மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்த தனிஒருவர்..!
வடிவேலு படத்தில் வரும் காமெடி காட்சி போல மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்திருப்பதாக கூறி தனியாக ஒருவர் பேரூராட்சி அதிகாரியின் ஒப்புதலுடன் அடாவடியாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து வருகின்றார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றதற்கு செலவழித்த தொகையை வசூலிக்க மாவட்ட நிர்வாகம், மாமல்லபுரத்தையே தனியார் ஒப்பந்ததாரரின் கரங்களில் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு பிறகு மாமல்லபுரம் பெற்ற புகழை நேரில் காண, பணம் படைத்தவர்களும், ஏழை ஏளிய மக்களும் வார இறுதி நாட்களில் வரிசைகட்டி நிற்கின்றனர். அவர்களிடம் மாமல்லபுரம் ஊருக்குள் நுழைவதற்கும், வாகனத்தை குறிப்பிட்ட வாகன நிறுத்த இடங்களில் நிறுத்துவதற்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
இரு சக்கர வாகனத்திற்கு 25 ரூபாய் என்றும் கார்களுக்கு 75 ரூபாயும், வேன்களுக்கு 100 ரூபாயும் பேருந்துக்கு 125 ரூபாயும் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
ஒப்பந்ததாரர் வழங்கும் ரசீதில் தமிழக அரசின் உள்ளாட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்துறை ஒப்பந்ததாரர் ராஜ் திலக் என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பேரூராட்சியின் முத்திரை ஏதும் இல்லை.
மேலும் வாகனங்களில் ஏதாவது சேதம் ஏற்பட்டாலோ, பெட்ரோல் திருடப்பட்டாலோ, டயர்கள் பஞ்சராக்கப்பட்டாலோ அதற்கு உரிமையாளரே பொறுப்பு என்பதும், பார்க்கிங் ஓனர் ரிஸ்க் என்பதையும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த கட்டண வசூலில் 10 க்கும் மேற்பட்ட அடாவடி பேர்வழிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
மாமல்லபுரத்தில் மூன்று குறுகிய வாகனம் நிறுத்தும் இடங்களே உள்ள நிலையில், அங்கு வாகனங்களை ஒழுங்கு படுத்தி நிறுத்த எவரும் பணியில் இல்லை. அந்த இடத்திற்கு பதிலாக ஒட்டு மொத்த மாமல்லபுரத்தையே குத்தகைக்கு எடுத்தது போல் மாவட்ட நிர்வாகத்தின் பெயரை பயன்படுத்தி வாகன நிறுத்த கட்டணம் வசூலிப்பது பகல் கொள்ளைக்கு சமம் என்கின்றனர் சுற்றுலாபயணிகள்.
மேலும் ஐந்துரதம், கடற்கரை கோயில் பகுதிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உத்தரவை மீறி அங்கும் ஒரு நபரை நியமித்து வெளிமாநில சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் கட்டணம் என ஒப்பந்த விதிகள் அப்பட்டமாக மீறப்படுகிறது.
மாமல்லபுரத்துக்கே மொத்தமாக கட்டணம் செலுத்தி விட்டோமே என்ற நினைப்பில் கடற்கரை கோயில், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை, கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவதற்கு சென்றால் மத்திய அரசின் தொல்பொருள் துறை சார்பில் இந்தியர்களுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 600 ரூபாயும் கட்டணம் வசூலித்து அடுத்த அதிர்ச்சியை கொடுக்கின்றனர்.
மாமல்லபுரம் போன்ற சுற்றுலா தளங்களை பாதுகாக்கவும், தூய்மையாக பராமரிக்கவுமே இது போன்று கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், உரிய வாகன நிறுத்த இடம் இல்லை என்பதை கட்டணம் வசூலிக்க அனுமதித்த பேரூராட்சி செயல் அலுவலர் லதாவே பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக தலையிட்டு விதியை மீறி செயல்படும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு தேவையான வாகன நிறுத்த இடங்களை உருவாக்கிய பின்னர் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி நியாயமான கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
- நமது நிருபர்