காவல்நிலையங்களில் பதிவாகியுள்ள போக்சோ வழக்குகள் உதாரணம் எனவும் ராதிகா தெரிவித்தார்.
காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாவதற்கு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணம் என வழக்கறிஞர் சர்மிளா தெரிவித்தார். முதலில் புகார் கொடுக்க பயப்படும் நிலை இருந்ததாகவும் ஆனால் இப்போது, பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியல் தெரியாது என்பதை உணர்ந்துள்ளதால் தைரியமாக புகார் அளிக்கின்றனர் என தெரிவித்த அவர், புறநகர் மற்றும் ஊரக பகுதிகளில் இதுபோன்று புகார்கள் கொடுப்பது குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தார். தவறான தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை கிராம பகுதிகளில் அதிகரிக்க வேண்டும் எனவும் கடுமையான தண்டணை கிடைக்கும் என்ற உணர்வு ஏற்பட்டால்தான் போக்சோ வழக்குகள் பதிவாவதை தடுக்க முடியும் எனவும் வழகறிஞர் ஷர்மிளா தெரிவித்தார்.
குழந்தைகளிடையே தொடர்ந்து தொடுதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக புகார் கொடுக்க பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் தண்டணைகள் கடுமையாக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 3 ம் தேதி பாலியல் துன்புறுத்தல்களில் சிக்கும் குழந்தைகளுக்கான நிவாரண நிதியை தமிழக அரசு உயர்த்தியது. நிவாரண உதவிகளை உயர்த்துவது ஒருபுறம் இருந்தாலும், பெண் குழந்தைகள் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியள்ளனர்.
– சாகுல் ஹமீது