மறுக்கப்பட்ட பாதை… பாலத்திலிருந்து இறக்கப்பட்ட சடலம்! – : வாணியம்பாடி அவலம்
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணபுரம் காலனிப் பகுதியில் சுடுகாட்டுக்குத் தேவையான போதிய இட வசதி இல்லை. இதுதொடர்பாக, அங்கு வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் அதிகாரிகளிடமும் முறையிட்டுள்ளனர். அரசு தரப்பில் கண்டுகொள்ளவில்லை.
இதனால், வேறுவழியின்றி பாலாற்றங்கரையில் உயிரிழந்தோரின் சடலங்களை எரியூட்டுகிறார்கள். இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றைக் கடப்பதற்காக அந்தப் பகுதியில் பாலம் கட்டப்பட்டது. அப்போதும், சிரமப்பட்டே பாலத்தை ஒட்டியுள்ள பாதையை சுடுகாட்டுக்குப் பயன்படுத்திவந்தனர்.
இதனிடையே, பாலத்தின் இருபுறங்களிலும் பல ஏக்கரில் விவசாய நிலங்களைச் சொந்தமாக வைத்திருக்கும் சிலர், பட்டியலின மக்கள் சடலங்களை தூக்கிச் செல்வதை விரும்பாமல் பாலாற்றங்கரையில் உள்ள சுடுகாட்டுப் பாதையை வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பாதை அடைக்கப்பட்டதால் பட்டியலின சமூக மக்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த நிலையில்,விபத்தில் உயிரிழந்த நாராயணபுரம் காலனியைச் சேர்ந்த குப்பன் (55) என்பவரின் உடலை எரியூட்டுவதற்காக பாலாற்றங்கரைக்கு சுமந்து சென்றனர். விவசாய நிலத்தின் உரிமையாளர்களிடம் வழி கேட்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் வழிவிடவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, வேறு வழியின்றி சுமார் 20 அடி உயரமுள்ள பாலத்தின் உச்சியிலிருந்து சடலம் இருந்த பாடையை கயிறுகட்டி பாலாற்றுக்குள் இறக்கினர். தயாராக ஆற்றுக்குள் இருந்த சிலர் பாடையைப் பத்திரமாக பிடித்துச் சுமந்து சென்று தகனம் செய்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள், தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி அதிகாரிகள் கவனத்தை ஈர்த்தது. இதையறிந்த, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவின் பேரில், வட்டாசியர் முருகன், துணை கண்காணிப்பாளர் முரளி மற்றும் வருவாய்த்துறையினர், நாராயணபுரம் சென்று மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
அப்போது, இடுகாட்டுக்காக, வேறொரு இடத்தில் 50 செண்ட் நிலம் ஒதுக்கி இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், 20 ஆண்டு பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு கண்டதற்காக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், சம்பவம் குறித்து பதிலளிக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.