அரசியல்

அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் ஒதுக்கீடுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், சுமார் 300க்கும் மேற்பட்ட 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் பலனடைவார்கள் என தெரிகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க நவம்பர் 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வருகிற 16ஆம் தேதி வெளியிடப்படும். இணையதள முகவரியில் மருத்துவ கலந்தாய்விற்கான தேதிகள் அறிவிக்கப்படும். மருத்துவ கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டில் மாணவர்கள் தனி விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, “6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் நவம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்கள் விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை தர வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களை கையெப்பம் பெற்றுவர அலைக்கழிக்ககூடாது. மாணவர்கள் நலன்கருதி கால தாமதமின்றி படிப்பு சான்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.


இதனிடையே, கொரோனா, அரசு பள்ளி மாணவர்கலுக்கு உள் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றால் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற வேண்டிய மருத்துவக் கலந்தாய்வு, வருகிற 18ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரபீக்அஹமது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button