120 கோடி வரை மோசடி! ஐங்கரன் கருணாமூர்த்தி மீது லைகா நிறுவனம் புகார்… : ரூ.10 கோடி கொடுத்ததாக ஞானவேல்ராஜா புகாருக்கு கமல்ஹாசன் மறுப்பு

திரைப்பட தயாரிப்பில் 120 கோடி ரூபாய் வரை மோசடியும், 60 கோடி ரூபாய் வரை இழப்பும் ஏற்படுத்தியதாக ஐங்கரன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் உரிமையாளர் கருணா மூர்த்தி மீது காவல்துறையிடம் லைகா நிறுவனம் புகார் அளித்துள்ளது.
தமிழ் திரைப்பட உலகில் பல முன்னணி கதாநாயகர்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாரித்த நிறுவனம் லைகா. இந்த நிறுவனத்தின் ஆலோசகராக இலங்கை தமிழரான கருணா மூர்த்தி செயல்பட்டார்.
லைகா நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கருணாமூர்த்தி மீது அந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் லைகா ஆலோசகராக கடந்த 2013ம் ஆண்டு முதல் இருந்து வந்த கருணாமூர்த்தி, தன்னிச்சையாக செயல்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், படத் தயாரிப்பு, நிதி நிர்வாகங்களில் தலையிட்டு பண மோசடி செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லைகா தயாரிப்பில் விஜய் நடித்த கத்தி மற்றும் கோலமாவு கோகிலா போன்ற படங்களின் வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் உரிமை போன்றவற்றை அனுமதியில்லாமல் தனது ஐங்கரன் நிறுவனம் மூலம் விற்று 90 கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பதாகவும் புகாரில் லைகா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை கருணாமூர்த்தி தன்னிச்சையாக செயல்பட்டு தயாரித்து பெரும் இழப்பை ஏற்படுத்தியதாகவும், அவ்வாறே கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 படத்தை அனுமதியில்லாமல் தயாரித்து பெரும் இழப்பை ஏற்படுத்தியதால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறாக 120 கோடி ரூபாய் வரை பல்வேறு வகையில் கையாடலும், 60 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பும் ஏற்படுத்திய கருணாமூர்த்தி மீதும், உடந்தையாக இருந்த ஊழியர் பானு என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் லைகா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
பணமோசடி தொடர்பாக தம் மீது லைகா நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றவை என ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவன இயக்குநர் கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைகா நிறுவனத்தின் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் சுபாஷ்கரன் மற்றும் லண்டன் அலுவலகங்களைச் சார்ந்தே நடைபெறும் என்றும், தனக்கு 1,000 ரூபாய்க்குக் கூட காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளார். அப்படி இருக்கும் பட்சத்தில், தாம் எப்படி கட்டுமான நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய் கொடுத்திருக்க முடியும் என்று கருணாமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
எமன் மற்றும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களின் மொத்த தயாரிப்புச் செலவே 10 கோடி ரூபாய்க்கும் குறைவு தான் என்ற நிலையில், வெளிநாட்டு உரிமையை எப்படி 95 கோடி ரூபாய்க்கு விற்றிருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
லைகா என்ற பெயரால் நிறுத்தி வைக்குமளவுக்குப் பிரச்சனையான விஜய் நடித்த கத்தி திரைப்படம் தன்னுடைய முயற்சியால் தான் நல்லவிதமாக வெளிவந்து பெரிய வெற்றி பெற்றதாகவும் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வந்தா ராஜாவா தான் வருவேன் மற்றும் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களை சுபாஷ்கரனுக்கு தெரியாமல் தாம் தொடங்கி நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள கருணாமூர்த்தி, இந்தியன் 2 பட பூஜையில் சுபாஷ்கரண் பங்கேற்றது தற்செயலா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
லைகாவின் நட்டங்கள் அனைத்தையும் தனது தலையில் கட்டப் பார்த்ததால்தான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறியதாகவும் கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதேபோல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகரும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.
அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு அவர் தன்னை அணுகியதாகவும், தனது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கமல்ஹாசன் பெற்றதாகவும், நான்கு ஆண்டுகள் ஆகியும் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் ஞானவேல் ராஜா புகாருக்கு கமல்ஹாசன் சார்பில் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதில், ஞானவேல்ராஜாவிடம் இருந்து கமல்ஹாசன் 10 கோடி ரூபாயை பெறவில்லை என்றும், தவறான தகவலை ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஞானவேல் ராஜா புகார் தெரிவித்த 10 நாட்களில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் இது தொடர்பாக கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது ஞானவேல்ராஜாவின் திருப்பதி பிலிம்சுடனான ஒப்பந்தப்படி 2015 ம் ஆண்டு மே மாதம் 2 வது வாரத்தில் கதை விவாதத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டநிலையில் அதை ஞானவேல்ராஜா தரப்பினர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கமல்ஹாசன் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் அவதூறான தகவலை வெளியிட்டவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக ராஜ்கமல் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது, உத்தமவில்லன் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு அந்தப்படத்தை வெளியிட ஞானவேல்ராஜா பணம் கொடுத்ததாகவும், இப்போது லிங்குசாமியிடம் பணம் இல்லாததால் அந்தப்படத்தின் நாயகன் கமல்ஹாசனிடம் கொடுத்ததாக கூறி கமலின் கால்ஷீட் வாங்கப் பார்க்கிறார் என்றார்கள்.
உத்தமவில்லன் படப்பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும், அப்பிரச்சனை வெளியே வந்ததே துரதிருஷ்டம் என்றும் ஞானவேல்ராஜா தெரிவித்தார்.