டிக் டாக் தோழியுடன் ஓட்டம்…?
காரைக்குடியில் டிக்டாக்கிற்கு அடிமையான நர்சு ஒருவர் திருமணமாகி சில மாதங்களில் 50 சவரன் நகை மற்றும் பணத்துடன் தனது டிக்டாக் தோழியுடன் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேவகோட்டையை சேர்ந்த வினிதாவுக்கும், சானாவூரணியை சேர்ந்த ஆரோக்கியலியோவுக்கும் கடந்த ஜனவரி மாதம் 17 ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் சிவகங்கையில் வீடு பார்த்து தனிக்குடித்தனம் சென்றனர். மார்ச் மாதம் ஆரோக்கிய லியோ சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
வீட்டில் தனிமையில் பொழுதை கழித்த வினிதா டிக்டாக்கில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த முனைப்பு காட்டியுள்ளார். அப்போது திருவாரூரை சேர்ந்த அபி என்பவர் இவருக்கு அறிமுகமாகி நெருங்கி பழகியுள்ளார். இருவரும் டிக்டாக்கில் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு நட்பு இருக்கமானதாக கூறப்படுகின்றது
சிங்கப்பூரில் இரவு பகலாக கண்விழித்து வேலைபார்த்து கணவர் ஆரோக்கிய லியோ பணம் அனுப்பி வைக்க, அந்த பணத்தை எடுத்துக் கொண்டு வினிதா, தனது டிக்டாக் தோழியான அபியுடன் வலம் வந்ததாக கூறப்படுகின்றது. அதனை இருவரும் டிக்டாக்கில் வீடியோவாகவும் பதிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 17ந்தேதி ஆரோக்கிய லியோ மனைவியை பார்க்கும் ஆசையில் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால் வினிதாவோ கணவரிடம் ஏன் வந்தார் என்பது போல நடந்து கொண்டுள்ளார். இதனால் அவருக்கு வினிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளது. செல்போனை எடுத்து பார்த்தால் தனது மனைவி, வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகளை பார்த்து மிரண்டு போனார்.
விசாரித்தால் அபி மீது தான் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாக வினிதா உருக, அரண்டு போன ஆரோக்கிய லியோ, வினிதாவை அவளது தாய் வீட்டிற்கு கூட்டிச்சென்று புத்திமதி சொல்ல கூறியுள்ளார். 19 ந்தேதி காலையில் இருந்து மாலை வரை குடும்பமே அமர்ந்து அபியை மறந்துவிடும்படி புத்திமதி கூறியுள்ளனர். அவர்களிடம் சரியென்று தலையாட்டிவிட்டு, அசந்த நேரம் பார்த்து, வினிதா வீட்டில் இருந்து மாயமானதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே தன்னுடைய நகை 25 சவரனை அடகு வைத்து செலவழித்துவிட்ட நிலையில், தனது அக்காள் நகை 25 சவரனையும் எடுத்துக் கொண்டு தனது உயிர் தோழி அபியை தேடி சென்றுவிட்டதாக வேதனை தெரிவிக்கிறார் வினிதாவின் தாய் அருள் ஜெய்ராணி.
இது குறித்து திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் மகள் மாயமானதாக புகார் அளித்தார் அருள் ஜெயராணி. புகாருடன், தோழி என்று கூறப்படும் அபி, வினிதாவுக்காக பதிவிட்ட டிக்டாக் வீடியோக்களையும் திருவேகம் பத்தூர் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கணவன் அணிவித்த தங்க தாலிசங்கிலியில் இருந்து 20 சவரன் நகைகளையும், ஊரில் இருந்து அனுப்பிய பணத்தையும், செலவழித்து டிக்டாக் தோழி அபிக்கு பரிசு பொருட்களாக அள்ளிக்கொடுத்துவிட்டு, தற்போது அவருடன் ஓட்டம் பிடித்த மனைவியால் நிம்மதியை இழந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கணவர் ஆரோக்கிய லியோ.
டிக்டாக் செயலி நாட்டுக்கு, வீட்டுக்கு மட்டுமல்ல தமிழ் பெண்களின் வாழ்வியலுக்கும் பெருந்தீங்காக வளர்ந்து நிற்கின்றது. தனிப்பட்ட ஒரு சிலர் மட்டுமே தங்கள் பாதிப்புகளை பகிரங்கப்படுத்துகின்றனர் பெரும்பாலானவர்கள் வெளியே சொல்லவே வெட்கம் கொள்கின்றனர் என்பதே கசப்பாண உண்மை..!
இந்த நிலையில் நகைகளுடன் தலைமறைவானதாகக் கூறப்படும் வினிதா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாலேயே தாம் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் நகைகள் எதையும் எடுத்து வரவில்லை என்றும் கூறியுள்ளார். தாம் டிக்டாக் தோழி அபியுடன் இல்லை என்றும் தனியே வசிப்பதாகவும் வீடியோவில் கூறும் வினிதா, அபிக்கு என்ன நேர்ந்தாலும் கணவர் ஆரோக்கியலியோவே காரணம் என்றும் கூறியுள்ளார்.
- சூரிகா