கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்பவர்கள் மீது பொய் வழக்கு
இந்திய அரசியல் சாசன 73-வது சட்டத் திருத்ததின் அடிப்படையில் ஒரு ஊராட்சியின் வாக்காளர்கள் அனைவருமே கிராம சபையின் உறுப்பினர்கள் ஆவர். இவர்களுக்குக் கிராம சபையில் தங்கள் கிராமத்துப் பிரச்னைகள் குறித்துப் பேசவும், கேள்வி கேட்கவும், அதுதொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றவும் உரிமை உண்டு. ஆனால், இந்தச் சட்ட உரிமையைக் காலில் போட்டு மிதித்த ஊரக வளர்ச்சித் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, கைது செய்திருக்கிறார்கள்.
என்ன நடந்தது என்று அத்திப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அருளிடம் பேசினோம். “ஆகஸ்ட் 15-ம் தேதி அத்திப்பாடி கிராமத்துக்கு உட்பட்ட வேலவன் நகரில் கிராம சபைக் கூட்டம் ஊத்தங்கரை பி.டி.ஓ ஹேமலதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ‘எங்கள் கிராமம் வழியாக எட்டுவழிச் சாலை அமைக்கக் கூடாது என்று தீர்மானம் போடவேண்டும்’ என்று கேட்டோம். ‘இது அரசுக்கு எதிரான தீர்மானம், எழுத முடியாது’ என்றார் பி.டி.ஓ. நாங்கள், ‘இது அரசுக்கு எதிரானது அல்ல. பொதுமக்களின் கோரிக்கை’ என்றோம். உடனே பி.டி.ஓ, மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு வருவதாகக் கூறிவிட்டு, பாதியிலேயே கிளம்பிவிட்டார். அவர் வருவார் என்று காத்திருந்தால் போலீஸார் கும்பலாக வந்து, எங்கள் எல்லோரையும் மிரட்டி அனுப்பினார்கள்.
அன்று எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. கலெக்டர் ஆபீஸில் இதுகுறித்து கேட்டதற்கு, ‘போதுமான எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்ளாததால் வேலவன் நகரில் கிராமசபை கூட்டம் நடைபெறவில்லை’ என்றனர். ஆனால், நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களிடம் கையெழுத்து வாங்கி வேலவன் நகரில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார்கள். தொடர்ந்து ஆகஸ்ட் 17-ம் தேதி சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் எங்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வழக்குக்கு எதிராக நாங்கள் உயர் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கிவிட்டோம். மீண்டும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அத்திப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எலவம்பாடி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. இங்கு கூட்டம் தொடங்கும் முன்பாகவே போலீஸாரைக் குவித்துவிட்டார்கள். அப்போதும் நாங்கள் ‘எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்’ என்று கேட்டோம். அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். ‘ஜனநாயக உரிமையின் அடிப்படையில் எங்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்கிறோம். ஆனால், நீங்கள் அதை ஏன் அரசுக்கு எதிரானதாகத் தவறாகப் புரிந்துகொள்கிறீர்கள்?’ என்று கேட்டோம். அப்போதும் பி.டி.ஓ பாதியில் கிளம்பிச் சென்றுவிட்டார்.
இதன் பிறகு அன்றைய தினமே சிறுவர்கள் உட்பட எங்கள் கிராம மக்கள் 17 பேர் மீது, பி.டி.ஓ-வுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை எங்கள் கிராமத்துக்கு வந்த போலீஸார், மூன்று பேரை மட்டும் கைதுசெய்தனர்.
இது குறித்து நாங்கள் ஊத்தங்கரை சென்று நீதிபதியிடம், ‘கிராம சபைக் கூட்டத்தில் பேசியதற்காக பொய்வழக்குப் போட்டிருக்கின்றனர்’ என்று புகார் கொடுத்தோம். மூன்று பேரையும் மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களை நீதிபதி ஜாமீனில் விடுவித்து விட்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தோம். அவரும், ‘எட்டு வழிச்சாலை குறித்து ஏன் ஃபேஸ்புக்கில் பதிவு செய்கிறீர்கள்’ என்று கேட்டார். இதிலிருந்து அரசு அதிகாரிகள் மொத்தமாகவே ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார்கள் என்பது புரிகிறது. சட்டப்படி பார்த்தால் நாங்கள் வைத்த தீர்மானத்தை நிறைவேற்றாத அதிகாரிகள் மீதும் எங்கள் மீது பொய் வழக்குப் போட்டுக் கைது செய்த காவல் துறையினர் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்றார்.
இதேபோல சேலம் மாவட்டத்தில் கிராம சபையில் கேள்வி கேட்டவர்கள் மீதும் போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். உள்ளாட்சி உங்களாட்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் கூறும்போது, “இதுதொடர்பாக என்ன நடந்தது என்பதை அறிய உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என்றார். மாவட்ட எஸ்.பி-யான மகேஷ்குமாரிடம் கேட்டபோது, “கிராம மக்கள் சிலர் அதிகாரிகள் பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அதிகாரிகளை அசிங்கமாகப் பேசினார்கள். எனவே, அதிகாரிகள் கொடுத்த புகார் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டது” என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், “பிடிஓ-வின் காரை வழி மறித்துச் சட்டத்தை மீறி நடந்து கொண்டுள்ளனர். அதனால்தான் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுவர்கள் மீதெல்லாம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் வந்துள்ளது. அதைக் கவனிக்குமாறு மாவட்ட எஸ்.பி-யிடம் அறிவுறுத்தியுள்ளேன்” என்றார்.
ஊராட்சிகளின் ஆய்வாளரான மாவட்ட கலெக்டருக்கும் மாவட்ட போலீஸ் உயரதிகாரிகளுக்கு முதலில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் தொடர்பான சட்டங்கள் குறித்து முதலில் பயிற்சி அளிக்க வேண்டும்!
-டூயட்பாபு